Published : 09 Jun 2023 07:53 AM
Last Updated : 09 Jun 2023 07:53 AM

டிஎன்பிஎல் தொடருக்கு முழுவீச்சில் தயாராகும் மதுரை பேந்தர்ஸ்

முருகன் அஸ்வின், கவுதம் மற்றும் ஹரி நிஷாந்த்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டிஎன்பிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 7-வது சீசன் போட்டிகள் வரும் 12-ம் தேதி தொடங்கி ஜூலை 12-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் பால்சி திருச்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் மற்றும் சீகம் மதுரை பேந்தர்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்துகொள்கின்றன.

இந்த சீசனுக்காக சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியினர் பாண்டிச்சேரியில் கடந்த சில வாரங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர். பயிற்சியின் இடையே வீரர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சந்திப்பின் போது அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்ய தகவல்கள் இதோ...

முருகன் அஸ்வின் (சுழற்பந்து வீச்சாளர்): டிஎன்பிஎல் தொடரில் விளையாடுவது ஐபிஎல் தொடரில் விளையாடுவது போல சவால் நிறைந்ததாக உள்ளது. 8 அணிகள் விளையாடுகின்றன. தமிழ்நாடு அளவில் திறன் படைத்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம் அவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்துகிறார்கள். இது அவர்களுக்கு கிடைத்த வாய்ப்பாகும். இதற்கு அடுத்தபடியாக ஐபிஎல் கிரிக்கெட் உள்ளது. இங்கிருந்து அவர்கள் அங்கு செல்லவும் முடியும்.

மாநில அளவில் நடைபெறும் கிரிக்கெட் தொடராக டிஎன்பிஎல் உள்ளது. உள்ளூர் வீரர்கள் டி20கிரிக்கெட் வடிவம் குறித்து ஆழமாக கற்றுக் கொள்ளலாம். அது விளையாட்டு சார்ந்து, தொழில்முறை சார்ந்து என சொல்லலாம். டி 20 கிரிக்கெட் ஸ்பெஷலிஸ்ட்டாக மாறுவதற்கு தொழில்முறை கிரிக்கெட் ஒரு வகையில் உதவும்.

மக்கள் மத்தியில் டிஎன்பிஎல் கிரிக்கெட் இப்போது 2 மாவட்டங்களில் இருந்து 4 மாவட்டங்களை எட்டியுள்ளது. இதுதான் டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் நோக்கம். போட்டிகளை பார்க்க மக்கள் ஆர்வம் செலுத்துகின்றனர். இதன் மூலம் கிரிக்கெட் ஆர்வம் அதிகரிக்கிறது. கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்ப்பதற்கும், நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. அந்த அனுபவத்தை பெற ரசிகர்கள் மைதானத்திற்கு வருகின்றனர்.

டி20 கிரிக்கெட்டில் இம்பேக்ட் பிளேயர் விதி மூலம் ஒரு அணியில் 12 வீரர்கள் விளையாட முடிகிறது. இதன் மூலம் அணியில் உள்ள மற்றொரு வீரருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆட்டத்தில் போட்டி மனப்பான்மையை மேலும் அதிகரிக்க செய்கிறது. அணி சேர்க்கைக்கு பெரிதும் உதவுகிறது.

ஹரி நிஷாந்த் (தொடக்க பேட்ஸ்மேன்): நான் கோயம்புத்தூரை சேர்ந்தவன். எனக்கான தொடக்கப்புள்ளி டிஎன்பிஎல். இங்கு ஆடியதன் மூலம் சையத் முஷ்டாக் அலி தொடரில் தமிழக அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. கிரிக்கெட் விளையாடும் ஆர்வம் கொண்டவர்கள் இந்த லீக் விளையாடுவது நல்ல வாய்ப்பாக இருக்கும். இந்த லீக், தமிழ்நாட்டில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் பாதையை மாற்றியுள்ளது என நினைக்கிறேன். இது மாவட்ட அளவில் இயங்கி வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறப்பான மேடையாக உள்ளது. இங்கு சிறப்பாக செயல்படுவதன் மூலம் மாநில அணி, ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடலாம். அதற்கு நடராஜன் சிறந்த உதாரணம். இங்கிருந்து வந்தவர் இந்திய அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடி உள்ளார். அது மிகப்பெரிய விஷயம். இது அனைத்திற்கும் டிஎன்பிஎல் தான் அடிப்படை.

இம்பேக்ட் பிளேயர் விதி கிட்டத்தட்ட கால்பந்தில் மாற்று வீரரை பயன்படுத்துவது போல தான். என்ன இதில் கூடுதலாக ஒரு வீரருக்கும் விளையாடும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஆல்-ரவுண்டர்களுக்கு பாதகம் உள்ளது. ஆனால், அணிக்காக அதை செய்ய வேண்டி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி உடனான இரண்டு ஆண்டு கால அனுபவம் சிறப்பாக இருந்தது. அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். ஒரு வீரர் தன்னை நிர்வகித்துக் கொள்வது, தலைமை பண்பு, நம்மை நாம் வெளிப்படுத்தும் விதம் என நிறைய உள்ளது. தோனி அனைத்து விஷயத்தையும் எளிதாக செய்ய விரும்புவார். அடிப்படைகளை கடைபிடிப்பார். அதை மற்றவர்கள் மறந்து விடுவார்கள். அதை நமக்கு எடுத்து கொடுத்து உதவுவார். இது கிரிக்கெட் விளையாட்டு சார்ந்தும், அதற்கு வெளியிலும் அடங்கும்.

கவுதம் (இடது கை வேகப்பந்து வீச்சாளர்): நான் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவன். இதற்கு முன் இரண்டு சீசன் விளையாடி உள்ளேன். மதுரை பேந்தர்ஸ் அணியுடன் தான் எனது பயணம் உள்ளது. இரண்டு சீசனிலும் என்னால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. இருந்தாலும் என் மீது நம்பிக்கை வைத்து இந்த சீசனுக்கு தக்க வைத்துள்ளனர்.

நான் டென்னிஸ் பால் கிரிக்கெட் தான் விளையாட ஆரம்பித்தேன். நடராஜன் தான் எனது இன்ஸ்பிரேஷன். அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடினார்.பிறகு எங்கள் ஊரில் அகாடமி ஆரம்பித்தார். அங்கு வந்து பயிற்சி செய்யும்படி சொன்னார். அவர் கொடுத்த நம்பிக்கை தான் இங்கு நான் வர காரணம்.

கிரிக்கெட் விளையாட்டு சார்ந்து நிறைய சொல்லிக் கொடுத்துள்ளார். போகும் இடத்தில் ஒழுக்கம் மிகவும் அவசியம் என்பார். என்னை போல கிரிக்கெட் ஆர்வம் கொண்டவர்கள் அவர்கள் வசிக்கும் ஊரில் உள்ள அகாடமியில் சேரலாம். அங்கிருந்து மாவட்ட அணிக்கு விளையாட வந்தால் அடுத்தவிஷயங்கள்தானாக நடக்கும். இந்த சீசனில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்.

மதுரை பாந்தர்ஸ் அணியின் சி.ஓ.ஓ (தலைமை ஆப்பரேட்டிங் ஆபிசர்) மகேஷ்: டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் தொடக்கப்புள்ளி என்.சீனிவாசன் தான். ரஞ்சிக் கோப்பை போன்ற மாநில அளவிலான தொடர்களில் விளையாடும் வாய்ப்பு 15 வீரர்களுக்கு தான் கிடைக்கும். ஆனால், இதில் 8 அணிகள் உள்ளன. சுமார் 160 வீரர்களுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம் இளம் வீரர்களுக்கு ஐபிஎல் போன்ற போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகிடைக்கும். இதை இந்திய கிரிக்கெட் அணிக்கு கொண்டு செல்லும்ஷார்ட்கட் என்று சொல்லலாம். டி20 கிரிக்கெட்டில் வீரர்கள் தங்களது இருப்பை தக்க வைக்க சில புதிய ஆட்ட நுணுக்கங்களை செய்ய வேண்டி உள்ளது. அதற்கான டிமாண்ட் டி20 வடிவ கிரிக்கெட்டில் உள்ளது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் பார்வையாளர்கள் மத்தியிலும் வரவேற்பு பெற்றுள்ளது. போட்டிகள் அனைத்தும் மாவட்டங்களில் நடத்தப்படுகின்றன. வரும் நாட்களில் டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் அணிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கு காரணம் இதன் பிராண்டிங் என நான் நினைக்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x