Last Updated : 06 Oct, 2017 09:13 AM

 

Published : 06 Oct 2017 09:13 AM
Last Updated : 06 Oct 2017 09:13 AM

பிபா யு - 17 உலகக் கோப்பை கால்பந்து தொடர் இன்று தொடக்கம் அமெரிக்காவை சமாளிக்குமா இளம் இந்திய படை: போட்டியை நேரில் கண்டுகளிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி, தொடக்க நாளில் ரசிகர்களுக்கு விருந்தாக 4 ஆட்டங்கள் நடைபெறுகிறது

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘ஏ’ பிரிவில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் வலிமையான அமெரிக்க அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.

17 வயதிற்குட்பட்டோருக்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் இன்று தொடங்குகிறது. முதல் முறையாக இந்தியாவில் நடைபெறும் இந்த கால்பந்து திருவிழா வரும் 28-ம் தேதி வரை கொல்கத்தா, கொச்சி, டெல்லி, நவி மும்பை, குவாஹாட்டி, மர்கோவா ஆகிய 6 நகரங்களில் நடைபெறுகின்றன.

கால்பந்து வரலாற்றில் பிபா நடத்தும் எந்த ஒரு வயது பிரிவுக்கான உலகக் கோப்பையிலும் இந்தியா களமிறங்குவது இதுவே முதன்முறை. போட்டியை நடத்தும் நாடான இந்தியாவுடன், ஈரான், அமெரிக்கா உட்பட 24 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.

லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணி, தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். இந்த அணிகளுடன் 6 பிரிவில் இருந்தும் சிறப்பாக விளையாடி 3-வது இடத்தை பிடிக்கும் 4 அணிகளும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

நாக் அவுட் சுற்றில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டு கால் இறுதிக்கு தகுதி பெற பலப்பரீட்சை நடத்தும். நாக்-அவுட் சுற்று போட்டிகள் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறுகின்றன. கால் இறுதி ஆட்டங்கள் 21 மற்றும் 22-ம் தேதிகளிலும், அரை இறுதி ஆட்டங்கள் 25-ம் தேதியும் நடைபெற உள்ளன. இறுதி போட்டி அக்டோபர் 28-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

இந்த இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இதில் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக அமெரிக்கா கருதப்படுகிறது. அந்த அணியின் வீரர்கள் பலரும் உள்ளூர் கிளப்புகளிலும் ஐரோப்பிய கிளப்புகளிலும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடி வருகின்றனர். 6 ஆண்டுகளுக்கு மேல் அகாடமிகளில் பயிற்சி பெற்று, மூத்த வீரர்களுடன் விளையாடி உள்ள அனுபவம் அந்த வீரர்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும்.

அதே நேரத்தில் போட்டியை நடத்தும் நாடு என்பதால், தகுதிச் சுற்றில் ஆடாமலேயே இந்திய அணி நேரடியாக இந்த உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக ஆடுவதால் போதிய அனுபவம் இல்லாமல் இருப்பது அணியின் முதல் குறையாக உள்ளது. மேலும் இப்போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் அனைவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் ஒரு அணியாக இணைந்துள்ளனர் என்பதால் எந்த அளவுக்கு ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு கூட்டாக செயல்பட முடியும் என்ற கேள்வியும் உள்ளது.

இருப்பினும் சொந்த ஊரில் நடக்கும் போட்டியில் இந்திய வீரர்கள் தன்னம்பிக்கையுடன் விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்கிறார் தலைமை பயிற்சியாளர் லூயிஸ் நார்டன் டி மாடோஸ். இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளராக கடந்த மார்ச் மாதம் பொறுப்பேற்ற டி மாடோஸ், குறுகிய காலத்திலேயே ஒரு சிறந்த அணியை உருவாக்கியுள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிக சிரத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு தீவிர பயிற்சி அளித்தும், வெளிநாட்டு கிளப்புகளுடன் ஆடவைத்தும் அவர்களின் திறமைகளை மெருகூட்டியுள்ளார்.

இன்றைய போட்டி குறித்து நிருபர்களிடம் கூறியுள்ள டி மாட்டோஸ், “அமெரிக்க வீரர்கள் தீவிரமான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களைச் சமாளிக்க நமது அணி தற்காப்பு ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தும். இந்திய அணியின் தற்காப்பு வீரர்கள் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறார்கள். அதே நேரத்தில் எதிரணி அசந்த நேரத்தில் கோல்களை அடிக்கும் ஆற்றலும் நம் வீரர்களுக்கு உண்டு. அதனால் அதிசயங்களை எதிர்பார்க்கலாம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்றைய போட்டியில் இந்திய அணியின் கோல் கீப்பராக தீரஜ் சிங்கை களமிறக்க டி மாட்டோஸ் திட்டமிட்டுள்ளார். இந்திய அணியின் தற்காப்பு ஆட்டம் 6 அடி 2 அங்குல உயரமுள்ள ஜாக்சன் சிங்கையே மிகவும் நம்பியுள்ளது. அவருக்கு துணையாக அன்வர் அலி, ஜிதேந்திரா சிங் ஆகியோர் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைதானத்தில் நடுக்களத்தில், அமெரிக்காவை சமாளிக்கும் பொறுப்பை கேப்டன் அமர்ஜித்தும், சுரேஷ் சிங்கும் ஏற்கவுள்ளனர்.

கோல் அடிப்பதற்கு இந்திய அணி கோமல் தாட்டல், அனிகெட் ஜாதவ் ஆகியோரையே பெருமளவில் நம்பியுள்ளது. இதில் கோமல் தாட்டல் கடந்த ஆண்டு பிரேசில் அணிக்கு எதிராக நடந்த கால்பந்து போட்டியில் சிறப்பாக ஆடி கோல் அடித்துள்ளார். அதனால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 15-வது முறையாக பங்கேற்கும் அமெரிக்க அணி, இம்முறை எப்படியும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவுடன் உள்ளது. அந்த அணியின் கேப்டனான ஜோஷ் சர்ஜண்ட், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடி சாதனை படைத்தவர். அவரும் மற்றொரு முன்னணி வீரரான டின் வேஹும் சேர்ந்து நடத்தும் தாக்குதல்களில் கோல் மழை பொழியும் என்று அமெரிக்க அணி நம்புகிறது.

அதே நேரத்தில் தங்களை விட பலம் குறைந்தவர்களாக கருதப்படும் இந்திய அணியை குறைவாக மதிப்பிட அமெரிக்க அணியின் பயிற்சியாளர் ஜான் ஹாக்வொர்த் தயாராக இல்லை. இன்றைய போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “இந்திய அணிக்கு எதிராக ஒருமுறை ஆடியுள்ள நாங்கள் அதில் வெற்றி பெற்றுள்ளோம். இருப்பினும் இந்திய அணியை குறைத்து மதிப்பிட மாட்டோம். தங்கள் சொந்த மண்ணில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் வெற்றிபெற இந்திய அணி கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த போட்டி எங்களுக்கு நிச்சயம் சவால் நிறைந்ததாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இந்தியா மோதும் இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு டெல்லி நேரு விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. முன்னதாக மாலை 5 மணிக்கு இதே மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான கானா, கொலம்பியாவை எதிர்த்து விளையாடுகிறது. இதே நேரத்தில் 2-வது ஆட்டமாக மும்பையில் நியூஸிலாந்து - துருக்கி பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடக்க நாளில் கடைசி ஆட்டமாக பராகுவே - மாலி அணிகள் மோதுகின்றன. இந்தியா-அமெரிக்கா மோதும் ஆடடத்தை பிரதமர் நரேந்திர மோடி, பிபா பொதுச் செயலாளர் சமோரா, போட்டி அமைப்புக்குழு தலைவர் ஜெமி யார்ஸா ஆகியோர் நேரில் கண்டுகளிக்க உள்ளனர். இதையொட்டி சிறிய அளவிலான தொடக்க விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x