Last Updated : 01 Oct, 2017 11:13 AM

 

Published : 01 Oct 2017 11:13 AM
Last Updated : 01 Oct 2017 11:13 AM

அணியில் தேர்வு செய்யாமல் தொடர்ந்து புறக்கணிப்பு: விரக்தியில் மைதானத்திலேயே பாக்.வீரர் தற்கொலை முயற்சி

அணியில் தேர்வு செய்ய மறுத்ததாலும், லஞ்சம் கேட்டதாலும் இளம் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஒருவர் மைதானத்திலேயே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பாகியுள்ளது.

குலாம் ஹைதர் அப்பாஸ் என்ற வலது கை வேகப்பந்து வீச்சாளர் லாகூர் நகர கிரிக்கெட் சங்க மைதானத்துக்குள் புகுந்து முதல் தர கிரிக்கெட் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது தன் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாகச் செயல்பட்டு அவரைத் தடுத்தனர், பிறகு லாகூர் நகர கிரிக்கெட் சங்க அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தினர்.

லாகூர் சங்கத்தின் கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் குலாம் ஹைதர் அப்பாஸ், அவர் கிரிக்கெட் அதிகாரிகள் தனக்கு ஏகப்பட்ட பொய் வாக்குறுதிகளை அளித்ததாகவும் லாகூர் அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்றும் வாக்குறுதி அளித்து ஏமாற்றி வருவதாகத் தெரிவித்தார்.

“நான் கிளப் மற்றும் மண்டல மட்டத்தில் நன்றாக ஆடி வருகிறேன், நான் ஏழ்மையான பின்னணியிலிருந்து வருவதால் தொடர்ந்து என்னை புறக்கணித்து வருகின்றனர்.

பிறகு நான் லாகூர் அணிக்கு ஆட வேண்டுமென்றால் பணம் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். அதனால் விரக்தியடைந்தேன், மனமுடைந்த நிலையில் என் வாழ்க்கையை மைதானத்திலேயே முடித்துக் கொள்ள இங்கு வந்தேன்” என்றார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது புகார்களை பரிசீலிக்கவில்லையெனில் கடாஃப் மைதான வாயிலில் தீக்குளிப்பேன் என்று மேலும் அச்சுறுத்தியுள்ளார்.

நான் அப்படி இறந்தால் அதற்கு லாகூர் நகர கிரிக்கெட் சங்க அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் தகுதியின் அடிப்படையில் இவர்கள் வீரர்களைத் தேர்வு செய்வதில்லை, என்றார் குலாம் ஹைதர்.

இதனால் லாகூர் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x