Published : 03 Jun 2023 04:23 PM
Last Updated : 03 Jun 2023 04:23 PM

22 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 205 ரன்கள்! - ஆலி போப் எழுச்சியும், போத்தம் சாதனை முறியடிப்பும்!

லண்டன்: லார்ட்ஸில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பென் டக்கெட் (182), ஆலி போப் (205) அதிரடி கூட்டணி அமைத்து 252 ரன்களைச் சேர்க்க, ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் விளாசி இங்கிலாந்து 524/4 என்று டிக்ளேர் செய்தது. அயர்லாந்து பெரிய இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகின்றது.

ஆலி போப் 208 பந்துகளில் 22 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 205 ரன்களை விளாசினார். மெக்கல்லம் வந்த பிறகே இங்கிலாந்தின் அதிரடி அணுகுமுறையில் பெரிய பயனடைந்து இன்று உலகின் பெரிய பேட்டராக விளங்குபவர் ஆலி போப். அவரது டெஸ்ட் ஸ்ட்ரைக் ரேட்டும் எங்கிருந்தோ மேலேறி வந்து 60-க்கும் மேல் சென்று விட்டது. இந்த இன்னிங்ஸில் சில பல சாதனைகள் உடைந்தன. அவை என்னவென்று பார்ப்போம்:

207 பந்துகளில் ஆலி போப் 200 ரன்களை எட்டினார். இது இங்கிலாந்தில் அதிவேக இரட்டைச் சதமாகும். ஓவலில் இந்தியாவுக்கு எதிராக போத்தம் எடுத்த இரட்டைச் சதம் 220 பந்துகளில் வந்தது, இதை உடைத்தார் ஆலி போப். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவில் 163 பந்துகளில் இரட்டைச் சதம் விளாசினார் பென் ஸ்டோக்ஸ். அதுதான் இங்கிலாந்தின் அதிவேக இரட்டைச் சதம். இப்போது அடுத்த வேக இரட்டைச் சதத்தை எடுத்துள்ளார் ஆலி போப். அதே போல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பதிவான 7வது அதிவேக இரட்டைச் சதம் ஆலிப் போப்பினுடையது.

ஜோ ரூட் 59 பந்துகளில் 56 ரன்கள் விளாசினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 11004 ரன்கள் மைல்கல்லை எட்டினார். 11,000 டெஸ்ட் ரன்களை எடுத்த 7வது வீரர் ஜோ ரூட். 11,000 ரன்கள் மைல்கல்லை எட்டிய இரண்டாவது இங்கிலாந்து வீரர் ரூட். 10 ஆண்டுகள் 171 நாட்களில் இந்த மைல்கல்லை ஜோ ரூட் எட்டினார். அலிஸ்டர் குக் இதே மைல்க்கல்லை எட்ட 10 ஆண்டுகள் 290 நாட்கள் தேவைபப்ட்டது.

பென் டக்கெட் 150 பந்துகளில் 150 ரன்களை விளாசினார். இதற்கு முன் டான் பிராட்மேன் இங்கிலாந்தில் 166 பந்துகளில் 150 ரன்கள் எடுத்ததே வேகமான 150 ரன்களாக இருந்தது. மாறாக ஆலி போப் 166 பந்துகளில் 150 ரன்கள் எடுத்த போது டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்தார். ஆலி போப் சேவாக் போல் சிக்சருடன் இரட்டைச் சதம் விளாசினார். இதற்கு முன்பாக ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக 196 ரன்களிலிருந்து சிக்சர் மூலம் இரட்டைச் சதம் விளாசினார்.

பென் டக்கெட்-ஆலி போப் கூட்டணி 252 ரன்களைச் சேர்த்தது 2015-க்குப் பிறகு லார்ட்ஸில் அமைந்த இரட்டைச் சத கூட்டணி ரன்களாகும். மேலும் இந்த 252 ரன்கள் கூட்டனி லார்ட்ஸில் 13வது அதிகபட்ச கூட்டணி ரன்களாகும்.

இங்கிலாந்து 524 ரன்களை ஓவருக்கு 6.33 என்ற ரன் விகிதத்தில் ஒருநாள் போட்டி போல் எடுத்துள்ளது. 500 ரன்களுக்கும் கூடுதலாக எடுக்கும் பட்சத்தில் இது 2வது அதிக ரன் விகிதமாகும். ராவல் பிண்டியில் இதே இங்கிலாந்து சமீபத்தில் 6.5 என்ற ரன் விகிதத்தில் ஒரே நாளில் 500க்கும் மேல் ரன்கள் எடுத்தது ஆகச்சிறந்த ரன் ரேட் ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x