Published : 02 Jun 2023 12:01 PM
Last Updated : 02 Jun 2023 12:01 PM

ஆடவர் ஹாக்கி ஜூனியர் ஆசியக் கோப்பை | பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றது இந்தியா

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி

சலாலா (ஓமன்): ஆடவர் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் ஓமன் நாட்டிலுள்ள சலாலா நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி உள்ளது இந்திய அணி. 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வாகை சூடியுள்ளது.

‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தாய்லாந்து, சீன தைபே அணிகளும், ‘பி’ பிரிவில் மலேசியா, தென் கொரியா,வங்கதேசம், ஓமன், உஸ்பெகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா 18-0 என்ற கோல்கள் கணக்கில் சீன தைபேவையும், 2-வது லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் தோற்கடித்திருந்தது.

பாகிஸ்தான் அணியுடனான 3-வது லீக் போட்டி 1-1 என சமனிலும், தாய்லாந்து அணியுடனான 4-வது லீக் போட்டியில் 17-0 என்ற கோல்கள் கணக்கிலும் இந்தியா வெற்றி பெற்றது. அதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதே பிரிவில் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அரையிறுதியில் தென் கொரியாவை 9-1 என்ற கோல் கணக்கில் இந்திய வென்றது. பாகிஸ்தான், மலேசியாவை வீழ்த்தியது. தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று (ஜூன் 1) இறுதிப் போட்டியில் விளையாடின. இதில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வென்றது. இந்திய அணிக்காக அங்கத் மற்றும் ஆரய்ஜீத் ஆகியோர் முறையே ஆட்டத்தின் 13 மற்றும் 20-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தனர். இதன் மூலம் இந்திய அணி ஜூனியர் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆடவர் ஹாக்கி ஜூனியர் ஆசியக் கோப்பையை நான்காவது முறையாக வென்றுள்ளது இந்தியா. இதற்கு முன்னர் 2004, 2008 மற்றும் 2015-ல் இந்தியா கோப்பை வென்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x