காஞ்சி கைலாசநாதர் கோயிலில் ரூ.1.98 கோடியில் பார்வையாளர் வசதிகள் மேம்பாடு

காஞ்சி கைலாசநாதர் கோயிலில் ரூ.1.98 கோடியில் பார்வையாளர் வசதிகள் மேம்பாடு
Updated on: 
1 min read

காஞ்சிபுரம்: பாரம்பரியத்தைத் தத்தெடு திட்டத்தில் தமிழகத்தில் முதல் கோயிலாக காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தக் கோயிலில் ரூ.1.98 கோடியிலான பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நேற்று முன்தினம் இரவு தொடங்கி வைக்கப்பட்டன.

மத்திய அரசு சார்பில் ‘பாரம்பரியத்தைத் தத்தெடு 2.0’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் முதல் கோயிலாக கைலாசநாதர் கோயில் தேர்வு செய்யப்பட்டது. மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சோழா ஃபவுண்டேஷன் இந்தப் பணிகளை மேற்கொண்டது. மத்திய அரசின் கீழ் தமிழகத்தில் முதல் கோயிலாக கைலாசநாதர் கோயில் இந்த திட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

வரலாற்றுத் தகவல் காட்சிகள்: இத்திட்டத்தின் கீழ் கோயிலுக்கு வரும் பார்வையாளர்கள் அதன் வரலாறு மற்றும் கட்டிடக்கலை சிறப்புகளை எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் வரலாற்று விளக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்குச் செல்வதற்கான அணுகல் வசதிகள், வரலாற்றுத் தகவல் காட்சிகள், வளாகத்தை அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த முடிவுற்றப் பணிகளை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.பி.கே.தென்னரசு தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரத்தில் 8-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல்லவ மன்னர் இரண்டாம் நரசிம்மவர்மன் (ராஜசிம்மன்) கட்டிய இக்கோயில், தமிழகத்தின் பழமையான கோயில்களில் ஒன்றாகும். மணற்கற்களால் அமைக்கப்பட்ட தனித்துவமான கட்டிடக்கலை, 58 உப சன்னதிகள், சிற்பங்கள், சுவரோவியங்கள் மற்றும் பல்லவர் காலக் கல்வெட்டுகள் இக்கோயிலின் சிறப்புகளாகும். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கெ.ரா.திவ்ய, தனியார் நிறுவன அலுவலர்கள் பங்கேற்றனர்.

காஞ்சி கைலாசநாதர் கோயிலில் ரூ.1.98 கோடியில் பார்வையாளர் வசதிகள் மேம்பாடு
தீபாவளி: சொந்த ஊருக்கு செல்ல பேருந்து, ரயில்களில் அலைமோதிய கூட்டம்

X