

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து கொடிப்பட்டமானது .
வெள்ளிப்பல்லக்கில் 9 சந்திகள் வலம் வந்து கோயிலில் அதிகாலை 5.05 மணிக்கு செப்புக்கொடிமரத்தில் காப்புகட்டிய கற்பக வீரக்குமார் பட்டர் கொடியினை ஏற்றினார். தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரமாகி காலை 6.35 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ மத் தம்பிரான் சுவாமிகள், திருக்கோயில் இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் மெய்வேல், கண்காணிப்பாளர் விவேக், ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டியன், இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.