

பழநி: பழநி முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் செவ்வாய்க்கிழமை (நவ.10) தொடங்கியது.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கந்த சஷ்டி விழா செவ்வாய்க்கிழமை (நவ.10) பகல் 1 மணிக்கு உச்சி காலத்தில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
முன்னதாக, சிறப்பு பூஜை, ஆராதனை நடைபெற்றது. விழாவையொட்டி மூலவர், விநாயகர், சண்முகர், மயில், துவார பாலகருக்கு காப்பு கட்டப்பட்டது.
இந்நிகழ்வில் இணை ஆணையர் ஹரிஹரன், துணை ஆணையர் வெங்கடேஷ், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவ.15-ம் தேதி மாலை நடைபெறவுள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். மாலை 5.30 மணிக்கு நடக்க வேண்டிய சாயரட்சை பூஜை பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும். மாலை 3 மணிக்கு சின்னக்குமார சுவாமி அசுரர்களை வதம் புரியும் பொருட்டு மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்குதல் நிகழ்ச்சியுடன் சன்னதி அடைக்கப்படும்.
தொடர்ந்து, திருஆவினன்குடி கோயிலில் பராசக்தி வேலுக்கு பூஜை செய்யப்பட்டு, மாலை 6 மணிக்கு மேல் வடக்கு கிரி வீதியில் தாரகாசூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்சூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகாசூரன் வதமும், மேற்கு ரதவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெற உள்ளது. இரவு 9 மணிக்கு ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழாவை தொடர்ந்து, சுவாமி மலைக்கோயிலுக்கு சென்று சம்ப்ரோட்சணம் பூஜை நடைபெறும்.
விழா நிறைவாக நவ.16-ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் மலைக்கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சண்முகருக்கும், இரவு 8 மணிக்கு மேல் பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமார சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது.