

ஶ்ரீவில்லிபுத்தூர்: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சதுரகிரி மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பிரதோஷ வழிபாட்டிற்கு மலையேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்- மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்காக அக்டோபர் 23ம் தேதி முதல் 26-ம் தேதி வரை 4 நாட்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த கன மழை காரணமாக சதுரகிரி மலைப் பாதையில் உள்ள தணிப்பாறை ஓடை, மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை ஓடை ஆகியவற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனையடுத்து பக்தர்களின் பாதுகாப்பை கருதி சதுரகிரி மலையேற தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்.15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.