

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது குரங்கணி முத்து மாலை அம்மன் கோயில்.
இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த சீதாதேவியை மீட்பதற்காக, ராமபிரான் தன் வானரச் சேனையை அணிவகுத்து நிற்கச் செய்த இடம் இது என்று கூறப்படுகிறது.
குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் ‘குரங்கணி’ என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. மேலும் ராவணன், சீதாதேவியை கடத்திச் சென்றபோது, ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்துமாலையை கழற்றி வீசினாள் சீதாதேவி. புஷ்பக விமானத்தில் இருந்து வீசப்பட்ட முத்துமாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இப்பகுதியில் விழுந்தது.
தரையில் விழுந்த முத்துமாலை ஜோதியாக ஒளி வீசியது. அப்போது அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர், முத்து மாலையின் ஒளி வீச்சை காண முடியாமல் கண்கள் கூச, அருகில் கிடந்த மண் சட்டியை எடுத்து அந்த முத்து மாலையை மூடினார். பின்பு ஊர் மக்கள் கூடி சீதாதேவியின் பெயரால் வழிபாடு நடத்தினர்.
முத்துமாலை கிடந்த இடமானதால் இங்கு அமைக்கப்பட்ட அம்மனுக்கு ‘முத்துமாலையம்மன்’ என்றே பெயரிட்டனர் என்கிறது தல வரலாறு. கோயிலில் 1957-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற போது, கல்லினால் ஆன திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
அன்று முதல் தினமும் கோயில் நடை திறக்கப்பட்டு, அபிஷேகம், நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு பகல், இரவு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
ஆண்டுதோறும் ஆனி மாதம் கடைசி செவ்வாய் நடைபெறும் ஆனி பெருந்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். தினமும் காலை 5 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 5 முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.