

மகாராஷ்டிரா மாநிலம், உஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள துல்ஜாபூர் பவானி கோயில், 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. போஸ்லே அரச குடும்பத்தின் குலதெய்வமாக விளங்கும் பவானியை, சிவாஜி மகராஜ் வழிபட்டபோது, அவருக்கு தேவி, பவானி வாளை பரிசளித்ததாக அறியப்படுகிறது.
எருமை வடிவில் இருந்த மீஷன் என்ற அரக்கனைக் கொன்று, இந்த யமுனாச்சல மலையில் (பாலகாட் பகுதி) தேவி குடிகொண்டதாக கூறப்படுகிறது. பவானி தேவி, 3 உயரத்துடன், 8 கரங்களுடன் அருள்பாலிக் கிறாள். கோயிலுக்கு ராஜா ஹாஜி வாயில் ராஜமாதா ஜிஜாவு வாயில் என்று 2 நுழைவு வாயில்கள் உள்ளன.
பிரதான நுழைவாயில் வழியாக படிகளில் இறங்கிச் சென்றால் பவானி கோயிலை அடையலாம். பிரதான அறைக்கு அருகில் ஒரு வெள்ளித் தட்டில் (பலாங்) பவானி தேவி உறங்குவதாக கூறப்படுகிறது.
மார்க்கண்டேய ரிஷி கோயில், கோமுக தீர்த்தம், கல்லோல் தீர்த்தம், தூத் கோயில், சித்தி விநாயகர் கோயில், அமிர்த குளம், அன்னபூர்ணா தேவி கோயில், ரக்த பைரவர் கோயில் ஆகியன இங்கு முக்கிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன.
கர்த முனிவர் இறந்த பிறகு அவரது மனைவி அனுபூதி, மந்தாகினி ஆற்றங்கரையில் அமர்ந்து பவானி தேவியை நோக்கி தவம் இருந்தாள். அவளுக்கு இன்னல்கள் அளித்த குகூர் என்ற அசுரனை, தேவி கொன்றதால், அன்று முதல் துல்ஜா பவானி தேவி என்று அழைக்கப்படுகிறாள். மாதங்கா என்ற அசுரனைக் கொன்று, தேவி, தேவர்களை காத்ததாக கூறப்படுகிறது.