Last Updated : 24 Oct, 2017 10:19 AM

 

Published : 24 Oct 2017 10:19 AM
Last Updated : 24 Oct 2017 10:19 AM

கந்த சஷ்டியில் வணங்கினால் கவலையெல்லாம் பறந்தோடும்!

கந்த சஷ்டி வேளையில், கந்தபெருமானை மனதார எவரொருவர் வேண்டுகிறாரோ அவர்களின் கவலையெல்லாம் பறந்தோடும் என்பது ஐதீகம்.

வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் என சிவமைந்தன் முருகப்பெருமானுக்கு ஏகப்பட்ட தினங்கள், முக்கியமான வைபவங்கள். இவற்றில் முக்கியமானதும் முதன்மையானதும் கந்த சஷ்டிப் பெருவிழா எனப் பெருமிதம் பொங்கச் சொல்கிறார்கள் பக்தர்கள்.

சஷ்டியில் சண்முகனை விரதமிருந்து பிரார்த்தனை செய்தால், சங்கடங்கள் யாவும் விலகும் என்பது உறுதி. எல்லா சந்தோஷங்களும் தேடி வரும். மாதந்தோறும் வருகிற சஷ்டி திதியில் விரதமிருந்து வழிபட்டால், வளமும் பலமும் நிச்சயம் என்பது ஐதீகம்!

அப்படியிருக்க... ஐப்பசி மாதத்தில் வரும் கந்தசஷ்டியில் விரதம் இருந்து, கந்தபெருமானை வணங்கினால், நம் கவலையெல்லாம் பறந்தோடிவிடும்.

கல்யாண வரம் கைகூடி வரும். சந்தான பாக்கியம் கிடைத்து, சந்ததியுடன் சீரும் சிறப்புமாக வாழலாம்!

வருடந்தோறும், தீபாவளி முடிந்ததும் சஷ்டிப் பெருவிழா துவங்கும். முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில், தினமும் காலையும் மாலையும் உத்ஸவங்களும் அபிஷேக ஆராதனைகளும் அமர்க்களப்படும்.

சஷ்டி திதி நன்னாளில், வள்ளிமணாளன் குடிகொண்டிருக்கும் கோயில்களில், சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடந்தேறும்.

இந்த நாளில் மட்டுமேனும் விரதம் மேற்கொண்டு, ஆனைமுகனின் தம்பியை கண்ணாரத் தரிசித்தால் போதும்... நம் கஷ்டங்கள் யாவும் விலகிவிடும். எதிர்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும். சத்ருக்கள் தொல்லை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும்.

இதோ... நாளைய தினம் 25.10.17ம் தேதி கந்தசஷ்டிப் பெருவிழா. மாலையில் பிரமாண்டமாக நடைபெறும் சூரசம்ஹாரத் திருவிழா. தேவர்பெருமக்களுக்காகவும் உலக மக்களுக்காகவும் முனிவர்களுக்காகவும் சூரனை அழித்து துவம்சம் செய்த நிகழ்ச்சி சிறப்புற நடைபெறும்.

இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் கண்ணாரத் தரிசியுங்கள். கண்ணீருடன் கந்தனிடம் வேண்டுங்கள். நம் கண்ணீரைக் கண்டும், கஷ்டத்தைப் பார்த்தும் பொறுக்கமாட்டான் ஞானஸ்கந்தன். இல்லத்தில் உள்ளோரின் கஷ்டங்களையெல்லாம் போக்கி இனிக்க இனிக்க வாழ்வைத் தந்து நம்மையும் செம்மையாக்குவான். சீராக்குவான் வடிவேலவன்.

உள்ளத்தில் ஒளியேற்றி, செயல்கள் யாவிலும் தெளிவைக் கொடுப்பான் வள்ளிமணாளன். காரியம் யாவிலும் பக்கத்துணையிருப்பான் மயில்வாகனன்.

கந்தசஷ்டி நாளில்... கந்தக் கடவுளை வணங்குங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x