Last Updated : 17 Jul, 2014 10:10 AM

 

Published : 17 Jul 2014 10:10 AM
Last Updated : 17 Jul 2014 10:10 AM

முக்தி பெறும் வழி எது?

புத்தரின் பிரதம சீடர்களில் ஒருவரான மொகலானா ஒரு முறை "உங்கள் சீடர்கள் அனைவருக்கும் இந்த உலக வாழ்விலிருந்து விடுதலையும் முக்தியும் கிடைக்கும் அல்லவா?" என்று புத்தரிடம் கேட்டார்.

அதற்குப் புத்தர் "ராஜகிரஹத்துக்குச் செல்லும் வழி உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார். "ஆமாம், தெரியும்" "பிறருக்காக அந்த வழியை விளக்கிச் சொல்ல முடியுமா?" என்று புத்தர் கேட்க, "ராஜகிரஹத்துக்குச் செல்லும் சாலை வழி இதுதான். கொஞ்சத் தூரம் சென்றால் ஒரு கிராமம் வரும். அங்கிருந்து நடந்தால் ஒரு தோட்டம் வரும். மேலும் முன்னே சென்றால், இயற்கைக் காட்சிகளும் சில இடங்களையும் காணலாம் என்று சொல்வேன்" என்றார் மொகலானா.

"சரி, நீங்கள் சொன்னபடி சிலர் அந்த இடத்தைச் சென் றடையலாம். இன்னும் சிலர் வழி தவறிப் போகவும் செய்யலாம், இல்லையா?"

"அதற்கு நான் என்ன செய்வது கவுதமரே. நான் பாதையை மட்டும்தானே காட்ட முடியும்?" என்றார் மொகலானா.

உடனே புத்தர், "என் சீடர் களுக்கு நானும் அப்படிப் பாதையை மட்டும்தான் காட்டுவேன். சிலர் முக்தியடை வார்கள். சிலர் முக்தி அடைய மாட்டார்கள். தலைவர் பாதையை மட்டும்தானே காட்ட முடியும்" என்றார்.

யாரைப் பொறுத்தது?

ஒரு பாதையில் ஒருவர் எவ்வளவு வேகமாகச் செல்ல முடியும் என்பதும், எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதும் அவரவருடைய மன ஆற்றலைப் பொறுத்தது என்பதே இந்த உரையாடலின் உட்கருத்து. மற்ற மதத்தைச் சேர்ந்த தீர்க்கதரிசிகளைப் போல, தன் சீடர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று புத்தர் வாக்குறுதி அளிக்க வில்லை. அனைவரும் முக்தி அடைவார்கள் என்றும் கூறவில்லை.

ஒவ்வொரு மனிதனின் முழுமையான ஈடுபாடும். முயற்சியுமே அவரை முக்தி பெறச் செய்யும். புத்தரின் சீடராக இருந்துவிட்டால் மட்டுமே ஒருவர் முக்தி அடைந்துவிட முடியாது. தன் பாதையில் செல்வதற்கான முயற்சியை ஒருவர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். மனிதனின் முக்தி வேட்கையைத் தன் போதனையின் முக்கிய அம்சமாக்கினார் புத்தர். மற்ற மதத் தலைவர்கள் எழுப்பிய வினாக்களுக்குப் பதிலாகத்தான் புத்தருடைய வாழ்வு அமைந்தது.

தேவையற்ற சந்தேகம்

மற்ற மதத் தலைவர்களில் இருந்து மாறுபட்ட தீர்க்கதரிசி புத்தர். தன்னுடைய வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா என்பது பற்றியும், அதற்கு நிரந்தர ஆதரவு கிடைக்குமா என்பது பற்றியும் புத்தருக்குச் சந்தேகம் இருந்தது. கிம்பிலி என்னும் மூங்கில் தோப்பில் புத்தர் தங்கியிருந்தபோது, கிம்பிலியா என்ற துறவி, "புத்தர் போதிக்கும் தர்ம வழி, அவர் இறந்த பின்னரும் நிலைக்குமா?" என்று கேட்டார்.

அப்போது புத்தர் அளித்த பதிலில் சந்தேகமே நிலவியது. தான் வலியுறுத்தும் வழி தன் இறப்புக்குப் பின் நிலைக்குமா என்பதிலும், தன் வழியையும், சபை ஒழுக்கத்தையும் தன் சீடர்கள் பின்பற்றுவார்களா என்பதிலும் புத்தருக்கு ஐயம் இருந்தது.

தான் வலியுறுத்திய வழி அன்றைக்கு மாறுபட்டிருந் ததாலும், ஏற்கெனவே நம்புவதை மனிதர்கள் விடாப் பிடியாகக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பார்களே என்ற காரணத்தாலும் இந்தச் சந்தேகம் புத்தருக்கு வந்திருக்கலாம். ஆனால், இத்தனை ஆயிரம் ஆண்டு களைக் கடந்தும் புத்தரின் தர்ம வழி மீதான பிடிப்பு தொடர்ந்துகொண்டே இருப்பது, அந்தச் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x