Published : 29 Jan 2023 05:44 AM
Last Updated : 29 Jan 2023 05:44 AM

திருமலையில் ரத சப்தமி விழா - ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் திருவீதி உலா

திருமலையில் ரத சப்தமியையொட்டி நேற்று ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் முதல் வாகனமாக அதிகாலை சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பர்.

திருமலை: திருமலையில் ரத சப்தமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல், இரவு வரை தொடர்ந்து 7 வாகனங்களில் ஏழுமலையான் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையொட்டி, அனைத்து சிறப்பு தரிசனங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்தது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சூரிய ஜெயந்தி, மினி பிரம்மோற்சவம் என்றழைக் கப்படும் இவ்விழாவில், திரளானபக்தர்கள் பங்கேற்று ‘கோவிந்தாகோவிந்தா’ என பக்தி திளைக்ககோஷமிட்டு ஏழுமலையானை வழிபட்டனர்.

ரத சப்தமியையொட்டி, நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனைத் தொடர்ந்து, சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், அனுமன் வாகன சேவைகள் நடைபெற்றன. மதியம் கோயில் அருகே உள்ள குளத்தில், வராக சுவாமி கோயில் முன் சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர். அதன் பின்னர் மீண்டும் கற்பக விருட்ச வாகனம், சர்வபூபால வாகனம் மற்றும் இறுதியாக சந்திரபிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பர் 4 மாட வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் பல மாநில பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

ரத சப்தமியையொட்டி, நேற்று சர்வ தரிசன டோக்கன் விநியோகம் ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் நேரடியாக வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக சென்று, சர்வ தரிசன முறையில் மட்டுமே சுவாமியை தரிசித்தனர். விஐபி தரிசனம் உட்பட மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள், கைக்குழந்தையுடன் வரும் பக்தர்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் அனைத்து சிறப்பு தரிசனமும் ரத்து செய்யப்பட்டது. மேலும், அனைத்து ஆர்ஜித சேவை டிக்கெட்களும் ரத்து செய்யப்பட்டன. 27, 28 தேதிகளில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவும் ரத்து செய்யப்பட்டன. பக்தர்களுக்காக நேற்று 3.5 லட்சம் லட்டு பிரசாதங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இதனால் அனைவருக்கும் தங்கு தடையின்றி லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. பக்தர்களுக்கு மாட வீதிகள் உட்பட திருமலையில் பஸ் நிலையம், ராம் பக்கீச்சா விடுதி உட்பட பல இடங்களில் அன்னதானம், குடிநீர், பால் போன்றவை வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x