Published : 11 Jan 2023 06:10 AM
Last Updated : 11 Jan 2023 06:10 AM

108 வைணவ திவ்ய தேச உலா - 108.பரமபதம் வைகுண்டநாதர்

முனைவர் கே.சுந்தரராமன்

108 வைணவ திவ்ய தேசங்களில் பரமபதம் என்று அழைக்கப்படும் வைகுண்டம், வைணவ அடியவர்களின் கடைசி நிலையாகிய வீடுபேறு, மோட்சம், முக்தி நிலையைக் குறிப்பிடுகிறது. இது பூலோகத்தில் இல்லை. எம்பெருமானின் பரத்வம் விளங்கும் இடம் இதுவாகும். இங்கு ஜீவாத்மாக்கள் இறைவனைப் போலவே ஸ்வரூபம் பெற்று, ஆனால் அவருடன் இரண்டறக் கலக்காமல் அவருக்கு பல்லாண்டு பாடிக் கொண்டு கைங்கர்யம் செய்வர்.

இத்தலத்தை பெரியாழ்வார், ஆண்டாள், திருமழிசையாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் 36 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

நம்மாழ்வார் பாசுரம்:

சூழ்விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின

ஆழ்கடல் அலை திரைக் கைஎடுத்து ஆடின

ஏழ்பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்

வாழ்புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே.

பெருமாள்: பரமபத நாதன்,

தாயார்: பெரிய பிராட்டி

தீர்த்தம்: விரஜா நதி,

விமானம்: அநந்தாங்க விமானம்

இங்கு சென்றவர்கள் யாரும் திரும்புவதில்லை என்பதால், ‘தெளிவிசும்பு திருநாடு’ ‘நவபந்தமில்லாதோர் நாடு’, ‘சுடரொலியாய் நின்ற தன்னுடைச் சோதி’ என்று ஆழ்வார்கள் வர்ணித்துள்ளனர். ஸ்ரீமத் ராமானுஜர் ‘வேதாந்த ஸங்க்ரஹம்’ என்ற க்ரந்தத்தில் விரிவாக வர்ணித்துள்ளார். 106 திவ்ய தேசங்களையும் தரிசித்த பக்தர்களை அவர்கள் பரமபதித்த பின்னர், பரம்பொருளே இந்த திவ்ய தேசத்தை அவர்களுடைய நிரந்தர வாசஸ்தலமாக மகிழ்விப்பார் என்பது ஆன்றோர் வாக்கு.

தெற்கு நோக்கி வீற்றிருந்த கோலத்தில் வைகுண்டபதி என்று அழைக்கப்படும் பரமபத நாதன் அருள்பாலிக்கிறார். வைகுண்டம் என்ற பெயரை ஒட்டியே திருவிண்ணகர் – ஒப்பிலியப்பன், காழிச்சீராம விண்ணகரம் – சீர்காழி, வைகுந்த விண்ணகரம் – திருநாங்கூர், அரிமேய விண்ணகரம் – திருநாங்கூர், நந்திபுர விண்ணகரம் – நாதன் கோயில் ஆகிய 5 கோயில்கள் அமைந்துள்ளன.

மேலும் மூன்று கோயில்களில் வைகுந்தவாசனாகவே சேவை சாதிக்கிறார். அவை மதுரை கூடலழகர் கோயில், திருக்கோஷ்டியூர் மற்றும் காஞ்சி பரமேஸ்வர விண்ணகரம் ஆகும்.

இத்தலங்களுக்குச் சென்று வைகுண்ட வாசனின் அருள்பெறுவோம்.

அனைவருக்கும் அவர் அனைத்து நன்மைகளையும் அருள்வார் என்பது திண்ணம்.

ஓம் நமோ நாராயணாய..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x