Published : 24 Jan 2023 05:20 AM
Last Updated : 24 Jan 2023 05:20 AM

பழநி கோயில் கும்பாபிஷேக விழா - யாகசாலை பூஜைகள் தொடக்கம்

பழநி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. படம்: நா.தங்கரத்தினம்

பழநி: பழநி தண்டாயுதபாணி கோயிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பின்பு ஜன. 27-ல் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்தையொட்டி ஜன.18-ம் தேதி முதல் பூர்வாங்கப் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அன்றைய தினம் ராஜ கோபுரம்மற்றும் சந்நிதிகளில் உள்ள கோபுரங்களுக்கு கலசங்கள் பொருத்தப்பட்டன. நேற்று முன்தினம் திருஆவினன்குடி கோயிலில் யானை, பசு மற்றும் குதிரைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது, தேவஸ்தான மிராசுபண்டாரத்தாரர்கள் சண்முக நதியில் இருந்தும், அர்ச்சக ஸ்தானீகர்கள் பெரிய நாயகியம்மன் கோயிலில் இருந்தும் குடங்களில் தீர்த்தங்களுடன் வலம் வந்து மலைக்கோயிலுக்கு சென்றனர்.

நேற்று காலை பாத விநாயகர் முதல் உள்பரிவார உப தெய்வங்களின் அருட்சக்தி கொணர்தல் நடைபெற்றது. இதையடுத்து, ஆதவன் ஒளியில் இருந்து வேள்வி சாலைக்கு நெருப்பு எடுத்தல், படையல், ஒளி வழிபாடு நடைபெற்றது.

மாலையில் தண்டாயுதபாணி சுவாமி, ஆனந்த விநாயகர் உட்பட 7 தெய்வங்களின் அருட்சக்தியை திருக்குடங்களில் எழுந்தருளச் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து, திருக்குடங்களுடன் யாகசாலையை வலம் வந்து, 108 சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க 90 குண்டங்களில் வேள்வி தொடங்கியது. அப்போது, நன்மங்கல இசை, பண்ணிசை நடந்தது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச.விசாகன், டிஆர்ஓ லதா, கோயில் இணைஆணையர் நடராஜன், அறங்காவலர் தலைவர் சந்திரமோகன், நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x