Published : 04 Sep 2022 07:35 AM
Last Updated : 04 Sep 2022 07:35 AM
சென்னை: அக்டோபர் 5-ம் தேதி முதல் ஓராண்டுக்கு வள்ளலார் முப்பெரும் விழா நிகழ்ச்சிகள் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
திருவருட் பிரகாச வள்ளலார் முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் தலைமையில் 14 பேர் கொண்ட சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. இக்குழுவின் கூட்டம் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
வள்ளலாரின் பெருமையை பறைசாற்றும் வகையில் வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி ஓராண்டுக்கு, அதாவது 52 வாரங்களுக்கு ‘வள்ளலார் - 200’ என்ற தலைப்பில் முப்பெரும் விழா நிகழ்ச்சிகளை தமிழகம் முழுவதும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
விழா இலச்சினையை (Logo) வெளியிடுவது, அதில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், அக்டோபர் 5-ம் தேதி வள்ளலார் முப்பெரும் விழாவின் தொடக்க நிகழ்ச்சியை எங்கு நடத்துவது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
வள்ளலாரின் சிறப்புகளை சிறந்த முறையில் எடுத்துக் கூறுகிற, வள்ளலாரின் வழிகளை பின்பற்றுகிற சபையை சார்ந்தவர்கள், வள்ளலார் மீது பேரன்பு கொண்டவர்களை அழைத்து முதல் 10 நிகழ்ச்சிகள் நடத்தப்படும். எந்தெந்த ஊரில் முதல் 10 நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று முடிவு செய்து, முதல்வரின் அனுமதி பெற்று, நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, விரிவான வரைபடம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
கோயில்களில் ‘அன்னை தமிழில் வழிபாடு’ திட்டத்துக்கு புத்துயிரூட்டும் வகையில், 48 கோயில்களில் முழுமையாக அன்னை தமிழில் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில் குழுவின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர், கூடுதல் ஆணையர்கள் இரா.கண்ணன், ந.திருமகள், எம்.கவிதா, குழு உறுப்பினர்கள் சாரதா நம்பி ஆரூரன், அருள்நந்தி சிவம், கே.என்.உமாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT