Published : 02 Aug 2022 04:38 AM
Last Updated : 02 Aug 2022 04:38 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் ‘கோவிந்தா, கோபாலா' கோஷம் முழங்க வெகுவிமரிசையாக நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் 108 திவ்யதேசங்களில் முக்கியமான திருத்தலம் ஆகும். இக்கோயில் பெரியாழ்வார், ஆண்டாள் அவதரித்த சிறப்பு பெற்றது. இங்கு ஆண்டாள் அவதரித்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தில் தேரோட்டம் நடைபெறும்.
2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்
கரோனா ஊரடங்கால் 2 ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதி இன்றி ஆடிப்பூரத் திருவிழா கோயில் பிரகாரத்தில் நடைபெற்றது. ஆடிப்பூரத் தேரோட்டத்துக்குப் பதிலாக கோயில் பிரகாரத்தில் தங்கத் தேரோட்டம் நடந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆடிப்பூரத் திருவிழா ஜூலை 24-ம் தேதி தொடங்கியது. 5-ம் நாள் திருவிழாவில் மங்களாசாசனம் செய்யும் உற்சவம், 7-ம் நாள் திருவிழாவில் சயன சேவை உற்சவம் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் நேற்று நடந்தது. இதற்காக அதிகாலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் தேரில் எழுந்தருளினர். அப்போது ஸ்ரீரங்கம், அழகர்கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரம், பூமாலை சாற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
தேரோட்டத்தை காலை 9.05 மணி அளவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஆட்சியர் மேகநாதரெட்டி, அறநிலையத் துறை இணை ஆணையர் செல்லத்துரை, தக்கார் ரவிச்சந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து ‘கோவிந்தா, கோபாலா’ கோஷம் முழங்கியவாறு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.ஆடி அசைந்து வந்த தேரை லட்சக்கணக்கான பக்தர்கள் நான்கு ரத வீதிகளில் தரிசித்தனர். தேர் காலை 11.25 மணிக்கு நிலைக்கு வந்தது.
நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், காவல் கண்காணிப்பாளர் மனோகர், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சார்-ஆட்சியர் பிரிதிவிராஜ், நகராட்சி தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், புலவர் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் முத்துராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT