Published : 12 Nov 2021 12:12 PM
Last Updated : 12 Nov 2021 12:12 PM

குருப்பெயர்ச்சி பொதுப் பலன்கள்: துலாம் ராசி வாசகர்களே (13.11.2021 முதல் 13.4.2022 வரை)

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

வலுவான கொள்கை, கோட்பாடுகளுடன் வாழும் நீங்கள் வழுக்கி விழுபவர்களை வாழ வைப்பவர்கள். உங்களின் ராசிக்கு சுகவீடான நான்காம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் விரயத்தையும், ஏமாற்றங்களையும், இனம்புரியாத பயத்தையும், தாயாருடன் பகைமையையும் ஏற்படுத்திய குருபகவான் 13.11.2021 முதல் 13.4.2022 வரை ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அமர்வதால் உங்களைப் புதிய பாதையில் பயணிக்க வைப்பார். உங்கள் வாழ்வில் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். குழப்பங்களிலிருந்து விடுபட்டு தெள்ளத் தெளிவாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

வீடு கல்யாணம், கச்சேரி என்று களைகட்டும். குடும்பத்தில் கலகமூட்டியவர்களை இனம் கண்டறிந்து ஒதுக்கித் தள்ளுவீர்கள். வீண் சந்தேகத்தாலும், சச்சரவுகளாலும் பேசாமல் இருந்த கணவன் மனைவிக்குள் இனி அன்னியோன்யம் பிறக்கும். மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கும் நல்ல இடத்தில் மணப்பெண் அமையும். அவருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பும் வரும். குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்விகச் சொத்துகளில் பங்கு கைக்கு வரும். தாயாருக்கு இருந்த நோய் விலகும். அவருடனான மோதல்களும் நீங்கும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள்.

வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். வாடகை கொடுத்தே சம்பளம் மொத்தமும் அழிகிறதே என்று அவ்வப்போது ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தீர்களே! இனி சொந்தமாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றிப் புதுசு வாங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதக் குணம் தளரும். உங்கள் அறிவுரையை இனி ஏற்றுக் கொள்வார்கள். குலதெய்வக் கோயிலுக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை இப்போது நிறைவேற்றுவீர்கள்.

குரு உங்களின் ஒன்பதாம் வீட்டைப் பார்ப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வெற்றியாளர்களின் நட்பு கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கோயில் கும்பாபிஷேகத்தை தலைமையேற்று நடத்துவீர்கள். தந்தையாருடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். அவரின் ஆரோக்கியம் சீராகும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பதினோறாவது வீட்டைக் குரு பார்ப்பதால் உங்களின் புகழ், கௌரவம் கூடும். மூத்த சகோதரர் வகையில் ஒற்றுமை பலப்படும். வருமானம் உயரும். புதிய பதவிக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். பங்கு வர்த்தகம் மூலமாக பணம் வரும். புது வீடு கட்டிக் குடிபுகுவீர்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

13.11.2021 முதல் 30.12.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்துக்கு குருபகவான் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அனுபவப்பூர்வமாகப் பேசி எல்லோர் மனத்திலும் இடம் பிடிப்பீர்கள். வழக்கு சாதகமாகும். பதவிகள் தேடி வரும். அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். என்றாலும் மனைவியுடன் ஈகோ பிரச்சினை வரக்கூடும்.

31.12.2021 முதல் 02.03.2022 வரை சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் நெஞ்செரிச்சல், வாயுக் கோளாறு, தலைசுற்றல், ஒவ்வாமை வந்து செல்லும். எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். எதிர்பார்த்த பணம் வரும்

02.03.2022 முதல் 13.04.2022 வரை குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் இனம்புரியாத கவலைகள் வந்து செல்லும். சிலர் உங்களைத் தவறான போக்குக்குத் தூண்டுவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. சந்தை ரகசியங்களைத் தெரிந்துக் கொள்வீர்கள்.

உங்கள் திட்டத்தை ஊக்குவிக்கும், உங்களை உற்சாகப்படுத்தும் பங்குதாரர் அறிமுகமாவார். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வழக்கில் வெற்றியடைந்து இழந்த பெரிய பதவியில் மீண்டும் அமர்வீர்கள். வெகுநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. இந்தக் குரு மாற்றம் தொட்டதையெல்லாம் துலங்க வைப்பதுடன், எதிர்பாராத திடீர் யோகங்களையும் அள்ளித் தரும். நிம்மதி பெருகும்.

பரிகாரம்: திருச்செந்தூரில் அருள்புரியும் முருகப் பெருமானையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் அஸ்வினி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

t1

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x