Published : 25 Dec 2020 10:11 AM
Last Updated : 25 Dec 2020 10:11 AM

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: மேஷ ராசி வாசகர்களே  (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

sani-peyarchi-2020

சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

நிகழும் சார்வரி வருடம், மார்கழி மாதம் 11ம் தேதி சனிக்கிழமை விடிந்தால் ஞாயிற்றுக்கிழமை 26/27.12.2020 அதிகாலை 04மணி 46நிமிடத்திற்கு சுக்ல பட்சத்து, துவாதசி திதி, கீழ்நோக்குள்ள கார்த்திகை நட்சத்திரம், சாத்தியம் நாமயோகம், பாலவம் நாமகரணம், நேத்திரம் ஜுவனம் நிறைந்த அமிர்தயோகத்தில் குரு ஹோரையில் பஞ்சபட்சியில் வல்லூறு ஊன் புரியும் நேரத்தில் கோதண்ட வீடாகிய தனுசிலிருந்து பெயர்ந்து தன் ஆட்சி வீடான சர ராசியான மகரத்துக்குள் சனிபகவான் அமர்கிறார்.


காலப்புருஷ தத்துவப்படி பத்தாவது வீட்டில் சனிபகவான் அமர்வதால் பணத்தட்டுப்பாடு விலகும். மக்களிடையே ஓரளவு பணம் புழங்கும். பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள், வலைத்தளங்களின் கை ஓங்கும். நிர்வாகம், தொழில் சீர்குலையும். பழக்கவழக்கங்கள், ஒழுக்க நெறிமுறைகள் மாறும். படித்தவர்கள் அதிகம் தவறு செய்வார்கள்.

பங்குவர்த்தகம் உச்சமடைந்து வீழ்ச்சி அடையும். வாடகை வாகனங்கள் பாதிப்படையும். ஏப்ரலிலிருந்து தங்கம் விலை உயரும். பள்ளி, கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் மாறும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பாதிப்படைவார்கள். சிறுநீரக நோய் மற்றும் தண்ணீர், காற்றால் புது நோய்கள் பரவும். கருவிலிருக்கும் குழந்தைகள் பாதிப்படைவார்கள். வங்கி, நிதி நிறுவனங்கள் பலவீனமாகும். மேலும் பல நிறுவனங்கள் நலிவடையும்.

தொழிலாளர் கை ஓங்கும். நீதிபதிகள் அதிகார மையத்தை அசைத்துப் பார்ப்பார் கள். திருட்டு, பலாத்கார பயம் அதிகமாகும். மழை பொழிந்து மகசூல் பெருகும். சனிபகவான், கடக ராசியைப் பார்ப்பதால் ஆள்பவர்கள் விபத்துக்குள்ளாவார்கள். முக்கிய பதவி வகிப்பவர்களை நோய்கள் தாக்கும். துலாம் ராசி மீது பார்வை இருப்பதால் சிறுதொழில், நடுத்தரத் தொழில் வர்க்கத்தினர் பாதிப்படைவர்.

அனைத்து வகை வியாபாரங்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் வரும். அடர்ந்தகாடு, சதுப்புநிலங்கள், குகைகள் ஆகியவற்றில் இருக்கும் உயிரினங்கள் பாதிப்படையும். பரம்பரை பணக்காரர்களுக்கு மதிப்பு குறையும். சாதிக்கட்சிகள், லெட்டர்பேடு கட்சிகளுக்கு திடீர் மரியாதை உண்டு. கரோனா வைரஸ் நோய் தீர்க்க மருந்து வரும். சூதாட்டம் குறையும். ராணுவம் நவீனமாகும். மொத்தத்தில் இந்த மகரச் சனியால் மக்களிடையே இருந்து வந்த பயம் விலகி தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

மேஷ ராசி வாசகர்களே

எல்லாவற்றையும் எளிதில் சமாளிக்கும் மன தைரியம் கொண்ட நீங்கள், மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யத் தயங்குவீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்த நீங்கள், சோதனைகளையும் சாதனைகளாக மாற்றி முன்னேறத் துடிப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்து, கையில் காசு தங்காமல் கடன் பிரச்சினைகளாலும், கவலைகளாலும் திணறடித்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலகட்டங்களில் பத்தாம் வீட்டில் வந்து அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும்.

சனிபகவான் தனது சொந்த வீடான மகரத்தில் ஆட்சிபெற்று அமர்வதால் இனி நீங்கள் விஸ்வரூபமெடுப்பீர்கள். தந்தைக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உருவானதுடன், அடிக்கடி மருத்துவச் செலவுகளும் வந்ததே! வெளியில் சொல்ல முடியாத பல கஷ்டங்களை அனுபவித்தீர்களே! சிலர் தந்திரமாகப் பேசி உங்களை ஏமாற்றினார்களே! இனி தொட்டது துலங்கும். எங்குச் சென்றாலும் மரியாதை கிடைக்கும். குடும்பத்தினருடன் நிலவி வந்த பிரச்சினை நீங்கும். கணவன் மனைவிக்குள் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் தீரும். பிள்ளைகள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். தந்தையார் குணமடைவார். அவருடன் இருந்த மோதல்கள் விலகும். பிதுர்வழி சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். வராது என்றிருந்த பணம் வந்து சேரும்.

மனைவிவழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சகோதரர்களால் உதவுவார்கள். உங்களின் நல்ல மனசைப் புரிந்து கொண்டு சிலர் பாராட்டிப் பேசுவார்கள். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள். அக்கம்பக்கத்திலிருந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் நீங்கும். கைமாற்றாக, கடனாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். தந்தைவழியில் அனுகூலம் உண்டு. சனிபகவான் 29.03.2023 முதல் 24.08.2023 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் திடீர் யோகம், பணவரவு, வீடு, வாகன வசதி, பிரபலங்களின் அறிமுகம் எல்லாம் உண்டாகும்.

சனிபகவான் உங்களின் நான்காம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை தேவை. புதுவாகனம் வாங்குவீர்கள். சனிபகவான் உங்களின் ஏழாம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிக்கு கர்ப்பப்பைக் கோளாறு, அவருடன் வீண் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். ஆனால் வி.ஐ.பி.க்களின் அறிமுகம் கிடைக்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும். ஆன்மிகப் பயணம் சென்று வருவீர்கள்.

சனிபகவானின் நட்சத்திர பலன்கள்

உத்திராடம் நட்சத்திரத்தில் 27.12.2020 முதல் 27.12.2021 வரை சனிபகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். இதற்கிடையில் 11.05.2021 முதல் 26.09.2021 வரை சனிபகவான் வக்கிரத்தில் செல்வதால் பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் இக்காலக்கட்டத்தில் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. அரசு விவகாரங்கள் மற்றும் வழக்குகள் வேண்டாம். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைத் தாமதமின்றிச் செலுத்துங்கள். அரசு அனுமதி பெறாமல் வீடு கட்ட வேண்டாம்.

திருவோணம் நட்சத்திரத்தில் 28.12.2021 முதல் 26.01.2023 வரை சனிபகவான் செல்வதால் சிலர் புதிதாக சொத்து வாங்குவீர்கள். தாயாருக்கு இருந்து வந்த மூட்டு வலி, முதுகு வலி நீங்கும். வாகனப் பழுது சரியாகும். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். இதற்கிடையில் 25.05.2022 முதல் 09.10.2022 வரை சனிபகவான் வக்கிரத்துக்குச் செல்வதால் வாகன விபத்துகள், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள், மனக்குழப்பங்கள், தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் 27.01.2023 முதல் 19.12.2023 வரை சனிபகவான் செல்வதால் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். எதிர்ப்புகள் குறையும். சகோதரர்களுக்கிடையே இருந்து வந்த கசப்புகள் நீங்கும். இதற்கிடையில் 27.06.2023 முதல் 23.10.2023 வரை இக்காலக்கட்டத்தில் சனிபகவான் வக்கிரமடைவதால் தைரியமாக சில காரியங்களை முடிப்பீர்கள்.

வியாபாரத்தில் சூடு பிடிக்கும். ஆனால் போட்டிகள் அதிகமாகும். முடங்கிக் கிடந்த நீங்கள் ஆர்வம் அடைவீர்கள். பழைய கடையை புதுப்பித்து விரிவுப்படுத்துவீர்கள். பத்தாம் வீட்டில் சனி வந்தமர்வதால் உத்தியோகத்தில் உயர்வு உண்டு. அநாவசிய விடுப்புகளைத் தவிர்க்க வேண்டும். வேலைச்சுமை இருக்கும். முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். சில வேலைகளைப் போராடி முடிக்க வேண்டி வரும். மேலதிகாரி உதவுவார். சக ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம். முக்கியப் பதிவேடுகளை கவனமாகக் கையாளுங்கள். மொத்தத்தில் இந்தச் சனி மாற்றம் உங்களை வளமைப்படுத்துவதுடன் வருங்காலத் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரை அருகம்புல் மாலை அணிவித்து சுவாதி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். புலம்பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள்.


சனிப்பெயர்ச்சி பலன்கள்சனிப்பெயர்ச்சிஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்பரிகாரம்20202023Sani peyarchi

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x