Last Updated : 09 Dec, 2020 08:30 PM

 

Published : 09 Dec 2020 08:30 PM
Last Updated : 09 Dec 2020 08:30 PM

ஐயப்ப சுவாமிக்கு ஆராட்டு விழா... கல்பாத்தி சாமி அண்ணா!

கார்த்திகை மாதம் தொடங்கி, ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருப்பதும் இருமுடி சுமந்து ஐயன் ஐயப்ப சுவாமியை தரிசிக்கக் கிளம்புவதும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
இன்றைக்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள், சபரிமலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் ஐயப்ப பக்தர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் புனலூர் தாத்தா, நம்பியார் குருசாமி போன்ற எண்ணற்ற ஆதிகால ஐயப்ப பக்தர்கள் செய்த பெருந்தொண்டு எண்ணற்ற பக்தர்களை ஐயப்ப பக்தர்களானார்கள். அப்படியொரு ஐயப்பத் தொண்டு செய்தவர் கல்பாத்தி ஸ்ரீநிவாச ஐயர். சாமி அண்ணா என்றால்தான் ஐயப்ப பக்தர்களுக்குத் தெரியும்.

பொறாமை என்பது காசு பணத்தைப் பார்த்துத்தான் என்றில்லை... நகைநட்டுகளைப் பார்த்துதான் என்றெல்லாம் இல்லை. பக்தியிலும் வெளிப்படும். இறைவனிடம் கொண்டிருக்கிற பக்தியைப் பார்த்தும் பொறாமைப் படுவார்கள்.

இங்கே பக்தியுடன் இல்லாதவரைப் பார்த்தும் பொறாமை கொள்கிறார்கள். பக்திசிரத்தையுடன் இருப்பவர்களைக் கண்டும் குமைந்து போகிறார்கள். பொறாமை எங்கே இருக்கிறதோ அவரிடத்தில் கடவுள் ஒருபோதும் நெருங்கமாட்டார் என்பதுதான் சத்தியம்! இதை பலரும் உணருவதே இல்லை.

கல்பாத்தி ஸ்ரீநிவாச ஐயர், சபரிமலை ஐயப்ப பக்தர்களிடையே பரிச்சயமான பெயர்... மனிதர். அவருடைய நேர்மை, பக்தி, சிரத்தை, வேத பாராயண அனுஷ்டானம், வியாபார வெற்றி எல்லாமே சிலருக்கு பொறாமையை உண்டுபண்ணியது. கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்திருக்கிற புகழும் கௌரவமும் பார்த்து வயிற்றெரிச்சல்பட்டார்கள் ஒரு சிலர்.

மிகுந்த ஐயப்ப பக்தர் அவர். அந்தக் காலத்தில், வழியே இல்லாத காலகட்டத்தில், சபரிமலைக்குச் செல்வதை மிகப்பெரிய கடமையாகவும் இந்த ஜென்மத்துக் கொடுப்பினையாகவும் கொண்டிருந்தார். அவரை எல்லோரும் சாமி அண்ணா என்றுதான் அழைத்தார்கள்.

சாமி அண்ணாவின் புகழ் என்பது பக்தியாலும் நேர்மையாலும் விளைந்தது. சொல்லப்போனால், அவை அனைத்தும் ஐயப்ப சுவாமி அருளியது. அப்படித்தான் எல்லோரிடமும் சொல்லி வந்தார். அப்படித்தான் நினைத்து நினைத்துப் பூரித்தார். ஆனால், இந்த நினைப்பே கூட பலருக்கு வயிற்றெரிச்சலைத் தந்தது.

இப்படித்தான் ஒருமுறை, பங்குனி உத்திர விழாவானது, சபரிமலை சந்நிதானத்தில், சாமி அண்ணாவின் முயற்சியால் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஐயப்ப சுவாமிக்கு விசேஷ பூஜைகள் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தன. அது ஆராட்டு விழா. அதற்கு முன்பு வரை, பங்குனி உத்திரத்தின் போது, நடை திறந்திருக்காது. ஆனால் சாமி அண்ணா பேசி, விவரித்து, விழா நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்படி இன்று வரை சபரிமலை ஐயப்பன் கோயிலில், பங்குனி உத்திரத்தில் நடைபெறுகிறது ஆராட்டுப் பெருவிழா.

ஆனால் ஐயப்ப சுவாமிக்கு, இப்படி கோலாகலமாக விழா நடக்கிறதே என்று ஆனந்திக்காமல், இதனால், இந்த விழாவால், சாமி அண்ணாவுக்கு இன்னும் இன்னுமாகப் பேரும்புகழும் கிடைக்குமே என்றுதான் பொருமினார்கள் சிலர்.

ஆனால், பொறாமை என்பது கேன்சர் நோய் மாதிரிதான். இன்னொருவர் குறித்து லேசாக பொறாமைப் பட்டால் கூட, அது முட்செடி போல், கருவேலம் போல் வளர்ந்து கொண்டே இருக்கும். புத்தி முழுவதும் பரவி, செல்கள் அனைத்திலும் பரவி, செயல்கள் முழுவதும் அதுவாகவே, பொறாமையாகவே அமைந்துவிடும். சாமி அண்ணா மீது பொறாமைப்பட்ட ஒருவர், இந்த பூஜைக்கு ஏதோவொரு விதத்தில், எல்லா விதமான இடைஞ்சல்களையும் செய்தார். ஆனால் இதையெல்லாம் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை சாமி அண்ணா. ஐயப்பனின் துணை கொண்டு அவற்றையெல்லாம் முறியடித்தார். பங்குனி உத்திர மஹோத்ஸவத்தை சபரிமலையில் விமரிசையாக நடத்தினார்.

அதுமட்டுமா... வருடந்தோறும் இந்த விழாவை வெகு அழகாகத் திட்டமிட்டு, மிகவும் பக்தியுடன் விழாவை சிரமேற்கொண்டு நடத்திவந்தார். ஒருகட்டத்தில், வேண்டுமென்றே ஏதேதோ வகையில் பிரச்சினைகள் செய்து வந்த அந்த ஆசாமி, ஒருகட்டத்தில்... “இனிமேல் நீங்கள் பூஜை நடத்த நான் அனுமதிக்க மாட்டேன்.” என்று நேரடியாகவே பாய்ந்தார்.

தன்னைப் பற்றி தனிப்பட்ட தாக்குதல் என்றால் ஐயப்பன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு ஒதுங்கி விடும் சாமி அண்ணா, பூஜைக்கு இடைஞ்சல் என்றதும் பெரிதும் மனம் நொந்தார். வருத்தத்தில் அவரையும் அறியாமல் வார்த்தைகள் வெளிப்பட்டன. “அவனுடைய சந்நிதானத்தில் நடக்கும் பூஜை இது. அவனுக்காக, ஐயனுக்காக நடக்கும் பூஜை இது. அவன் அவதரித்த நன்னாளைக் கொண்டாடும் விழா இது. அந்த பூஜையை அனுமதிக்கவும் மறுக்கவும் நீ யாரப்பா? பகவானின் பூஜையை முடக்க நினைக்கிறாயே. இந்த எண்ணத்துடன் இனிமேல் நீ இந்த மலையில் எப்படி கால்வைக்கிறாய் என்று பார்ப்போம்’’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு, விறுவிறுவென மலையில் இருந்து இறங்கிச் சென்றார்.

மலையில் இருந்து இறங்கியது போலவே, அந்தக் கோபமும் அவர் மீதான கோபமும் அப்படியே மனதில் இருந்து இறங்கி, காணாமலேயெ போனது. அந்தச் சம்பவத்தையும் அந்த நபரையும் மறந்தே விட்டார் சாமி அண்ணா.

இங்கே இப்படித்தான். பொதுச் செயல்களில் ஈடுபடுவோருக்கு இப்படியான களங்கங்களும் அம்புகளும் எங்கிருந்தோ வரும். எப்போது வரும், யாரால் வரும், அம்பு தொடுப்பவர்கள் யார் என்பவையெல்லாம் தெரியாது. அப்படித் தெரிந்து அறிகிற மனோநிலையிலும் அவர்கள் இருக்க மாட்டார்கள். ‘எல்லாம் கடவுள் பாத்துக்குவான்’ என்கிற ஒற்றைச் சொல்தான் அவர்களின் மிகப்பெரிய நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான், அவர்களின் கேடயம். அந்த நம்பிக்கைதான் ஆழ்ந்த பக்தி. அந்த ஆழ்ந்த பக்தியே அவர்களை அமைதிப்படுத்தும். அந்த அமைதியே உண்மையான இறைபக்தி!

‘பேர் கிடைக்கணும்னோ, புகழ் வரணும்னோ இதைச் செய்யலை. நல்ல சட்டை போட்டுக்கற மாதிரியோ, முகத்தை மழிச்சு சுத்தமா, பளிச்சுன்னு வைச்சுக்கற மாதிரியோ பக்தி கிடையாது. என்னோட செயல் ஏன், எதுக்காக, எதனாலன்னு யார்கிட்டயும் விளக்கம் சொல்லத் தேவையில்ல. நோக்கம் என்னன்னு ஐயப்பனுக்குத் தெரியும். என் நோக்கத்துலயும் செயல்லயும் தப்பு இருந்துச்சுன்னா, உள்நோக்கத்தோட செயல்படுறது உண்மைன்னா, ஐயப்பன் இந்நேரம் என்னைக் கூட சேர்த்துக்கமட்டான். தூர எறிஞ்சிருவான். ‘ச்சீ... போ’ அப்படின்னு நம்மளக் கடாசிருவான். நான் செய்றது எல்லாமே ஐயப்பனோட செயல். எல்லாத்தையும் அவன் பாத்துக்குவான். பாத்துக்கிட்டுதான் இருக்கான்’’ என்று சொல்லிவிட்டு, வழக்கம் போல் தன் செயல்களில் ஈடுபட்டார் சாமி அண்ணா.

கெட்டத்தனம் பண்ணுகிறவர்களிடம் ஓர் அறிவுரை சொன்னால் கேட்கமாட்டார்கள். ‘இதெல்லாம் செய்யாதே... பாவம்’ என்று யாரேனும் சொன்னாலும் அதையே தொடர்ந்து செய்வார்கள். ஒரு கெட்டதை, கெட்டவர்கள், தொடர்ந்து செய்யும்போது, புண்ணிய காரியமான பக்தியையும் சேவையையும் யாருக்காகவோ, யாரோ ஏதோ சொல்கிறார்கள் என்று எப்படிவிடுவார்கள் அன்பாளர்கள்? இன்னும் வீரியத்துடன்தானே பக்தியில் ஈடுபடுவார்கள்! அப்படித்தான் சாமி அண்ணாவும் எதுகுறித்தும் பொருட்படுத்தாமல் ஐயப்ப பக்தியில், ஐயப்ப சேவையில் செயல்பட்டு வந்தார்.

அடுத்த மாதம் வந்தது. அந்த மாதத்துக்கான பூஜைகள் துவங்கின. முன்னதாக, பூஜைக்கான ஏற்பாடுகளை வழக்கம்போல விமரிசையாகச் செய்து கொண்டிருந்தார் சாமி அண்ணா. ஐயப்ப பக்தர்கள் பலரும் உடன் இருந்து பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

அந்தச் சமயத்தில்தான் அந்தச் சேதி வந்தது.

தேவையே இல்லாமல் பொறாமை கொண்ட, பொறாமையால் பூஜையைக் குலைத்து, கலைத்துப் போடும் செயல்களில் இறங்கிய அந்த ஆசாமிக்கு வாத நோய் திடீரென வந்தது. கையும் காலும் செயல்படாமல் போனது.

விஷயம் தெரிந்ததும் ஓடிச் சென்று அவனைப் பார்த்தார் சாமி அண்ணா. ஆறுதல் கூறினார். ‘மன்னிச்சிட்டேன்’ என்பதை வார்த்தையாகச் சொல்லாமல், செயலாகவே செய்தார். அவருக்கு என்ன உதவிகள் தேவையோ... அவற்றை, அவரால் முடிந்த அளவுக்குப் பண்ணிக் கொடுத்தார்.

அந்த முறை மட்டுமின்றி, இன்றளவும் ஆராட்டு விழா அமர்க்களமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த விழாவின் போது ஐயன் ஐயப்பனைத் தரிசிப்பதற்காகவே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்குச் சென்று ஐயனை தரிசித்து வருகிறார்கள்.

ஐயப்ப சுவாமி... பிரத்தியட்ச தெய்வம். யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும். எவரிடம் இருந்து எதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கணக்குப் போட்டு வைத்திருப்பார் என்று சொல்லிச் சிலிர்க்கிறார் ஐயப்ப உபந்யாஸகர் அரவிந்த் சுப்ரமணியம். இவர், கல்பாத்தி ஸ்ரீநிவாச ஐயர் என்கிற சாமி அண்ணாவின் கொள்ளுப் பேரன்.

‘என்னுடைய நான்கு வயதில், என் குருசாமி கொள்ளுத்தாத்தாதான். அந்த வயதில் என்னை சபரிமலைக்கு முதன்முதலாக அப்பாதான் அழைத்துச் சென்றார். அன்று தொடங்கிய ஐயப்ப பக்தி, சபரிமலைக்கும் எனக்குமான பந்தம், தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த ஜென்மமே ஐயப்ப சுவாமிக்காகத்தான்’ என்று பக்தியும் சிலிர்ப்புமாகச் சொல்லுகிறார் அரவிந்த் சுப்ரமணியம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x