Last Updated : 09 Dec, 2020 04:36 PM

 

Published : 09 Dec 2020 04:36 PM
Last Updated : 09 Dec 2020 04:36 PM

’இருளில் இருந்துதான் ஒளி; துக்கத்தில் இருந்துதான் சந்தோஷம்; கலங்காதே!’ - பகவான் சாயிபாபா அருள்வாக்கு

’இருளில் இருந்துதான் ஒளி கிடைக்கும். துக்கத்தில் இருந்துதான் சந்தோஷத்தின் ருசியை அறியமுடியும். எனவே கலங்காதீர்கள். உங்களை இருளில் இருந்தும் ஒளியை நோக்கியும் துக்கத்தில் இருந்து சந்தோஷத்தை நோக்கியும் உங்களை நான் நகர்த்திக் கொண்டு வருவேன். தைரியமாக இருங்கள்’ என பகவான் ஷீர்டி சாயிபாபா அருளியுள்ளார்.

கண்கண்ட தெய்வம் என்று பகவான் சாயிபாபாவைப் போற்றுகிறார்கள் பக்தர்கள். ஷீர்டி எனும் புனித பூமியை நோக்கிச் சென்று அங்கே உள்ள பாபாவை வணங்கிக் கொண்டிருக்கிறார்கள் பக்தர்கள்.

தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு, தங்களின் குறைகள் என்ன, வருத்தங்கள் என்ன என்றெல்லாம் அவர்கள் சொல்லாமலேயே உணர்ந்து அவர்களுக்கு சகலத்தையும் நிவர்த்தி செய்து அருளியவர் ஷீர்டி மகான்.

’இங்கே வந்துதான் நீங்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்றில்லை. நீங்கள் இங்கே வந்தால்தான் உங்கள் பிரச்சினைகளை நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. இருந்த இடத்தில் இருந்தபடியே, என்னை நீங்கள் அழைத்தால் போதும். நான் இங்கே இருந்துகொண்டுதான் சகலரையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சகல துன்பங்களையும் தெரிந்து வருகிறேன்’ என அருளியுள்ளார் சாயிபாபா.

‘உங்கள் சிந்தனைகள் என்ன, அந்த சிந்தனைக்குள் இருக்கிற ஆசைகள் என்னென்ன, எதை விரும்புகிறீர்கள் என்றெல்லாம் நான் அறிந்து வைத்திருக்கிறேன். ‘கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். இதில் இருந்து நான் மீள்வது எப்போது என்றுதான் தெரியவில்லை பாபா’ என்று வருந்துகிறீர்கள். இவற்றையெல்லாம் நான் தெரிந்துவைத்திருக்கிறேன் என்பது தெரியவில்லையா உங்களுக்கு?

மனித வாழ்வில் எல்லாமும்தான் இருக்கின்றன என்பதை முதலில் நம்புங்கள். உலகில் எல்லாமும்தானே இருக்கிறது. பரந்த உலகில் எல்லாமும் இருக்கிற போது அந்த உலகின் ஒரு துளியாக இருக்கிற உங்களுக்கும் எல்லா விஷயங்களும் இருக்கத்தானே செய்யும். அதை நீங்கள் உணருவதே இல்லை என்பதுதான் என் வருத்தம்’ என்கிறார் சாயிபாபா.

‘இந்த பிரபஞ்சம் எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறதோ அப்படித்தான் நீங்களும் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வாழ்வில் இருளாக கிடக்கிறதே என வருந்தாதீர்கள். அந்த இருளில் ஒளியாக வந்து உங்களைக் காப்பது என்னுடைய கடமை. ஆகவே, ‘என் வாழ்க்கையே இருண்டு போய்விட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை’ என்றெல்லாம் வருந்தாதீர்கள். இருள் இருந்தால்தான் ஒளி. அப்போதுதான் ஒளியின் அருமையை நீங்கள் உணர்ந்துகொள்ளமுடியும். வாழ்க்கை எவ்வளவு உன்னதமானது என்பதை அறிந்துகொள்ளமுடியும். அப்படியொரு ஒளியை உங்கள் வாழ்வில் நான் தருவேன். உறுதியாக இருங்கள்’ என அருளியுள்ளார் பகவான் சாயிநாதன்.

‘இந்த உலகில் துக்கமும் வருத்தமும் யாருக்குத்தான் இல்லை. இருளைப் போலவே சோகங்களும் வருத்தங்களும் யதார்த்தமானவை. உங்களை இருளில் இருந்து எப்படி ஒளியேற்றி மலரச் செய்வோனோ அதேபோல், உங்களை துக்கத்தில் இருந்து மகிழ்ச்சிக்கு ஆட்படுத்துவேன் என்பதில் உறுதியாக இருங்கள். நம்பிக்கையுடன் இருங்கள்.
அதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இரண்டே இரண்டுதான். ஒன்று... பொறுமையாக இருங்கள். பொறுமை இருந்தால்தான் நிதானம் இருக்கும். நிதானத்துடன் இருந்தால்தான் அமைதியாக இருக்கமுடியும். அடுத்தது... பரோபகாரம். அன்பு செலுத்துங்கள். எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். பாரபட்சமில்லாமல் அன்பு செலுத்துங்கள். எதிர்பார்ப்பில்லாமல் உதவுங்கள். அப்படி எதையும் எதிர்பார்க்காமல் நீங்கள் உதவினால், அவை அனைத்தும் என்னை வந்து சேரும். நீங்கள் கொடுப்பவற்றை பல மடங்குகளாக உங்களுக்கு வழங்குவேன்’ என அருளுகிறார் சாயிநாதன்.

எத்தனை இன்னல்கள் வந்தாலும் பொறுமையாக இருங்கள். எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் நிதானத்துடன் இருங்கள். எல்லா மனிதர்களுடனும் அன்பாக நடந்துகொள்ளுங்கள். ‘இவர்கள்தான் என்னுடைய அன்பர்கள். பக்தர்கள்’ என்கிறார் சாயிபாபா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x