Published : 14 Nov 2020 07:47 AM
Last Updated : 14 Nov 2020 07:47 AM

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: மகர ராசி வாசகர்களே (15.11.2020 முதல் 13.11.2021 வரை)

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சமமாக மதிக்கும் நீங்கள், மற்றவர்களின் மனம்நோகாமல் பேசக் கூடியவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து வீண் அலைக்கழிப்பையும், செலவினங்களையும், தூக்கமின்மையையும் தந்த குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை உங்கள் ராசிக்குள்ளேயே அமர்ந்து ஜென்மகுருவாக தொடர இருப்பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். தலைச் சுற்றல், காய்ச்சல், சிறுநீர்த் தொற்று, ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல் வரக்கூடும். காய்ச்சிய தண்ணீரை அருந்துங்கள். காய், கனி, கீரை வகைகளை ஒதுக்காதீர்கள். சுண்ணாம்பு, நார்ச் சத்துள்ள காய்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கணவன் மனைவிக்குள் பனிப்போர் அதிகரிக்கும். பெரிய நோய் இருப்பதைப் போல் பயம் வந்துபோகும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஆயாசம் இருக்கும். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என பார்த்து காசோலை தரவேண்டும். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தில் செல்ல வேண்டாம். குடும்பத்தில் சாதாரணமாகத் தொடங் கும் பேச்சு சண்டையில் முடியும்.

குரு பகவான் உங்களின் ஐந்தாம் வீட்டைப் பார்ப்பதால் புத்திர பாக்கியம் உண்டு. பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக அமையும். மகள் உங்களைப் புரிந்து கொள்வாள். மகனின் அலட்சியப் போக்கு மாறும். குரு பகவான் ஏழாம் வீட்டையும் பார்ப்பதால் கணவன் மனைவிக்குள் அன்பு குறையாது. திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும். குரு உங்களின் ஒன்பதாம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். அவருடன் மனவருத்தம் நீங்கும். பூர்விகச் சொத்து பிரச்சினை நல்ல விதத்தில் முடியும்.
15.11.2020 முதல் 05.01.2021 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். சிறு சிறு விபத்துகள் வந்து போகும். அரசு தொடர்பான வேலைகளில் அலட்சியம் வேண்டாம்.

06.01.2021 முதல் 04.03.2021 வரை திருவோணம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் செல்வாக்கு கூடும். இழுபறியான வேலைகள் உடனே முடியும். மனைவிக்கு உடல்நிலை சீராகும். மனைவிவழி உறவினருடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வாகன யோகம் அமையும். வசதியான வீட்டுக்கு இடம் மாறுவீர்கள். பிள்ளைபாக்கியம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு.

05.03.2021 முதல் 22.05.2021 வரை மற்றும் 23.07.2021 முதல் 13.11.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் மூத்த சகோதரர் உதவுவார். புது வாகனம், சொத்து அமையும். பிரபலங்கள் ஆதரவால் பெரிய பதவியில் அமர்வீர்கள். செல்வாக்கு கூடும்.
23.05.2021 முதல் 22.07.2021 வரை சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். திருமணம் கூடி வரும். பணத்தை எப்படியாவது புரட்டி ஏதாவது ஒரு வீடோ, மனையோ வாங்கி விட வேண்டுமென முயற்சிப்பீர்கள். ஆனால் உத்தியோகத்தில் விரும்பத்தகாத இடமாற்றம் வந்து செல்லும். சிறுசிறு விபத்துகள் வரும்.

குருபகவான் 06.04.2021 முதல் 14.09.2021 வரை உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டுக்கு அதிசாரமாகியும், வக்கிரமாகியும் செல்வதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள். பழைய கடனில் ஒருபகுதி தீரும். குடும்பத்தில் திருமணம், சீமந்தம் நல்ல விதத்தில் முடியும்.

வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். கடையை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். போட்டிகளைச் சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும். வேலையாட்களால் விரயம் ஏற்படும். பழைய சரக்குகளைச் சிரமப்பட்டு விற்பீர்கள். புதிதாக வரும் விளம்பரங்களைப் பார்த்து அறிமுகமில்லாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் திறமையைச் சோதிப்பார்கள். வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டி வரும். அலுவலகத்தில் அனாவசியப் பேச்சு வேண்டாமே. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப்பாருங்கள். நீங்கள் செய்து முடித்த வேலைக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

இந்த குருப்பெயர்ச்சி எதிர்காலம் பற்றிய ஒரு பயத்தையும், கேள்விக்குறியையும் தந்தாலும் அவ்வப்போது அனுசரித்துப் போவதன் மூலமாக ஓரளவு சாதிக்க வைக்கும்.

பரிகாரம்

விழுப்புரத்துக்கு அருகிலுள்ள பனையபுரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் பனங்காட்டீஸ்வரரையும், தட்சிணாமூர்த்தியையும் சென்று வணங்குங்கள். தடைகள் குறையும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x