Published : 14 Nov 2020 07:38 AM
Last Updated : 14 Nov 2020 07:38 AM

குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: துலாம் ராசி வாசகர்களே (15.11.2020 முதல் 13.11.2021 வரை)

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

வாழ்க்கையின் உச்சகட்டத்தை எட்டிய பிறகும் கூட பழைய வாழ்க்கையை மறக்காதவர்கள். கடந்த ஓராண்டு காலமாக உங்கள் ராசிக்கு குருபகவான், மூன்றாம் இடத்தில் அமர்ந்து எந்த ஒரு வேலையையும் முழுமையாக முடிக்க விடாமல் தடுத்தார். சின்னச் சின்ன வேலைகளைக் கூடப் போராடி முடித்தீர்கள். நாலாவிதத்திலும் யோசித்துக் குழம்பினீர்கள். இளைய சகோதரரால் செலவுகளும் அலைச்சலுமே மிஞ்சியது. சொந்த பந்தங்களுக்காகச் செலவு செய்தும் நன்றியில்லாமல் போனதே! இப்போது குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை நான்காம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். காரியத் தடைகள் ஓரளவு நீங்கும். தோல்வியால் துவண்டிருந்தவர்கள் மாற்றுவழியை யோசிப்பீர்கள். நட்பு வட்டம் மாறும். வி.ஐ.பி.க்களும் அறிமுகமாவார்கள். திருமணம், கிரகப் பிரவேசத்தை போராடி முடிக்க வேண்டி வரும். மற்றவர்களை நம்பி வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் இல்லாமல் வீடு கட்டுவதில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் பனிப்போர், ஈகோப் பிரச்சினையால் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தின் காரணமாகவோ, மனத்தாங்கலாகவோ கணவன் மனைவி பிரிய நேரலாம். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் உதவி தாமதமாகக் கிடைக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருடன், தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும்.

குரு உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பயணங்களால் பயனுண்டு. மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்கள் உத்தியோகஸ்தானத்தைப் பார்ப்பதால் சிலருக்கு புது வேலை கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். குரு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

15.11.2020 முதல் 05.01.2021 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் குரு பயணிப்பதால் ஆரோக்கியம் பாதிக்கும். அலைச்சல் அதிகமாகும். சேமிப்புகள் கரையும். சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். மூத்த சகோதரர் வகையில் மனஸ்தாபம் வந்து நீங்கும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். புது முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. அரசு, வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள்.

06.01.2021 முதல் 04.03.2021 வரை திருவோணம் நட்சத்திரத்துக்கு குரு செல்வதால் வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. சவாலான காரியங்களைக் கூட கச்சிதமாக முடித்துக் காட்டுவீர்கள். வீண்பழி விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நகை வாங்குவீர்கள். கோபம் தணியும். வீடு, மனை அமையும். வாகனத்தை மாற்றுவீர்கள். பொது நிகழ்ச்சி, கோவில் விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

05.03.2021 முதல் 22.05.2021 வரை மற்றும் 23.07.2021 முதல் 13.11.2021 வரை அவிட்டம் நட்சத்திரத்துக்கு குரு செல்வதால் மனைவி வழியில் அலைச்சல் இருக்கும். முதுகுவலி, மாதவிடாய்க் கோளாறுகள் மனைவிக்கு வந்து நீங்கும். புதுச்சொத்து வாங்குவீர்கள். பிரபலங்களால் உதவியுண்டு. வீடு மாறுவீர்கள்.

23.05.2021 முதல் 22.07.2021 வரை சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை உட்கொள்ளுங் கள். யோகா, தியானத்தில் ஈடுபடுவீர்கள். வேற்றுமதம், மாற்று மொழியினரால் திடீர் திருப்பம் உண்டாகும்.
குருபகவான் 06.04.2021 முதல் 14.09.2021 வரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அதிசாரமாகி, வக்கிரமாகவும் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் கவலை நீங்கும். பணம் வரும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். சொந்தபந்தங்களுடன் இருந்த கருத்துமோதல்கள் நீங்கும். திருமணம் ஏற்பாடாகும்.

வியாபாரத்தில் நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசிக்க தவறாதீர்கள். அவசர முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். சந்தை நிலவரத்தை அறிந்து கொள்ளும் அறிவாற்றலைப் பெறுவீர்கள். விளம்பர உத்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். வங்கிக் கடன் கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் சந்தர்ப்ப, சூழ்நிலை தெரியாமல் பேசுவார்கள். உத்தியோகத்தில் உங்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்கு தள்ளுபடியாகும். வேலை நிலைக்குமா, நிலைக்காதா என்று பயம் இருந்துக் கொண்டேயிருக்கும். சம்பளம் உயரும். விரும்பத்தகாத இடமாற்றம் உண்டு.

இந்த குரு மாற்றம் உங்களை நாலாவிதத்திலும் சிரமப்பட வைத்தாலும், புதிய பாதையில் பயணித்து எதிர்நீச்சலில் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்

கோயம்புத்தூர் மாவட்டம் கோவில் பாளையத்திலுள்ள காலகாலேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தியைச் சென்று வணங்குங்கள். மன சங்கடங்கள் நீங்கும்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x