Published : 31 May 2020 16:40 pm

Updated : 31 May 2020 16:40 pm

 

Published : 31 May 2020 04:40 PM
Last Updated : 31 May 2020 04:40 PM

வீட்டு திருஷ்டி கழியும்; தடைகள் உடையும்  - ஆகாச கருடன் கிழங்கின் அற்புதம் 

aakasa-garudan

மருத்துவ ரீதியாகவும் ஜோதிட ரீதியாகவும் எண்ணற்ற மகத்துவங்களைக் கொண்டது ஆகாச கருடன் கிழங்கு.


ஆகாசக் கிழங்கில் 16 வகைகள் உள்ளன. இதன் இலையும் கிழங்கும் நமக்கு பலன் தரக்கூடியன என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.


எல்லா நிலப்பரப்பிலும் வளரக்கூடியது இது. காடு, மலைகளில் அதிகமாகவே காணப்படும். ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால் அது காற்றையும் வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் தேவையே இல்லாமல் கொடியாக இலையுடன் வளர்ந்து வரக்கூடியது.
காடு, வேலியோரத்தில் உள்ள இதன் கொடி வாடிவிட்டாலும் கூட, மழைகாலத்தில் தானாகவே கொடியாக வளர ஆரம்பிக்கும். பின்னர், அருகில் உள்ள மரம், புதர் வேலிகளில் பிடித்து மேல் நோக்கி வளரும்.


இதன் இலை கோவை இலை போன்று இருக்கும். இதன் கொடி மென்மையாக இருக்கும். இதன் பூக்கள் சிறிய, மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூத்த மறுநாளே பூக்கள் உதிர்ந்து விடும். அந்த இடத்தில் சிறிய காய் உண்டாகும். அது பழுத்துச் சிவப்பாக இருக்கும். பிறகு காய்ந்து கீழே விழுந்து விடும். விதை மூலமும், கிழங்கு மூலமும் இன விருத்தி உண்டாகும் என்று தெரிவிக்கிறார்கள் தாவரவியல் நிபுணர்கள்.

இதன் மருத்துவக் குணங்கள் ஏராளம். பாம்பு கடித்தவுடன் ஆகாச கருடன் கிழங்கில் இருந்து ஒரு எலுமிச்சை அளவுக்கு நறுக்கி வெறும் வாயில் கடித்துத் தின்னும்படி செய்ய வேண்டும். சில நிமிடங்களில் வாந்தியும் பேதியும் வந்து விஷம் வெளியே வந்துவிடும். உயிர் பிழைத்த பின் சம்பந்தப்பட்ட விஷக்கடி பட்டவரை, 24 மணி நேரம் வரை தூங்கவிடக்கூடாது. பசிக்கு அரிசியைக் குழைய வேக வைத்து, கஞ்சியாகக் கொடுக்க வேண்டும்.

மண்ணுளிப் பாம்பு மனிதனை நக்கி விட்டால் குஷ்டம் என்ற பெருவியாதி வெண்குட்டம் கருமேக ரணங்களை உண்டு பண்ணும். இந்தப் பாம்பின் விஷம் நக்கியவுடன் உடலில் பாய்ந்து உடனே தன் குணத்தைக் காட்டாது. நாளாவட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பரவி மேற்கண்ட வியாதிகளை உண்டு பண்ணும். இதற்கு முற்றிய ஆகாச கருடன் கிழங்கின் மேல் தோலை சீவி எடுத்து விட்டு, கிழங்கை பொடியாக நறுக்கி வெயிலில் காயவைத்து, சுக்கு போல காய்ந்த பின் நன்றாக இடித்து மாச்சல்லடையில் சலித்து எடுத்து வாய் அகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை 10 கிராம் அளவு தூளை எடுத்து வாயில் போட்டு, சிறிதளவு வெந்நீர் குடித்து வரவேண்டும். இப்படியாக, நாற்பது நாட்கள் கொடுத்து வந்தால் மண்ணுளிப் பாம்பின் விஷம் முறியும். உடலில் தோன்றிய கோளாறு அனைத்தும் மறையும். இப்படி பல்வேறு மருத்துவ குணங்கள் இதில் உள்ளன.


ஆகாச கருடன் கிழங்கு இலையைக் கொண்டு வந்து பொடியாக நறுக்கி வைத்துக் கொண்டு, ஒரு சட்டியை அடுப்பில் வைத்து தேக்கரண்டியளவு விளக்கெண்ணெயை விட்டு, எண்ணெய் காய்ந்ததும் மூன்று கைப்பிடியளவு இலையைப் போட்டு, இலையை பதமாக வதக்கியவுடன் அதை சுத்தமாக துணியில் சிறிய முட்டை போலக் கட்டிக்கொண்டு, தாங்கும் அளவிலான சூட்டுடன் வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கமெல்லாம் குணமாகும்.


ஆகாச கருடன் என்ற இந்த கிழங்கை கயிற்றில் கட்டி தொங்க விட்டால் ஆகாயத்தில் பறக்கும் கருடனைப் போலவே தோற்றம் அளிக்கும். மேலும் காற்றில் உள்ள ஈரத்தை ஈர்த்து வாங்கிக்கொண்டு, உயிர் வாழும் சக்தி கொண்டது.


மூலிகைகளில் அஷ்டகர்ம மூலிகைகள் என்பவை மிகச் சிறப்பு வாய்ந்தவை. இவை அஷ்ட கர்மமான மாந்திரீக கர்மங்களுக்கு உதவும் என்கிறார்கள் ஜோதிடர்கள். இதற்கு சாகா மூலி என்ற பெயரும் உண்டு.


இந்தக் கிழங்கில் சில அமானுஷ்ய சக்திகள் உண்டு. வீட்டிற்கும் நமக்கும் ஏற்படும் திருஷ்டி, தோஷங்களைப் போக்கும் தன்மை கொண்டது. மேலும் எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம் முதலான மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீய விளைவுகளில் இருந்தும் திருஷ்டி, அடுத்தவரின் பொறாமை முதலானவற்றில் இருந்தும் காக்கப்படுவார்கள்.


வீட்டில் திருஷ்டி முழுவதும் கழிந்துவிடும். இல்லத்தில் பொன்னும் பொருளும் சேரும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

வீட்டு திருஷ்டி கழியும்; தடைகள் உடையும்  - ஆகாச கருடன் கிழங்கின் அற்புதம்ஆகாச கருடன் கிழங்குதிருஷ்டி விரட்டும் ஆகாச கருடன் கிழங்கு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author