Last Updated : 05 May, 2020 09:50 AM

 

Published : 05 May 2020 09:50 AM
Last Updated : 05 May 2020 09:50 AM

சித்திரை பிரதோஷம்; தோஷம் நீக்கும் பிரதோஷம்! ;  பத்து பேருக்காவது தயிர்சாதம் கொடுங்களேன்! 


சித்திரை மாத பிரதோஷம் இன்று. செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷம் ரொம்பவே மகிமை மிக்கது. செவ்வாய் முதலான சகல தோஷங்களையும் போக்கும் பிரதோஷ நாளில், பத்துபேருக்கேனும் தயிர்சாதம் வழங்குங்கள். நம்மையும் நம் இல்லத்தாரையும் இனிதே வாழச் செய்வார் சிவனார்!


மாதந்தோறும் இரண்டு பிரதோஷ நாட்கள் உண்டு. எந்தப் பிரதோஷத்தையும் தவறவிடாமல், சிவபெருமானை வேண்டுவதும் ருத்ரம் உள்ளிட்டவற்றைப் பாராயணம் செய்வதும் மகா புண்ணியம் என்கின்றன ஞானநூல்கள். அந்த நாளில்,நம்மால் முடிந்த அளவு, பத்துபேருக்கேனும் தயிர்சாதம் வழங்கினால், நமக்கும் நம் குடும்பத்தாரும் நம் சுற்றத்தாருக்கும் பல நல்லதுகளை, சத்விஷயங்களை வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்!

இந்த பிரதோஷ நாளில், சிவாலயங்களுக்குச் சென்று சிவனாரையும் நந்திதேவரையும் வணங்குவது வளம் சேர்க்கும். ஒவ்வொரு கிழமைகளில் பிரதோஷம் வரும். எந்தக் கிழமையில் பிரதோஷம் வரும் போது, என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.


ஞாயிறு பிரதோஷம்:

சூரிய திசை நடப்பவர்கள், ஞாயிறு அன்று வரும் பிரதோஷ நாளில் சிவபெருமானை நினைத்து பிரார்த்தனை செய்தால், சூரிய பகவானின் அருளும் நமக்கு கிட்டும். இந்த திசையினால் வரும் துன்பம் விலகும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்!

திங்கள் பிரதோஷம்:

பிரதோஷத்தில் ஸோமவாரம் (திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், திங்கள் அன்று வரும் பிரதோஷத்திற்கு சிவ வழிபாடு செய்வது சிறப்பு! இதனால், மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிட்டும். மன வலிமை பெருகும்.

செவ்வாய் பிரதோஷம்:

செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோஷத்தன்று சிவநாமம் சொல்லியும் சிவ துதி சொல்லியும் பாராயணம் செய்து வணங்கினால், ருணம் மற்றும் ரணத்தையெல்லாம் நீக்கியருள்வார் சிவபெருமான். இதனால், செவ்வாயால் வரும் கெடுதல்கள் அனைத்தும் நீங்கும்.பித்ரு தோஷம் விலகும். முன்னோர் ஆசி கிடைக்கும்.
கடன் தொல்லை தீரும். எந்த ராசி, நட்சத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைத்தீஸ்வரன் கோயில் சென்று சித்தாமிர்த தீர்த்தத்தில் பிரதோஷ நேரத்திலே நீராடி, வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும் ரணமும் நீங்கும் என்பது சத்தியம்!

புதன் பிரதோஷம்:

புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோஷதன்று, சிவபூஜை செய்வது மகா புண்ணியம். . இதனால், புதனால் வரும் கெடு பலன்கள் நீங்கும். கல்வி சிறக்கும். அறிவு வளரும். குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். கலைகளில் சிறந்து திகழ்வார்கள்.

வியாழன் பிரதோஷம்:

குரு பார்க்க கோடி நன்மை. குரு திசை நடப்பவர்கள், குருவை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள், வியாழன் அன்று வரும் பிரதோஷத்திற்குச் சென்று, குருவுக்கு நிகரான சிவனாரை வணங்கவேண்டும். இதனால், கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். குரு பலம் கூடும்!

வெள்ளி பிரதோஷம்:

சுக்ர திசை நடப்பவர்கள், சுக்கிரனை லக்னாதிபதியாகக் கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோஷத்தன்று, வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்து, பாயசம் உள்ளிட்ட இனிப்பு வகைகள் ஏதேனும் ஒன்றை நைவேத்தியம் செய்து, வேண்டிக்கொண்டால், உறவு வளப்படும். சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.சுக்கிர யோகம் கிடைக்கப் பெறலாம்!

சனி மஹா பிரதோஷம்:

சனி பிரதோஷம் என்று கூறமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். சனிக்கிழமை பிரதோஷம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. சனிக் கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று தென்னாடுடைய சிவனை மனதார வேண்டிக்கொண்டு, தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, பத்துபேருக்கேனும் வழங்கினால், மகா புண்ணியம்.

ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு சென்று சிவதரிசனம் செய்யுங்கள். இதனால், ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருடம் பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். என்கிறது சிவாகமம். கிரக தோஷத்தால் ஏற்படும் தீமை குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனருள் கிடைத்து, பரிபூரணமாய் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.


இன்று செவ்வாய்க்கிழமை (5.5.2020). செவ்வாய்ப் பிரதோஷம். சித்திரை மாதத்துப் பிரதோஷம். இந்தநாளில், சிவனாரை நினைத்து பூஜித்து விளக்கேற்றுங்கள். பத்துபேருக்காவது தயிர்சாதம் வழங்குங்கள். எந்த தீயசக்திகளும் அண்டாது காப்பார் ஈசன். செவ்வாய் முதலான தோஷங்கள் அனைத்தும் விலகி நிம்மதியாய் வாழ்வீர்கள்!

இன்றைய பிரதோஷ பூஜையை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பல ஆலயங்கள், அபிஷேக ஆராதனைகளை நேரலையில் வெளியிடுகின்றன. வீட்டிலிருந்தபடியே அதைக் கண்ணாரத் தரிசியுங்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x