Published : 28 Apr 2020 16:53 pm

Updated : 28 Apr 2020 16:54 pm

 

Published : 28 Apr 2020 04:53 PM
Last Updated : 28 Apr 2020 04:54 PM

’உங்கள் வீட்டில் உத்திர நட்சத்திரக்காரர்கள் இருந்தால், அந்த வீட்டில் செல்வத்துக்கு குறைவில்லை!’ 

27-natchatirangal-a-to-z-34

27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 34 ;


‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
இந்தப் பதிவில் உத்திரம் என்னும் சூரியனின் நட்சத்திரம் பற்றிச் சொல்லப் போகிறேன். இந்த நட்சத்திரம் சிம்ம ராசியில் ஒரு பாதமும், கன்னி ராசியில் மற்ற மூன்று பாதங்களுமாக அமைந்திருக்கும். நட்சத்திர வரிசையில் 12வது நட்சத்திரம்.

உத்திரம் நட்சத்திரத்தில்தான் ஶ்ரீமகாலட்சுமி தாயார் பிறந்தார். செல்வவளத்திற்கு அதிபதியே பிறந்த நட்சத்திரம் என்பதால் இந்த உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு இயல்பாகவே செல்வவளம் என்பது எல்லையில்லாமல் இருக்கும். பொருளாதாரக் கஷ்டம் என்பதே இருக்காது. இன்னும் சொல்லப்போனால் உத்திர நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் அந்தக் குடும்பமே செல்வ கடாக்ஷம் மிக்க குடும்பமாக மாறும்.

வீட்டிற்கு அடித்தளம் எவ்வளவு முக்கியமோ அதேபோல வீட்டைத் தாங்கும் உத்திரம் என்பதும் அத்தனை முக்கியம். வீட்டைத் தாங்குவதென்றால்.. பொருளாதாரப் பிரச்சினைகள் இல்லாத நிலைக்கு வரும். சண்டை சச்சரவுகள் இல்லாத குடும்பமாகத் திகழும். கல்வியில் அறிவார்ந்தவ்ர்களாக அந்தக் குடும்பம் இருக்கும். செய்தொழிலில் நிகரற்றவர்களாக இருப்பார்கள். துன்பம் இல்லாத பெருவாழ்வு வாழ்வார்கள். இன்பம் பொங்கும் குடும்பமாய் வாழ்தல் எனும் நிலையில் சிறப்புற அந்தக் குடும்பம் உதாரணமாகத் திகழும்!

உத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிரிகள் என்று எவரும் இருக்க மாட்டார்கள். எதிரிகள் இருந்தாலும் அந்த எதிரிகள் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பார்கள். இவர்களுக்கு அமையும் நண்பர்கள் எல்லாம் சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தில் இருப்பார்கள். எனவே இயல்பாகவே இவர்களும் சமூகத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்துவிடுவார்கள். அதீத நேர்மையாளர்களாக இருப்பார்கள். சிறிய தவறுக்குக் கூட இடம் கொடுக்க மாட்டார்கள். தவறாக உணர்ந்தால் அந்த இடத்தில் கொஞ்சமும் இருக்க மாட்டார்கள்.

வெட்டி வா என்றால் கட்டிக் கொண்டு வரும் சாமர்த்தியக்காரர்கள், உத்திர நட்சத்திரக்காரர்கள்.
என்ன நம்பமுடியவில்லையா? இதோ இப்போது நம்புவீர்கள் பாருங்கள்!

சிவன்- விஷ்ணுவின் அம்சமான சுவாமி ஐயப்பன் பிறந்தது இந்த உத்திரம் நட்சத்திரத்தில்தான். புலிப்பால் கேட்டதற்கு புலியையே அழைத்து வந்தவர் அல்லவா ஐயப்ப சுவாமி, இந்த சம்பவத்திற்குப் பின்தான் பந்தள மன்னன் ஐயப்பனை தெய்வம் என்று உணர்ந்தார் என்கிறது ஐயப்பப் புராணம்.

எனவே உத்திர நட்சத்திர அன்பர்கள் எதையும் முழுமையாக, யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு தன் திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தி, எடுத்த வேலைகளை கனகச்சிதமாக முடிப்பார்கள்.

மன்மதன் பிறந்த நட்சத்திரம் உத்திரம். அவன் கையிலிருக்கும் கரும்பு உத்திரம் நட்சத்திரம். இதில் சோகம் என்ன தெரியுமா? மன்மதன் ஈசனின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்டதும் உத்திரம் நட்சத்திர நாளில்தான்.

எனவே, காமத்தின் அடையாளமும் உத்திரம். அந்த காமத்தை அடக்குவதும் உத்திரம். புரியவில்லைதானே? அளவான காமம் உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. அதீத சம்போகம் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஆயுளையும் குறைக்கும்.
சரி, இவற்றையெல்லாம் இந்த உத்திரம் நட்சத்திரம் ஏன் சொல்ல வேண்டும்? மற்ற நட்சத்திரங்கள் சொல்ல வேண்டியதுதானே? என்ற கேள்வி வரலாம்.
நியாயமான கேள்விதான்!

காலபுருஷ தத்துவம் அடிப்படையில் ஆறாமிடம் நோயைக் குறிக்கும். இந்த ஆறாமிடம் என்பது கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரம் முதல் பாதம் மட்டுமே சிம்மத்தில் இருக்கும். மீதி மூன்று பாதங்கள் கன்னி ராசியில் இருக்கும். கன்னி ராசியின் தொடக்கமே உத்திரம் இரண்டாம் பாதத்தில் தான் தொடங்குகிறது. எனவே நோயைக் காட்டுவதும், அந்த நோய் வர காரணம் என்ன என்பதையும் இந்த உத்திரமே உரைக்கத் தகுதியானது.
இந்த இடம் கன்னி என்பதை கவனியுங்கள். இளம் வயதில் கட்டுப்பாடு இல்லாத போகம், நோயை எளிதாக வர வைத்துவிடும். அதிலும் குறிப்பாக நீரிழிவு நோய், ஆண்மைக் குறைவு, முழு அளவிலான ஈடுபாடு இல்லாத தாம்பத்தியம் முதலான பிரச்சினைகளும் அடங்கும். எனவேதான் நோயை வரவைப்பதும், நோயை கட்டுப்படுத்துவதும் இந்த உத்திரம் நட்சத்திரமே என்று சொன்னேன்.

இன்னும் சில தகவல்களைச் சொல்கிறேன்...

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிகப்பேர் உத்தியோகம் பார்ப்பதற்கே விரும்புவார்கள். அதிலும் சளைக்காமல் உழைக்கக் கூடியவர்கள். உத்திர நட்சத்திரக்காரர்களில் பெரும்பாலும் அரசு ஊழியர்களாக இருப்பார்கள். குறிப்பாக வாரிசு அடிப்படையில் வேலை பெற்றவர்களே அதிகம் இருப்பார்கள். தனியார் நிறுவனங்களிலும் அதிகார பதவி, தன் திறமைக்கு வெகுமதியாக உயர் பதவி என்றிருப்பார்கள். .

உடல் உழைப்பு, புத்தி உழைப்பு என இரண்டும் கலந்தவர்கள் உத்திர நட்சத்திரக்காரர்கள். தனக்கு கீழ் இருப்பவர்களின் வேலையில் திருப்தி இல்லையென்றால் தானே களத்தில் இறங்கி வேலை செய்ய தயங்காதவர்கள் இவர்கள்.

உத்திரம் நட்சத்திரக்காரர்கள், ஆடிட்டர், கணக்காளர் போன்ற துறைகளில் சாதிப்பவர்கள். வங்கி அதிகாரி, பதிப்பகம், எழுத்துத்துறை, கணித மேதை, ஆராய்ச்சியாளர், விஞ்ஞானிகள், புதுவித மருந்துகளை கண்டுபிடித்தல், தூதரகப் பணி, தகவல் தொழில் நுட்பம், சங்கேத வார்த்தை நிபுணர், பண்டைய மொழி ஆராய்ச்சி, நுணுக்கமான திறமைகள் (அரிசியில் பேர் எழுதுவது போன்ற நுட்பமான கலைகள்), துப்பறிதல், பாரம்பரிய மருத்துவர், புதிய கண்டுபிடிப்புகள், கண்ணாடிகளில் புதுமை செய்தல், கதை கவிதை எழுதுதல், எவர் மனதையும் படிக்கும் ஹிப்னாடிசம், மனோதத்துவ மருத்துவர், பின்னணிப் பாடகர், டப்பிங் ஆர்டிஸ்ட், இசைக் கருவிகள் வாசித்தல், மிமிக்ரி, ஆண்பெண் என குரல்வளம், இயற்கை ஆர்வலர் போன்ற துறைகளில் இருப்பார்கள்.

உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு விதவிதமான சுவைகளை அறியும் ஆர்வம் இருக்கும். தேநீர் சுவை அறிதல், மது சுவை அறிதல், காபி, ஐஸ்கிரீம் என உணவு வகைகளில் சுவை அறியும் நிபுணராகவும் இருப்பார்கள். கேட்டரிங் செஃப் என்னும் உணவுத் தயாரிப்பாளர் போன்ற துறைகளிலும் இருப்பார்கள்.

விருப்பமான உணவு மட்டுமல்லாமல், புதுவிதமான உணவுகளையும் விரும்பி உண்பார்கள். இதனாலேயே உடல் நல பாதிப்புக்கும் ஆளாவர்கள். ஏற்கெனவே கூறியது போல் நீரிழிவு நோய், தோல் உபாதைகள், நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சினைகள் வரும் வாய்ப்பு உள்ளது.

கடன் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து மீள்வது மிகக் கடினம். அதேபோல கடன் கொடுத்தாலும் திரும்ப வரும் என்பது உறுதியில்லை. எனவே கடன் கொடுப்பது வாங்குவது இரண்டுமே கூடாது. மேலும், மறைமுக எதிரிகள் அதிகம் இருக்கும், ஆனால் எந்த ஒரு எதிரியும் உத்திர நட்சத்திரக்காரர்களை வெல்ல முடியாது.

உத்திர நட்சத்திரக்காரர்களின் வளர்ச்சி பலருக்கும் கண்ணை உறுத்தும். உறவினர்கள், நண்பர்கள் என எவரும் உங்கள் முகத்திற்கு நேராக சிரித்துப் பேசுவார்கள். முதுகுக்குப் பின்னால் புறம் பேசுவார்கள். இதில் உங்கள் வாழ்க்கைத்துணையும் அடங்கும் என்பதுதான் சோகம்!
இன்னும் உத்திரம் குறித்த விவரங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்.


- வளரும்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

’உங்கள் வீட்டில் உத்திர நட்சத்திரக்காரர்கள் இருந்தால் அந்த வீட்டில் செல்வத்துக்கு குறைவில்லை!’27 நட்சத்திரங்கள்; ஏ டூ இஸட் தகவல்கள் - 34சொல்வாக்கு ஜோதிடர் ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author