Published : 04 Sep 2019 09:00 am

Updated : 04 Sep 2019 09:00 am

 

Published : 04 Sep 2019 09:00 AM
Last Updated : 04 Sep 2019 09:00 AM

ஸ்ரீமஹா பெரியவர் அருள் டிரஸ்ட் சார்பில் ‘சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்’- விசாலாட்சி நடராஜனின் பாடல் குறுந்தகடு, ஜி.ராஜகோபால் எழுதிய நூல்கள் வெளியீடு

sri-maha-periyavar-trust

கே.சுந்தரராமன்

சென்னை 

ஸ்ரீ மஹா பெரியவர் அருள் டிரஸ்ட் சார்பில் ‘சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்’ என்ற 14 பாடல்கள் கொண்ட குறுந்தகடு சென்னை மயிலாப்பூர் ஆர்.ஆர்.சபாவில் வெளியிடப்பட்டது. அத்துடன் காஞ்சி மஹா பெரியவரின் சீடர் ஜி.ராஜகோபால் எழுதிய இரு நூல்களும் வெளியிடப்பட்டன.

ஸ்ரீ மஹா பெரியவா அருள் டிரஸ்ட் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்’ என்ற குறுந்தகட்டை கர்னாடக இசைக் கலைஞர் அருணா சாய்ராம் வெளியிட, கடம் வித்வான் விக்கு விநாயக்ராம், கர்னாடக இசைக் கலைஞர்கள் ஓ.எஸ்.தியாகராஜன், விஜய் சிவா ஆகியோர் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டனர். இப்பாடல்களை விசாலாட்சி நடராஜன் காஞ்சி பெரியவர் பேரில் எழுதியுள்ளார். காஞ்சி பெரியவர் மீது கொண்ட பக்தியால் அவர் பெயரில் பாடல்கள் புனைந்ததாகக் கூறியுள்ளார்.

குறுந்தகடு வெளியீடு குறித்து விசாலாட்சி நடராஜன் கூறியதாவது:

எனக்கு இப்போது 90 வயதாகிறது. என்னுடைய 14 வயதில் முதன்முதலில் காஞ்சி மஹா பெரியவரை சந்தித்தேன். அன்றுமுதல் அவர் பெயரில் பாடல்கள் பல எழுதியுள்ளேன். எனக்கு 17 வயதில் திருமணம். அப்போதும் புகுந்த வீட்டினர் ஆதரவோடு, பெரியவரை சந்தித்து ஆசி பெற்று, அவர் மீது பாடல்கள் எழுதி வந்தேன். எனக்கு கர்னாடக சங்கீதம் அவ்வளவாகத் தெரியாது. இருப்பினும் இந்தப் பாடல்களை இந்த ராகத்தில் அமைக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். புத்தகமாகவோ குறுந்தகடாவோ வெளியிடுவது குறித்து அப்போது சிந்திக்கவில்லை.

இப்போது காஞ்சி மஹா பெரியவரின் சீடர் ஜி. ராஜ கோபாலின் முயற்சியால் என் பாடல்கள் குறுந்தகடாக வெளி வருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

நிகழ்ச்சியில் காஞ்சி மஹா பெரியவரின் சீடர் ஜி.ராஜகோபால் எழுதிய 2 நூல்கள் வெளியிடப் பட்டன. ‘என் வாழ்வில் மஹா பெரியவா பாகம் 2’ என்ற தமிழ் நூலும், ‘ஷவர்ஸ் ஆஃப் மிராக்கில்ஸ் என்ற ஆங்கில நூலும் (என் வாழ்வில் மஹா பெரியவா பாகம் 1 நூலின் ஆங்கிலப் பதிப்பு) வெளியிடப்பட்டன. எழுத்தாளரும், அமுதசுரபி மாத இதழின் ஆசிரியருமான திருப்பூர் கிருஷ்ணன் வெளியிட, முதல் பிரதியை ஆன்மிக உபன்யாசகர்கள் பி.சுவாமிநாதன் மற்றும் கணேஷ சர்மா, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் முரளி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். ஆங்கிலப் பிரதிக்கான மொழி பெயர்ப்பை விஷ்வாஸ் கோவிந்தராஜன், ராகவன் சம்பத் குமார் செய்துள்ளனர்.

நூல்களை வெளியிட்டு திருப்பூர் கிருஷ்ணன் பேசியதாவது:

பொதுவாக கோடைக் காலத்தில் தர்பூசணி, எலுமிச்சை பழங்கள் அதிகம் விளையும். கோடை வெப்பத்தில் இருந்து அனைத்து தரப்பு மக்களும் தங்களை தற்காத்துக் கொள்ள இயற்கை அளித்த வரங்கள்தாம் இப்பழங்கள். அதுபோல ஒவ்வொரு காலத்திலும் மக்களை வழிநடத்த ஒரு மகான் அவதரிப்பார். அப்படி நமக்கு இறைவன் அளித்த வரம் மஹா பெரியவா.

அவர்களும் மனிதர்கள்தானே

மஹா சுவாமி அனைவரிடத்தும் அன்பு செலுத்தினார். இறை நம்பிக்கை உள்ளவர்கள், இறை நம்பிக்கை இல்லாதவர்களிடத்தும் அவர் காட்டிய கருணை அளவிலா தது. ஒரு கோடைக் காலத்தில், இறை நம்பிக்கை இல்லாத சிலர், ஒரு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டு காஞ்சி சங்கர மடம் அமைந்த சாலை வழியாக செல்லப் போவதாக மஹா பெரியவர் உணர்ந்தார். உடனே மடத்தில் இருப்பவர்களை அழைத்து, வழக்க மாக கோடைக் காலத்தில், மடத்தின் உள்ளே வைக்கப்படும் நீர் மோர் அண்டாவை மடத்தின் நுழைவாயிலில் வைக்கச் சொன்னார். மடத்தில் உள்ளவர்க ளுக்கு பெரியவர் ஏன் இப்படிக் கூறினார் என்பது புரியவில்லை.

இருப்பினும் பெரியவர் கூறிய படி, நீர் மோர் அண்டாவை மடத்தின் நுழைவாயிலில் வைத்தனர். சிறிது நேரம் கழித்து போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மடம் அமைந்த சாலையைக் கடந்து சென்றனர். அப்போது மடத்தில் உள்ளவர்கள் பெரியவரின் அருகே வந்து, “நீங்கள் சொன்னதன் அர்த்தம் இப்போது புரிந்தது. நிறைய பேர் வந்துவிட்டதால், அண்டாவை 3 முறை நிரப்பினோம்” என்றனர். மஹா பெரியவர், “ஆமாம். சிலருக்கு மடத்தின் உள்ளே வருவதற்கு ஒருவித தயக்கம் இருக்கும். இப்போது நுழைவாயிலில் வைத்ததால், அவர்கள் தங்கள் தாகம் தீர்த்துக் கொண்டு சென்றனர். என்ன இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தானே?” என்றார்.

இதுபோன்ற பல சம்பவங் களைத் தொகுத்து அமைந்துள்ள ஜி.ராஜகோபாலின் நூல்களை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வாறு திருப்பூர் கிருஷ்ணன் பேசினார்.

பிரபஞ்ச மஹான்

நிகழ்ச்சியில் ஜி.ராஜகோபால் கூறியதாவது: நம் அறியாமை நீங்கி, நாம் வாழ்வில் சிறக்க, நாம் ஒவ்வொருவரும் ஒருவரை குருவாக ஏற்க வேண்டும். அப்படி ஒரு குருவைத் தேடும் சிரமத்தை நமக்குக் கொடுக்காமல், மஹா பெரியவர் நமக்கு குருவாகக் கிடைத்துள்ளார்.

அவர் நம் கண்களுக்குத் தெரிந்த பிரபஞ்ச மஹான். அனைவரும் அவர் கூறிய மொழிப்படி நடப்போம். அவர் பொன்மொழிகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதே, இந்நூல்கள் வெளியீட்டின் நோக்கம்.

துறவறம் என்பது அனைத்தை யும் துறப்பது மட்டுமல்ல, பிடிக்காததை ஏற்றுக் கொள்வதும் ஆகும். பொதுவாக வாழ்க்கையின் முற்பகுதியை நாம் வாழ்க்கை சுகங்களில் வீணடித்து விடுகிறோம். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகாவது நாம் நல்லனவற்றைத் தேடிச் செல்ல வேண்டும் என்றார்.

குறுந்தகடு, நூல்கள் வெளியீட்டு நிகழ்வுகளுக்குப் பிறகு, குறுந்தகட்டில் இடம்பெற்ற பாடல்களை நாதப்பிரம்மம் இசைக் குழுவைச் சேர்ந்த சாத்தூர் சகோதரிகள் லலிதா சந்தானம், புவனா ராஜகோபால் மற்றும் சேலம் டாக்டர் காயத்ரி வெங்கடேசன் ஆகியோர் பாடினர். இதைத் தொடர்ந்து டாக்டர் அம்பிகா காமேஷ்வரின் ‘ரசா’ அமைப்பின் இசை நாடகமும், கடம் வித்வான் விக்கு விநாயக்ராமின் குரு சமர்ப்பணம் நிகழ்ச்சியும் நடைபெற்றன. ரேவதி சங்கரன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.


ஸ்ரீமஹா பெரியவர் அருள் டிரஸ்ட்சர்வம் ஸ்ரீ சந்திரசேகரம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author