Published : 03 Sep 2019 10:17 AM
Last Updated : 03 Sep 2019 10:17 AM

ஆவணி சஷ்டியில் அருள் தருவான் முருகன்

வி.ராம்ஜி


ஆவணி சஷ்டியில், முருகப்பெருமானை மனதார நினைத்து தரிசித்துப் பிரார்த்தனை செய்தால், அருளையும் பொருளையும் அள்ளித்தருவான் வடிவேலன்.


மாதந்தோறும் சஷ்டி திதி வரும். அது, முருகப்பெருமானுக்கு உகந்த நன்னாளாகப் போற்றப்படுகிறது. சஷ்டியில், முருகனை வணங்கி வழிபட்டால், சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.


எனவே, சஷ்டியில் விரதம் மேற்கொண்டு கந்தனை வழிபடுவார்கள் பக்தர்கள். காலை முதல் மாலை வரை விரதம் மேற்கொள்வார்கள். திரவ உணவு மட்டும் எடுத்துக்கொண்டு விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு.


மேலும் அன்றைய நாளில், சொட்டுத்தண்ணீர் கூட அருந்தாமல், விரதம் இருப்பவர்களும் உண்டு. அதேசமயம், இயலாதவர்கள், வயதானவர்கள், உடல்நலம் குன்றியவர்கள் இப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டிய அவசியமோ கட்டாயமோ இல்லை. அவர்கள், கந்தனின் துதியைச் சொல்லி வரலாம். கந்தசஷ்டி கவசம் முதலானவற்றைப் பாராயணம் செய்யலாம்.


மாலையில், அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை வாங்கி சார்த்தலாம்.
நாளை 4.9.19 புதன்கிழமை அன்று சஷ்டி. ஆவணி மாத சஷ்டி. இந்தநாளில், வள்ளி மணவாளனை தரிசியுங்கள். முடிந்தால், மாலையில் முருகப்பெருமானுக்கு வீட்டில் விளக்கேற்றி, சர்க்கரைப் பொங்கல் அல்லது எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு வழங்குங்கள். வீட்டின் திருஷ்டியெல்லாம் கழிந்துவிடும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள் என்பது உறுதி.


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x