Last Updated : 12 Feb, 2015 01:14 PM

 

Published : 12 Feb 2015 01:14 PM
Last Updated : 12 Feb 2015 01:14 PM

சொர்க்கக் கோட்டைகள்

ஈராக் நாட்டைச் சேர்ந்தவர் இறைஞானி பெஹ்லூல். இவர், நிலையாமையை உணர்த்தும் விதமாகப் பாலைவனத்தில் மண்ணாலான கோட்டை, கொத்தளங்களைக் கட்டுவார். அழகிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்படும் அந்த மண் கோட்டைகளைக் கட்டி முடித்ததும் உடைத்துவிடுவார். ஒருநாள். பெஹ்லூல் வழக்கம்போலவே பாலைவனத்தில் மண்கோட்டைகள் அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்.

அந்த வழியே ஜனாதிபதி ஹாரூன் ரஷீத், தனது பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்தார். பெஹ்லூலைக் கண்டதும் நின்றவர், அவரிடம் சென்று ‘சலாம்’ தெரிவித்து நலம் விசாரித்தார்.

“இறையருளால் நலமாக உள்ளேன்!” என்று பெஹ்லூலும் பதில் அளித்தார்.

“பெஹ்லூல்! இந்த மண்கோட்டை அழகாக.. அற்புதமாக உள்ளதே! இதன் விலை என்ன?” என்று விசாரித்தார் ஹாரூன் ரஷீத்.

ஆட்சியாளருக்கு ஏற்ற விதமாக, “நூறு பொற்காசுகள்!” என்று விலை சொன்னார் பெஹ்லூல்.

“என்ன..! மண்ணாலான இந்தக் கோட்டை, நூறு பொற்காசுகளா?” வியப்பால் வாய் பிளந்தார் ஹாரூன் ரஷீத்.

“ஜனாதிபதி அவர்களே..! நீங்கள் வாங்கினாலும் சரி.. வாங்காவிட்டாலும் சரி... இதன் விலை நூறு பொற்காசுகள்தான்! ஒரு பைசாவும் குறைக்க முடியாது! அதன் பிறகு உங்கள் விருப்பம்” என்றார் கறாராக பெஹ்லூல்.

அவ்வளவு விலை கொடுத்து மண்கோட்டையை வாங்க விருப்பமில்லாமல் ஹாரூன் ரஷீத் சலாம் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

அன்றிரவு ஜனாதிபதி ஹாரூன் ரஷீத் அரண்மனையில் உறங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கனவு கண்டார்.

அந்தக் கனவில், தன்னை, வானவர் ஒருவர் சொர்க்கத்தில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட கோட்டை, கொத்தளங்களுக்கு நடுவே அழைத்துச் செல்வதைப் போலவும், ‘அற்புதமான இந்த மாடமாளிகைகளை வடிவமைத்தவர் யார்?’ என்று கேட்டபோது, ‘பாலைநில வழிப்போக்கர்கள் பெஹ்லூலிடம் விலைக்கு வாங்கிய கோட்டைகள்தான் இவை!’ என்று அதற்கு வானவர் பதில் சொல்வது போலவும் இருந்தது.

கனவைத் தொடர்ந்து விழித்துக் கொண்ட ஹாரூன் ரஷீத், தூக்கம் வராமல் தவித்தார். பெஹ்லூலைச் சந்தித்து எப்படியாவது தனக்காக ஒரு சொர்க்கக் கோட்டையை வாங்கிவிட வேண்டும் என்று துடியாய் துடித்தார்.

கருக்கலிலேயே பாலைவனம் சென்றவர், பெஹ்லூலைத் தேடி அலைந்தார். கடைசியில் ஓரிடத்தில், மண்கோட்டைகளை அமைக்கும் பணியில் இருந்த பெஹ்லூலைக் கண்டார்.

மிகவும் மென்மையான குரலில், சலாம் தெரிவித்த ஹாரூன் ரஷீத், “பெஹ்லூல்! நேற்று நீங்கள் சொன்ன விலைக்கே மண்கோட்டையை வாங்கிக் கொள்கிறேன்!” என்றார்.

“ஜனாதிபதி அவர்களே! அது நேற்றைய விலை. இன்றைய விலையோ பத்து லட்சம் பொற்காசுகள். அதுவும் உடனடி ரொக்கமாக!” புன்முறுவலுடன் பெஹ்லூல் சொன்னார்.

“என்ன..! நேற்று நூறு பொற்காசுகள் என்று விலை சொல்லிவிட்டு இன்று பத்து லட்சம் பொற்காசுகள் என்கிறீரே பெஹ்லூல்?” அதிர்ச்சியுடனும் வியப்புடனும் ஹாரூன் ரஷீத் கேட்க,“என்ன செய்வது ஜனாதிபதி அவர்களே! என் கோட்டைகளுக்கு வானவர்கள் வாங்கிச் செல்லும் அளவுக்கு ஏக கிராக்கி உள்ளது.

அதிலும், நேற்று நீங்கள் கேட்டது பழைய கோட்டை. இப்போது நான் சொன்னது புத்தம் புதிதாக கட்டிய மண்கோட்டை. அதுதான் இந்த விலை. அத்துடன், நீங்கள் கொடுக்கும் பொற்காசுகளும் எனக்காக அல்ல. ஏழை, எளியோரின் தேவைக்கானது” என்று பதிலளித்தார் இறைஞானி பெஹ்லூல் அமைதியாக.

ஒரு அரும் வாய்ப்பு நழுவிப்போனதை எண்ணி ஜனாதிபதி ஹாரூன் ரஷீத் அங்கிருந்து மௌனமாய் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x