Published : 04 Jul 2019 10:48 am

Updated : 04 Jul 2019 10:48 am

 

Published : 04 Jul 2019 10:48 AM
Last Updated : 04 Jul 2019 10:48 AM

பிரச்ன உபநிடதம்: அழிவற்ற நிலையை அடைவான்

இந்த உலகம் எப்படி உண்டாயிற்று, உயிரினங்கள் எவ்வாறு தோன்றின, மனிதன் என்பவன் யார், கடவுள் யார், மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பன போன்ற சில அடிப்படைக்கேள்விகளை நெஞ்சில் சுமந்து கொண்டு பாரதத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆறு பேர் அறிவைத் தேடி புறப்பட்டனர்.

பிப்பலாத முனிவர் என்பவரைத் தேடிச். சென்று அவர்கள் கேட்ட ஆறு கேள்வி களுக்குப் பதிலாக அமைந்ததால் இது பிரச்ன உபநிடதம் என்று அழைக்கப்படுகிறது. ஆறு கேள்விகளும் ஆறு அத்தியாயமாக அமைந்து, 67 மந்திரங்களை உடையது இந்த உபநிடதம்.


மாண்டூக்ய உபநிடதத்தில் பேசப்படும் விழிப்பு, கனவு, ஆழ்ந்த தூக்கம் என்ற மூன்று நிலைகளை ஆராய்வதால், பிரச்ன உபநிடதத்தை மாண்டூக்ய உபநிடதத்தின் துணை உபநிடதம் என்றும் கொள்வர்.

தேடலைத் தொடங்கிய ஆறு பேர்

பரத்வாஜரின் மகனான சுகேசன், சிபியின் மகனான சத்தியகாமன், சூரியனின் பேரனான கார்க்கியன், அஸ்வலரின் மகனான கெளசல்யன், விதர்ப நாட்டைச் சேர்ந்த பார்க்கவன், காத்யரின் மகனான சுபத்தி ஆகியோர் இறைவனை நாடுபவர்கள். பிப்பலாத முனிவரை அணுகி, அந்த சம்பிரதாயத்தின்படி விறகுகளைக் காணிக்கையாகக் கொடுத்தனர்.

அவர், அவர்களின் தகுதியைச் சோதிப்பதற்காகவும், தகுந்த மனநிலையை அவர்களிடம் உருவாக்குவதற்காகவும் ஓராண்டு காலம் பிரம்மச்சரியத்துடன் கூடிய தவவாழ்வில் அவர்களை, ஈடுபடச் சொன்னார். அதன் பிறகு நீங்கள் விரும்புவதுபோல் கேள்விகளைக் கேளுங்கள். எங்களுக்குத் தெரியுமானால் நிச்சயமாக அனைத்தையும் உங்களுக்குச் சொல்கிறோம் என்று கூறினார். உயர்நிலைத்தேடலை விரும்பிய அந்த அறுவரும் ஒரு வருடம் தவவாழ்வில் ஈடுபட்டனர். பின்னர் அவரை அணுகி முதல் கேள்வியைக் கேட்டனர்.

தேடலின் தொடக்கம்

மாணவர் சுபந்தி பிப்பலாத முனிவரை அணுகி, “தெய்வ முனிவரே! இந்த உயிரினங் கள் எங்கிருந்து தோன்றின?” என்று கேட்டார்.

“உயிரினங்களைப் படைக்க விரும்பிய படைப்புக் கடவுள் தவத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு ஆகாயத்தையும் பிராணனையும் படைத்தார். சூரியன் ஆற்றல், சந்திரன் ஜடப்பொருள். சூரியனின் ஒளியைப்பெற்றுப் பிரதிபலிக்கிறது. சூரியன் தன் ஒளியினால் பிராணனை வழங்குகிறான். பிராணசக்தியே காலத்தையும், அதன் மூலம் வாழ்க்கையையும் இயக்குகிறது. மாதத்தின் ஒரு நாளில் பகலே பிராணன், இரவே ஜடம். உணவே படைப்புக் கடவுள். உணவிலிருந்தே விந்து உருவாகிறது. அதிலிருந்தே உயிரினங்கள் தோன்றுகின்றன”.

அடுத்ததாக விதர்ப நாட்டைச் சேர்ந்த பார்க்கவன், பிப்பலாத முனிவரிடம் கேட்டார். “தெய்வ முனிவரே! ஒருவனை எத்தனை தேவர்கள் தாங்குகின்றனர்? அவர்களில் யாரெல்லாம் இவற்றை இயக்குகின்றனர்? இவர்களில் யார் முக்கியமானவர்?”

இதற்கான விடையை ஒரு கதைபோலத் தருகிறார் முனிவர். ஆகாயம் அல்லது வெளி முதல் பூமி வரையுள்ள முதல் ஐந்து சக்திகளும் தூலமானவை. இவற்றால் நம் உடம்பு உருவாக்கப்பட்டுள்ளது. பேச்சு, மனம், பார்வை, கேட்கும் தன்மை ஆகியவை நுண் சக்திகள். இந்த ஒன்பது சக்திகளும் நமது வாழ்வை இயக்குகின்றன.

ஒரு முறை இந்த தேவசக்திகள், நாங்கள்தான் இந்த உடம்பை ஒருங்கிணைத்துத் தாங்குகிறோம்” என்றன. இதைக் கேட்ட பிராணன் “குழம்பாதீர்கள். என்னை ஐந்தாகப் பிரித்துக்கொண்டு, இந்த உடம்பை ஒருங்கிணைத்து இயக்குவது நானே” என்று கூறியது.

பிராணன் தன் பெருமையை விளக்குவதற்காக வெளியேறுவது போல் பாவனை காட்டியது. மற்ற புலன்கள் அனைத்தும் செயலிழந்தன. பிராணனின் முக்கியத்துவம் அறிந்து அதன் மகிமையைத் துதித்தன. அனைத்து இயற்கை சக்திகள் இயங்குவதற்குக் காரணமாக பிராணன் விளங்குகிறது. வீரம் உடம்பின் ஆற்றல். அறிவு மனத்தின் ஆற்றல். உடம்பு, மனம் இரண்டையும் இயக்குவது பிராணன்.”

பிராணனின் செயல்கள்

அச்வலரின் மகனான கெளசல்யன் கேட்டார். “தெய்வத்துக்கு நிகரானவரே! இந்தப் பிராணன் எங்கிருந்து பிறந்தது? எப்படி இந்த உடம்பில் வருகிறது. எப்படி உடம்பில் நிலைபெறுகிறது. எதனால் வெளியேறுகிறது. எப்படி புற உலகையும் அக உலகையும் தாங்குகிறது?”

பிப்பலாத முனிவர் இவ்வாறு கூறினார். “பிராணன் ஆன்மாவில் இருந்து தோன்றுகிறது. மனிதனும் அவனது நிழலும் போல் ஆன்மாவில் பிராணன் பரவியுள்ளது. இதயம் என்பது பிராணனின் இருப்பிடம். இதயத்தில் இருந்து உடல் முழுவதும் ஆயிரக்கணக்கான நாடிகள் பரவியுள்ளன. அதன்வழியில் கட்டளைகள் இடப்பட்டு, அனுபவங்கள் பெறப்படுகின்றன. இந்தப் பணியைச் செய்வது வியானன்.

இறுதிக் கணத்தில் மனத்தில் தோன்றிய எண்ணத்துடன் மனிதன் பிராணனை அடைகிறான். பிராணன் உதானனின் துணையுடன் அவனை, அவன் விரும்பிய உலகிற்கு கொண்டு செல்கிறது. பிராணனை வசப்படுத்தியவன், அழிவற்ற நிலையை அடைவான்”.

மனிதனின் மூன்று நிலைகள்

அடுத்து எழுப்பப்பட்ட மூன்று கேள்வி களும், மனிதனின் நனவு நிலை, கனவு நிலை, தூக்கம் ஆகிய மூன்று நிலைகளைக் குறித்தும், ஓங்கார மந்திரம், ஆன்ம அனுபூதி ஆகியவை குறித்தும் அமைந்தன. மாண்டூக்ய உபநிடதத்தில் இவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. பிராணன் முதலிய 16 பகுதிகளும் ஆன்மாவை நாடி, ஆன்மாவை அடைந்து அதில் மறைகின்றன.

பகுதிகள் அற்றதாக, மரணமற்றதாக ஆன்மா திகழ்கிறது. பிப்பலாத முனிவர், ஆறு கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டு, “தேர்ச்சக்கரத்தின் அச்சில் ஆரக்கால்கள் கூடுவதுபோல், யாரில் பதினாறு பகுதிகள் நிலைபெற்றுள்ளனவோ, அறிவதற்குரிய அந்த ஆன்மாவை அறியுங்கள்” என்று கூறினார். சீடர்கள் அறுவரும் பிப்பலாத முனிவரை வணங்கி விடைபெற்றனர்.


பிரச்ன உபநிடதம்அழிவற்ற நிலைதேடலின் தொடக்கம்பிராணனின் செயல்கள்மூன்று நிலைகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author