Published : 10 Aug 2017 10:32 AM
Last Updated : 10 Aug 2017 10:32 AM

தெய்வத்தின் குரல்: தெய்வ நினைப்புடன் தூக்கம்

வா

ழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனசில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப் பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும். இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா என்று நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஒரு பரீ்ட்சை வைத்துக்கொள்ளலாம்

அதாவது, அன்றன்றைக்கும் நாம் தூங்குகிறோம் அல்லவா? இதையும் ஒரு சாவு மாதிரி என்றுதான் சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. தூங்குகிறபோது கட்டைபோல ஒன்றும் தெரியாமல், ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம்?

இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது. ‘நித்யப் பிரளயம்’என்று தூக்கத்தைச் சொல்வார்கள். இப்படித் தினமும் நாம் ‘சாகிற’போது பகவானையே ஸ்மரித்துக்கொண்டு ‘சாக’ முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்க்கலாம்.

தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்போடேயே தூக்கத்தில் ஆழ்ந்துவிட வேண்டும். வேறே நினைப்பு வரக் கூடாது. சொல்லும்போது சுலபமாக இருக்கும். ஆனால், பண்ணிப் பார்த்தால் எத்தனை கஷ்டம் என்று தெரியும்.

இஷ்ட தெய்வம் அல்லது குரு

காமாக்ஷியோ நடராஜாவோ தக்ஷிணாமூர்த்தியோ வேங்கடரமண சுவாமியோ, முருகனோ – எந்தத் தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த இஷ்ட தெய்வத்தையே அல்லது தெய்வத்துக்கு சமானமாக நமக்கு சாந்தியும் சந்துஷ்டியும் தருகிற ஒரு குரு, அல்லது மஹானையோ வேறே நினைப்பு வராமல் ஸ்மரிப்பதென்றால், ‘இதிலே என்ன கஷ்டம் இருக்கிறது? மனசுக்கு ரம்யமாகவும் ஆறுதலாகவும் இருக்கப்பட்ட இந்த ரூபங்களை நினைப்பதில் என்ன சிரமம்?’ என்றுதான் தோன்றும்.

ஆனால் எதனாலோ, சிறிது நேரமானால் இத்தனை நல்ல, திவ்யமான ஸ்மரணையை விட்டுவிட்டு மனசு வேறேங்கேயாவதுதான் போய் விழும்; அப்படியே கண்ணை அசக்கித் தூக்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இப்படி ஏமாறாமல் பழக்கிக்கொண்டால் சாகிற சமயத்திலும் பகவானை விடாமல் நினைக்க முடியும் என்ற நிச்சயத்தைப் பெறலாம். எல்லாம் அப்யாஸத்தில், விடாமுயற்சியில்தான் இருக்கிறது. நம்முடைய சிரத்தையைப் பொறுத்து பரமாத்மாவே கைகொடுப்பார்.

ஆக வாழ்நாள் பூராவும் எதிலே ரொம்பவும் ஈடுபாடு இருக்கிறதோ, அதுதான் அந்திமத்திலும் ஒருத்தனை இழுக்கும். வாழ்நாள் முழுவதும் பகவத் சிந்தனையோடு இருந்தால்தான் கடைசியிலும் அது சித்திக்கும். சரி, அது தானாகவே சித்தித்துவிட்டுப் போகிறது.

ஒருவன் ஜீவிய காலம் முழுவதும் ஈஸ்வர பக்தி பண்ணிக்கொண்டேயிருந்தால், கடைசியில் இவன் படுக்கையில் விழும்போதும் தானே, ‘ஆட்டோமாடிக்’-ஆக அதே ஸ்மரணந்தான் இருக்கப் போகிறது.

ஆனதால் “ஸர்வகாலத்திலும் என்னை நினை” என்று சொன்ன கிருஷ்ண பரமாத்மா “அந்திமத்திலும் என்னை நினை” என்று ஒன்றைச் சேர்த்திருக்க வேண்டாமே? சர்வகால ஸ்மரணை தானாக அந்திமத்திலும் வந்துவிட்டுப் போகிறது.

அந்திமத்தில் நினைப்பது

இங்கேதான் மோக்ஷத்துக்குக் கொஞ்சம் குறுக்கு வழி (short-cut) சொன்ன மாதிரி இருக்கிறது. ‘ஒருத்தன் அந்திமத்தில் எதையெதை நினைத்துக்கொண்டு உடம்பை விட்டாலும் அதையே போய் அடைகிறான்’ என்று கீதையில் ஸ்பஷ்டமாகச் சொல்கிறார்.

வாழ்நாள் முழுக்க நினைக்காத ஒன்றை ஒருத்தன் அந்திமத்தில் நினைத்துவிட்டாலும் சரி, அந்திமத்தில் நினைத்த அதையே மரணத்துக்குப் பின் அடைந்துவிடுவான் என்று அர்த்தம் பண்ணிக்கொள்ள இடம் இருக்கிறது.

வாழ்நாள் முழுதும் நினைப்பதுதான் அந்திமத்தில் நினைவுக்கு வரும் என்பது பொதுவாக வாஸ்தவம். ஆனால், இப்படியில்லாமல், அசாதாரணமாக, வாழ்நாள் பூரா நினைக்காத ஒன்று பிராணன் போகிறபோது நினைப்புக்கு வந்துவிட்டால்? எப்படியானாலும் அந்தக் கடைசி நேரத்தில் எதை நினைத்தானோ அதை இவனுக்கு சுவாமி கொடுத்துவிடுகிறார்.

‘இதற்கு முன்னாடி நீ அதை நினைக்கவில்லையே!’ என்று இவனைக் கேட்பதில்லை. கீதா வாக்கியத்திலிருந்து இப்படித்தான் அர்த்தமாகிறது.

வாழ்க்கையில் அவ்வளவாக பக்தி பண்ணாவிட்டாலும் கூட, சாகிற சமயத்திலே ஈஸ்வர ஸ்மரணத்தோடு மூச்சை விட்டால்போதும்; அவனை அடைந்துவிடலாம் என்று கீதை சொல்வதாக ஏற்படுகிறது. இது ரொம்ப ‘ஷார்ட்-கட்’ தானே?

தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x