Last Updated : 17 Aug, 2017 10:16 AM

 

Published : 17 Aug 2017 10:16 AM
Last Updated : 17 Aug 2017 10:16 AM

சொற்கேட்ட விநாயகர்

ம்பதாண்டுகளுக்கு முன்னர், இந்த விநாயகர் குருந்த மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார். அவர் மீது கொளுத்தும் வெயிலும் அடிக்கும்; கொட்டும் மழையும் பெய்து நனைக்கும். அப்போது, இந்த இடத்தில் வசித்துவந்த எளிய தொழிலாளர் வீட்டுக் குழந்தைகள், மரத்து நிழலில் விளையாடுவதற்காக இங்கே வருவார்கள். அப்படி விளையாடும் பிள்ளைகள் சில நேரங்களில் தங்களுக்குப் பசி எடுத்துவிட்டால், விநாயகரின் தொந்தி வயிற்றில் குச்சியால் அடித்து, ‘எங்களுக்குப் பசிக்குதய்யா...’ என்பார்களாம். சற்று நேரத்தில், விநாயகருக்குப் பொங்கல்வைத்து, மோதகம் உருட்டி, வடைமாலை சாத்தி படைப்பதற்காக யாராவது ஒருவர் அங்கு வந்துவிடுவார்களாம்.

சொல் கேட்ட ஐயா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோ.வேலங்குடியில் கோயில் கொண்டிருக்கும் சொற்கேட்ட விநாயகருக்குத்தான் இப்படி முன்னுரை தருகிறார்கள் அந்த ஊர் மக்கள். “ஐயா வாசல்ல வந்து நின்னு, எனக்கு இந்தப் பிரச்சினை... இதை நீதான் தீர்த்து வைக்கணும்” என்று சொன்னால் போதும். நாம் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டுக்கொள்ளும் விநாயகர், மலை போல் நிற்கும் பிரச்சினையையும் பனி போலக் கரைத்து வைப்பார். அதனால்தானே இவருக்கு சொற்கேட்ட ஐயான்னு பேராச்சு” என்கிறார்கள்.

அன்றைக்கு விளையாட்டுக் குழந்தைகள், விநாயகரின் தொந்தியைத் தட்டி சாப்பாடு கேட்டார்கள். ஆனால், இப்போது வாரத்தில் மூன்று நாளாவது, யாரும் கேட்காமலேயே சொற்கேட்ட விநாயகர் வாசலில் இரண்டு மூட்டை அரிசி சமைத்து அன்னதானம் போடுகிறார்கள்; ஒவ்வொரு அன்னதான வைபவத்தின் பின்னணியிலும் ஏதாவதொரு நேர்த்திக்கடன் நிச்சயம் இருக்கும்.

 

முனீஸ்வரரும் ஐக்கியம்

இங்கே விநாயகருடன் சேர்ந்து முனீஸ்வரரும் ஐக்கியமாகி இருப்பது எங்குமில்லாத சிறப்பு. அதனால் இவரை, சொற்கேட்ட முனியய்யா என்றும் அழைக்கிறார்கள். முனீஸ்வரரும் சேர்ந்திருப்பதாலேயே இந்தக் கோயிலுக்கு, மேல் கூரையோ விமானமோ இல்லை. மேல் கூரை அமைக்கக் கோயில் நிர்வாகத்தினர் எவ்வளவோ முயன்றும் அத்தனையும் தட்டிப் போய்விட்டதாம்.

இதனால், சுற்று மண்டபம் உள்ளிட்டவற்றை அமைத்துவிட்டு விநாயகரின் தலைக்கு மேலே பறவைகள் எச்சமிடாமல் இருப்பதற்காக லேசாகத் தென்னங் கூரை மட்டும் போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள். எந்தப் பக்கமிருந்தும் விநாயகரைப் பார்க்க வேண்டும் என்பதற்காக விநாயகர் சன்னிதியைச் சுற்றிலும் கம்பித் தடுப்பு மட்டுமே அமைத்திருக்கிறார்கள்.

சொற்கேட்ட விநாயகரின் திறந்தவெளி சுற்றுப் பிரகாரத்தில் ராகு கேது, முருகன், தட்சிணாமூர்த்தி சன்னிதிகள் இருக்கின்றன. வடக்கில் இருக்கும் குருந்த மரத்தில் மரத் தொட்டில்களும் பிரார்த்தனை சீட்டுகளும் ஏராளமாய்க் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. இதனால் உடனடியாகப் பலன் கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இங்கே திரளான பக்தர்கள் கூட்டத்தைப் பார்க்க முடியும். சொற்கேட்ட விநாயகர் மரத்து நிழலில் அமர்ந்திருந்தாலும் இவரைச் சுற்றி அன்னதான மண்டபம், இலவசத் திருமண மண்டபம் உள்ளிட்டவை அனைத்து வசதிகளுடன் எழுந்து நிற்கின்றன.

மாசி மாதம் மகா சிவராத்திரி விழா ஐயா வாசலில் அமோகமாய் நடக்கிறது. அன்று மாலை, ஊருக்குள் உள்ள பெரிய நாயகி அம்மன் கோயிலிலிருந்து பக்தர்கள் காவடி எடுத்துவந்து விநாயகருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அன்று தங்க அங்கியில் ஜொலிப்பார் சொற்கேட்டான். அன்றிரவு ஐந்து இடங்களில் அன்னதானம் நடக்கும். அத்தனையிலும் கூட்டம் நிரம்பி வழியும். இதையடுத்து, பங்குனி மாதத்தில் பேட்டையார்களால் பூச்சொரிதல் விழா எடுக்கப்படுகிறது. இதற்காக வேலங்குடி, கோட்டையூர் பகுதிகளிலிருந்து பூத்தட்டுகள் எடுத்துவரப்பட்டு விநாயகருக்குப் பூச்சொரியப்படும்.

முத்து அங்கி

விநாயகர் சதுர்த்தியன்று, சொற்கேட்ட விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அன்று ஒருநாள் மட்டும் முத்து அங்கியில் விநாயகரைத் தரிசிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x