Last Updated : 10 Aug, 2017 10:35 AM

 

Published : 10 Aug 2017 10:35 AM
Last Updated : 10 Aug 2017 10:35 AM

நூற்றாண்டுகள் கடக்கும் அந்தியூர் திருவிழா

ரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூர் வெற்றிலையும் திங்கள்கிழமைதோறும் கூடும் அந்தியூர் சந்தையும் தமிழகம் தாண்டியும் புகழ்பெற்றவை.

அந்தியூர், கர்நாடக மாநிலம் கொள்ளேகால் தாலுகா பகுதியையொட்டி அமைந்துள்ளது. மூன்றில் ஒரு பங்கு காடுகளை உள்ளடக்கியது. கொள்ளேகால் தாலுகாவில் இப்பகுதியில் உள்ள பல தமிழர் குடும்பங்கள் நெடுங்காலமாக விவசாயம் செய்து வருகின்றனர். யானை, மான், கரடி, சிறுத்தை, காட்டெருது, செந்நாய், குரங்கு, மலைப்பாம்புகள் எனக் காட்டு விலங்குகள் இங்கு நிறைந்துள்ளன.

இயற்கை எழில் மிகுந்த சூழல் கொண்ட அந்தியூரின் மற்றொரு தனிச்சிறப்பு ஸ்ரீ குருநாதசுவாமி தேர்த் திருவிழா ஆகும். இத்திருவிழா நடைபெறும் ஸ்ரீ குருநாத சுவாமி கோயில் அந்தியூரிலிருந்து நேர்வடக்காக கர்நாடகம் நோக்கிச் செல்லும் பர்கூர் மெயின் ரோட்டில் இரண்டாவது கிலோ மீட்டரில் புதுப்பாளையத்தில் உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதத்தில் இத்திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆகஸ்ட் 12-ல் இத்திருவிழா நிறைவுபெறும். சுமார் ஒருவார காலம் நடைபெறும் இத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காகச் சாதி, மத, இன, பேதமின்றி உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டம், வெளி மாநிலம் எனப் பல்வேறுபட்ட பகுதிகளிலிருந்து நாள்தோறும் லட்சக்கணக்கானோர் உற்சாகத்துடன் வருகிறார்கள்.

சாந்தப்பன் சாந்தா

சுமார் 600 ஆண்டுகள் பழமையான இக்கோயிலை, தற்போது நிர்வகித்து வருபவர்களின் மூதாதையர்கள் சிதம்பரம் அருகே பிச்சாவரம் என்னுமிடத்தில் வசித்தவர்கள் என்று கருதப்படுகிறது. இக்கோயில் பூசாரியின் வீட்டுப் பெண்ணை ஆர்க்காடு நவாப் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துப் பெண் கேட்டு அச்சுறுத்தியதால், அக்குடும்பம் அங்கிருந்து வெளியேறிப் புதுப்பாளையத்தை அடைந்துள்ளது. இப்போதும் திருவிழாவுக்கு முன்பு இப்பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் பிச்சாவரம் சென்று வருகின்றனர்.

அப்போது அவர்களின் பூஜைக் கூடையில் கொண்டுவரப்பட்ட மூன்று கற்சிலைகள்தான் இக்கோவிலில் தெய்வங்களாக உருப்பெற்றுள்ளன. அக்கூடையைக் கொண்டுவந்தவர் இவர்களில் மூத்தவரான சாந்தப்பன் என்பவர் ஆவார். அதன் நினைவாக இன்றும் இக்குடும்பத்திலோ இவர்களின் வகையறாவின் குடும்பத்திலோ பிறக்கும் மூத்த குழந்தை ஆண் என்றால் சாந்தப்பன் என்றும், பெண் என்றால் சாந்தா என்றும் பெயர் சூட்டி பரம்பரையைப் பாதுகாக்கின்றனர். காலப்போக்கில் காமாட்சி அம்மன், பெருமாள், குருநாதசுவாமி எனப் பெயரிட்டனர்.

புதுப்பாளையத்தில் கோயில் அமைந்துள்ள இடத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் வடமேற்குத் திசையில் வனக்கோயில் உள்ளது. இந்த வனக்கோயிலுக்குப் புதுப்பாளையத்திலிருந்து ஒரு பல்லக்கில் காமாட்சியம்மனையும் சிறிய மகமேரு தேரில் பெருமாளையும் 60 அடி உயரம் கொண்ட பெரிய மகமேரு தேரில் குருநாதசுவாமியையும் வைத்து இப்பகுதியின் நூற்றுக்கணக்கான விவசாயிகளும் உழைப்பாளி மக்களும் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும், உயர்ந்தபட்ச ஒற்றுமையுடன் தூக்கிவரும் காட்சியைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்.

மாட்டுச்சந்தை, குதிரைச்சந்தை

இத்திருவிழாவின் தனிச்சிறப்பே மாட்டுச்சந்தையும் குதிரைச்சந்தையும்தான். மாட்டுச்சந்தை பண்டைய காலத்தில் பண்டமாற்று முறையில் உருவானதாகக் கோயில் அறங்காவலர் குடும்பத்தார் கூறுகின்றனர். மைசூரை ஆண்ட திப்புசுல்தான், அந்தியூர் பகுதிக்கு வருகை தரும்போது குதிரைகளை விற்கவரும் வியாபாரிகளால் இந்தக் குதிரைச் சந்தை உருவானதாகக் கூறப்படுகிறது. திப்புசுல்தான் இங்கே வந்து தங்குவதற்காக ஒரு கோட்டையை அமைத்ததாகவும் தகவல்கள் உள்ளன. தற்போதும் அந்தியூர் நகரில் பேருந்துநிலையத்தின் பின்புறம் உள்ள பகுதி கோட்டை என்றுதான் அழைக்கப்படுகிறது.

இச்சந்தையில் ஜல்லிக்கட்டு மாடு, காங்கேயம் காளை உள்ளிட்ட அனைத்து வகை உயர்ரக மாடுகளும் வெளி மாநில உயரகக் குதிரைகள் உட்பட அனைத்து வகை குதிரைகளும் விற்பனைக்கு வருகின்றன. மாடுகள் ஆயிரக்கணக்கிலும், குதிரைகள் நூற்றுக்கணக்கிலும் வரும். இவை ஆயிரம் ரூபாய் தொடங்கி பல லட்சம் ரூபாய் வரையில் விலை போகும். குதிரைகளை அலங்கரித்து நாட்டியம் ஆடவைப்பது உள்ளிட்ட நிகழ்வுகளில் ஈடுபடுத்துவார்கள். அது பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பெரிய, பெரிய வணிக வளாகங்களில் பொருட்களை வாங்கினாலும்கூட இங்குள்ள ஆடிப் பண்டிகைக் கடைவீதியில் ஒரு சிறு பொருள் வாங்கினால்தான் இப்பகுதிப் பெண்களுக்கு மகிழ்ச்சி என்கிற அளவுக்கு இக்கடைகள் அவர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன.

விவசாயத் தின்பண்டங்கள்

சோளக்கருது என்று இம்மக்கள் அழைக்கும் மக்காச்சோளமும் பேரிக்காயும் இவ்விழாவில் பிரசித்தி பெற்ற விவசாயத் திண்பண்டங்கள். கொள்ளேகால் இனிப்பு மிட்டாயும் தேங்காய் மிட்டாயும் இந்த விழாவின் தனி அடையாளங்கள். இவற்றை வாங்கிச் சென்றால்தான் குருநாதசுவாமி தேர்த் திருவிழாவுக்குச் சென்று வந்ததாக அர்த்தமாகும் என்னும் அளவுக்கு இவை தனித்துவம் பெற்றவை.

எத்தனை மாற்றங்கள் வந்தாலும் பழந்தமிழர் வாழ்வின் கலை, பண்பாடு, வர்த்தகத்தின் அடையாளச் சின்னமாக அந்தியூர் திருவிழா திகழ்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x