Last Updated : 10 Aug, 2017 11:40 AM

 

Published : 10 Aug 2017 11:40 AM
Last Updated : 10 Aug 2017 11:40 AM

அஷ்டவக்கிரர் காட்டிய நிஜம்

ண்டைய காலத்தில் ஜனகன் என்றொரு மன்னர் இருந்தார். அவர் ஒரு ரிஷியும்கூட. ஒரு நாள் அரண்மனையில் சிப்பந்திகள் சாமரம் வீச, காவலர்கள் அறை வாசலுக்குக் காவலிருக்க ஜனகன், தன் மலர்ப் படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தார். உறக்கத்தின் ஆழத்தில் பக்கத்து நாட்டு அரசன், தன்னைப் போரில் தோற்கடித்துச் சிறைபிடித்துப் போய் சித்திரவதை செய்வதாகக் கனவு வந்தது. வதை தொடங்கும்போது திடுக்கிட்டு விழித்தார். சிப்பந்திகள் சாமரம் வீச, எந்த அபாயமுமின்றி பாதுகாப்புடன் காவலர்கள் அரண் செய்யும் மலர்ப் படுக்கையில் படுத்துக் கிடப்பதை உணர்ந்து பெருமூச்சு விட்டார்.

மீண்டும் அவர் உறக்கத்தில் ஆழ்ந்தார். மீண்டும் அதே கனவு வந்தது. தூக்கம் கலைந்து பார்த்தபோது, மிகவும் நிம்மதியான இடத்தில் இருப்பதை உணர்ந்தான்.

இப்போது ஜனகனைப் பல எண்ணங்கள் தொந்தரவு செய்தன. உறக்கத்தில் அந்தக் கனவுலகம் நிஜம்போல் தோன்றியது. இப்போது விழித்திருக்கும்போது புலனுலகம் நிஜம்போல் தோன்றியது. இரண்டில் எது நிஜம் என்பதை அவர் அறிந்துகொள்ள விரும்பினார்.

அவர் சந்தித்த அறிஞர்கள், ஞானிகள் யாருக்கும் பதில் தெரியவில்லை. பல வருடங்கள் விரயமாகத் தேடியும் அந்தக் கேள்விக்கும் விடை இல்லை. அப்போதுதான் அஷ்டவக்கிர மகாகீதையை எழுதிய அஷ்டவக்கிரர் அரண்மனைக்கு வந்தார். அஷ்டவக்கிரம் என்றால், எட்டு இடங்களில் கோணல் என்று பொருள். தந்தையின் சாபம் காரணமாகப் பிறக்கும்போதே சிதைந்த உடலமைப்புடன் பிறந்தவர். வேதங்களில் கரை கண்டவர்.

ஆரம்பத்தில் மன்னர் ஜனகன், அஷ்டவக்கிரரின் தோற்றத்தைக் கண்டு அவரை மதிக்கவேயில்லை. ஒருகட்டத்தில் அஷ்டவக்கிரரின் ஞானத்தை உணர்ந்தார். தான் அதுவரை கண்ட அறிஞர்களிடமில்லாத அறிவு எப்படி அவரிடம் வந்தது என்று கேட்டார் ஜனகன்.

“என் பால்யத்தில் இருந்தே எனக்கு அனைத்து வழிகளும் முடக்கப்பட்டன. அதனால், நான் பேரார்வத்தோடு என் ஞானத்தின் வழியைத் தேடிக்கொண்டேன்” என்றார் அஷ்டவக்கிரர்.

“அப்படியேன்றால் சரி, என் தீராத சந்தேகத்துக்கு விடை சொல்” என்றார் ஜனகன்.

“மன்னா! விழிப்பு நிலை, கனவு நிலை இரண்டுமே பொய்தான். நீங்கள் விழித்திருக்கும்போது கனவுலகம் இருக்காது. கனவுலகில் இருக்கும்போது புலனுலகம் இருக்காது. இரண்டுமே மாயைதான்”.

“அப்படியென்றால் எதுதான் நிஜம்?” என்றார் மன்னர்.

“இந்த இரண்டையும் மீறிய நிலை ஒன்று இருக்கிறது. அதைக் கண்டடையுங்கள். அது மட்டும்தான் நிஜமானது.”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x