Last Updated : 17 Aug, 2017 10:11 AM

 

Published : 17 Aug 2017 10:11 AM
Last Updated : 17 Aug 2017 10:11 AM

ஜென் கதை: பரிசு யாருக்குச் சொந்தம்?

மு

ன்னொரு காலத்தில் ஒரு மாவீரர் வாழ்ந்தார். அவர் முதியவராக இருந்தபோதும், அவரிடம் சவாலாகச் சண்டையிடுவதற்கு வரும் வீரர்களுடன் போரிடுவதை நிறுத்தவேயில்லை. அவருக்குத் தோல்வியென்பதும் கிடையாது. இதனால் அவரது புகழ் நாடு முழுக்கப் பரவியது. எல்லாப் பகுதிகளிலிருந்தும் சீடர்கள் அவரிடம் போர்க்கலை பயில்வதற்காக வந்துகொண்டிருந்தனர்.

அந்த மாவீரர் வாழ்ந்த கிராமத்துக்குள் ஒரு பொல்லாத இளம் வீரன் வந்தான். முதியவரைப் போருக்கு அழைத்தான். இளம் வீரனின் அறைகூவலை ஏற்றுப் போரிடக் களிப்புடன் சம்மதித்தார் முதியவர். இருவரும் போரிடத் தயாரான நிலையில் திடீரென்று அந்த இளம்வீரன், முதிய வீரரைக் கடுமையாகப் பேசத் தொடங்கினான். அவர் மீது புழுதியை இறைத்து முகத்திலும் உமிழ்ந்தான். முதியவர் அனைத்தையும் கேட்டு முகத்தைத் துடைத்தபடி அமைதியாக இருந்தார். தொடர்ந்து பல மணிநேரம் அவரை உலகில் உள்ள அனைத்து கொடுஞ்சொற்களாலும் தாக்கித் தூஷித்தான். ஆனால், அந்த முதிய வீரரோ சலனம் கொள்ளாமல் மௌனமாய் நின்றார். வசைபாடிக் களைத்த வீரன் ஒரு கட்டத்தில் தனது தோல்வியை உணர்ந்தான். அவமானம் தாளாமல் அன்றிரவே அந்த ஊரைவிட்டு ஓடினான்.

முதியவரின் அமைதி சீடர்களுக்கு அதிருப்தியைத் தந்தது. “எப்படி அவனைத் தப்பிக்க விட்டீர்கள்? இவ்வளவு நிந்தனைகளையும் சகித்துக்கொண்டு ஏன் மௌனமாக இருந்தீர்கள்?” என்று கோபத்துடன் கேட்டனர்.

“யாரோ ஒருவர் உங்களுக்கு ஒரு அன்பளிப்பு கொண்டு வருகிறார். நீங்கள் அதை ஏற்க மறுக்கிறீர்கள். அப்போது அது யாருக்குச் சொந்தம்?” என்று அமைதியாகப் பதிலளித்தார் முதியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x