Published : 02 Jun 2016 04:49 PM
Last Updated : 02 Jun 2016 04:49 PM

நிலையான துறவி - சமணம்

மகத நாட்டை சிரேணிகன் என்கிற மன்னர் ஆண்டு வந்தார். மன்னருக்கு சேலினி எனும் மனைவியும் பாரீசர் எங்கிற மகனும் இருந்தனர். இளவரசன் பாரீசர் வளர்ந்து பின் துறவு ஏற்றார்.

பாரீசர், உணவு உண்பதற்கு சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது அவர் தனது இளமைக் காலத் தோழனும் அந்நாட்டின் அமைச்சனின் மகனுமான புட்படாலன் என்பவனைக் கண்டார். புட்படாலன் துறவியான தன் நண்பனை இன்முகத்தோடு, முனிவர்களை வரவேற்கும் முறைப்படி தனது இல்லத்திற்கு வரவேற்றான். முறைப்படி ஆகாரதானம் அளித்தான். பாரீசர் ஆகாரமேற்ற பிறகு வழக்கப்படி அறவுரை ஆற்றினார்.

புட்படாலன், தன் துறவியான நண்பனின் அறவுரையைக் கேட்டுக் கவரப்பட்டான். தானும் துறவு ஏற்க விரும்பி பாரீசரிடமே துறவை ஏற்றான். அவருடன் சென்றுவிட்டான். இல்லறத்தைத் துறந்த புட்படாலன் தன் இல்லாளின் நினைவிலேயே இருந்தான். அதனை உணர்ந்த பாரீசர், புட்படாலனின் தடுமாறும் மனநிலையை மாற்ற எண்ணினார்.

எனவே பாரீசர், புட்படாலனிடம் மகத நாட்டிற்குச் செல்வோம் என்றார். மகத நாட்டில் தன் மனைவியைப் பார்க்கலாம் என எண்ணிய புட்படாலன் மகிழ்வுடன் சரி என்று கூற அவர்கள் மகத நாட்டை அடைந்தனர்.

முதலில் அரண்மணைக்குச் சென்றனர். அரசர் மிக்க மரியாதையுடன் அவர்களை எதிர்கொண்டு வரவேற்றார். அரச வாழ்க்கை, சுகம், பதவி, பட்டம், பெருமை போன்றவைகளை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு பற்றற்ற துறவியாக எவ்வித மனக் கலக்கமும் இன்றி நிற்கும் பாரீசரைக் கண்டு புட்படாலன் வெட்கமுற்றான்.

புட்படாலன் நிலையை உணர்ந்த பாரீசர், புட்படாலனின் வீட்டிற்குப் போவோம் என்றார். உடனே புட்படாலன், “அடிகளே, வேண்டாம். என் மனதை ஒருநிலைப்படுத்திவிட்டேன்.உண்மையையும் பொய்யையும் உணர்ந்துவிட்டேன். அருகனின் அறநெறியில் என்னை அகலாது நிறுத்திவிட்டீர். என் வீட்டைவிட மேலான வீட்டைக் காட்டிவிட்டீர். எனவே நாம் புறப்படுவோம்” என்றான்.

இருவரும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x