Published : 27 Apr 2017 10:15 AM
Last Updated : 27 Apr 2017 10:15 AM

திருத்தலம் அறிமுகம்: ஆற்றங்கரையை விட்டு அகலாத சிவன்

ஒருசமயம், நெல்லை மாவட்டம் கட்டாரி மங்கலம் வீரபாண்டியன் என்ற மன்னனின் ஆளுகைக்குள் இருந்தது. இவர் மணற்படை வீட்டை ஆண்டு வந்த முழுதுங்கண்ட ராமபாண்டியனின் உறவினர். ஒருநாள் ராமபாண்டியனைச் சந்திக்க வந்திருந்த வீரபாண்டியன், செப்பறை கோயிலில் இருந்த நடராஜர் சிலையைக் கண்டு பிரமித்தான். அதன் நேர்த்தி கண்டு வியந்த வீரபாண்டியன் தனக்கும் அதேபோல் ஒரு சிலையை வார்த்துத்தர வேண்டும் என்று ராமபாண்டியனிடம் கேட்டான்.

ஸ்தபதி வடித்த சிலைகள்

உடனே, ராமபாண்டியன் தனது அரண்மனையின் ஆஸ்தான ஸ்தபதியான நமச்சிவாய ஸ்தபதியை அழைத்து அவரிடம் தேவையான அளவு ஐம்பொன் கொடுத்து நடராஜர் சிலையைச் செய்யப் பணித்தான். கட்டாரிமங்கலத்துக்கு ஒன்றும் நெல்லையப்பர் கோயிலுக்கு ஒன்றுமாக மொத்தம் இரண்டு சிலைகளை வார்க்க உத்தரவிட்டான் ராமபாண்டியன். குறிப்பிட்ட நாளுக்குள் இரண்டு சிலைகளையும் வார்த்தெடுத்தார் ஸ்தபதி.

கைகளை வெட்டிய மன்னன்

தனக்கான சிலையை எடுத்துச் செல்வதற்காக வீர்பாண்டியன், ராமபாண்டியன் அரண்மனைக்கு வந்தான். வார்ப்படக் கூடத்தில் ஒன்றுக்கு இரண்டு சிலைகளை பார்த்த வீர்பாண்டியன் இரண்டையுமே தனக்காக எடுத்துக் கொண்டான். அத்துடன், இதுபோன்ற நேர்த்தியான சிலையை வேறு யாருக்கும் செய்துகொடுக்கக் கூடாது என்பதற்காக நமச்சிவாய ஸ்தபதியின் இரண்டு கைகளையும் வாளால் வெட்டிவிட்டு இரண்டு சிலைகளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

வீரபாண்டியனோடு வந்த படையினர் இரண்டு பிரிவாக பிரிந்து ஆளுக்கொரு பாதையில் நடராஜர் சிலைகளை எடுத்துச் சென்றனர். அதில் ஒரு பிரிவினர் ஆற்றைக் கடக்க முற்பட்டபோது காட்டாற்று வெள்ளம் அடித்துவந்து அவர்களை துரத்த, நடராஜர் சிலையை ஆற்றின் கரையிலேயே போட்டுவிட்டு ஓடினார்கள். இன்னொரு சிலையானது பத்திரமாக கட்டாரிமங்கலம் வந்து சேர்ந்தது.

அகல மறுத்த சிவன்

ஆற்றில் வெள்ளம் வடிந்ததும் அங்கு வந்த ஊர்மக்கள், கரையில் கிடந்த நடராஜர் சிலையை எடுத்து ஆற்றின் தென்கரையில் மேடான இடத்தில் வைத்து வழிபட ஆரம்பித்தார்கள். இதற்கிடையில், தனது ஸ்தபதிக்கு நேர்ந்த கதியைக் கேள்விப்பட்டு கடும் சினம் கொண்ட ராமபாண்டியன், அதற்குக் காரணமான வீரபாண்டியனின் தேசம் மீது படையெடுத்துச் சென்று அவனது இரண்டு கைகளையும் வெட்டிவிட்டுத் திரும்பினான்.

அப்படித் திரும்புகிறபோது, ஆற்றின் கரையில் இருந்த நடராஜர் சிலையை தன்னோடு எடுத்துச் செல்ல எண்ணினான். ஆனால், அங்கிருந்து சிலையை யாராலும் அசைக்கமுடியவில்லை. அன்று இரவு ராமபாண்டியனின் கனவில் தோன்றிய சிவபெருமான், தான் ஆற்றங்கரையிலேயே இருக்க விரும்புவதாகவும் அங்கேயே தனக்கு ஆலயம் எழுப்புமாறும் கேட்டுக் கொண்டார். அதன்படியே ராமபாண்டியன் இப்போதைய கரிசூழ்ந்தமங்கலத்தில் கனகசபாபதி திருக்கோயிலைக் கட்டினான்.

தென் காளஹஸ்தி

நெல்லை மாவட்டம் பத்தமடைக்கு ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரிசூழ்ந்தமங்கலம் கனகசபாபதி கோயிலுக்கு தென் காளஹஸ்தி என்ற பெயரும் உண்டு. இங்கு சென்று தரிசனம் செய்தால் காலஹஸ்திக்குச் சென்றுவந்த பலன் கிட்டும் என்பது நம்பிக்கை. திருக்கார்த்திகையும் மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரையும் கனகசபாபதி கோயிலின் முக்கிய திருவிழா நாட்கள்.

வீரபாண்டியனால் கைகள் வெட்டப்பட்ட நமச்சிவாய ஸ்தபதி அதன்பிறகு இரண்டு கைகளிலும் அகப்பை கட்டிக் கொண்டு மேலும் இரண்டு நடராஜர் சிலைகளை வார்த்தெடுத்தார். அவரால் வார்த்தெடுக்கப்பட்ட பஞ்சபடிமங்கள் என்று சொல்லப்படும் ஐந்து நடராஜர் சிலைகளும் தற்போது சிதம்பரம், செப்பறை, கட்டாரி மங்கலம், கருவேலங்குளம், கரிசூழ்ந்தமங்கலம் ஆகிய ஐந்து ஊர்களில் உள்ள சிவன்கோயில்களில் உள்ளன. ஒரே ஸ்தபதியால் வார்க்கப்பட்ட இந்த பஞ்ச படிமங்களை திருவாதிரை நாளில் தரிசிப்பது சிறப்பானதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x