Published : 20 Aug 2015 12:14 PM
Last Updated : 20 Aug 2015 12:14 PM

வார ராசி பலன் 20-08-2015 முதல் 26-08-2015 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும், 10-ல் செவ்வாயும், 11-ல் சூரியனும் புதனும் குருவும் சுக்கிரனும் சஞ்சரிப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியமான எண்ணங்கள் சில ஈடேறும். பண வரவு அதிகரிக்கும். வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். மூத்த சகோதர, சகோதரிகள், பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெறச் சந்த்ர்ப்பம் உருவாகும். 21-ம் தேதி முதல் புனிதப் பணிகளுக்காகச் செலவு செய்வீர்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 20, 21, 26.

திசைகள்: கிழக்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு, கிழக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், பச்சை, இள நீலம், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 5, 6, 7, 9.

பரிகாரம்:

துர்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதனும், 11-ல் ராகுவும் உலவுவது விசேஷம். வார ஆரம்பத்தில் சந்திரன் சனியுடன் கூடி ராசிக்கு 12-ல் உலவுவதால் எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். வீண்வம்பு வேண்டாம். வார நடுப்பகுதியில் கண், கால், ரத்தம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். வாரப் பின்பகுதியில் அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உதயமாகும். செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் காண வழி பிறக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு உருவாகும். பணப் புழக்கம் சற்று அதிகரிக்கும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். பேச்சில் திறமை பளிச்சிடும். 21-ம் தேதி முதல் புதன் 11-ம் இடம் மாறி வலுப்பெறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 20, 21, 26.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு, கிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பச்சை, ஆரஞ்சு.

எண்கள்: 1, 4, 5.

பரிகாரம்:

சனிப் பிரீதியைத் தொடர்ந்து செய்வது அவசியம். திருமுருகனை வழிபடவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசி அதிபதி குரு 9-ல் இருப்பது விசேஷம். சூரியன், புதன், சுக்கிரன், சனி, ராகுவின் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். பெரியவர்களும் தனவந்தர்களும் உதவுவார்கள். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். தெய்வப்பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். வார நடுப்பகுதியில் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். மன அமைதி சற்று குறையும். வாரப் பின்பகுதியில் செல்வாக்கும் மதிப்பும் உயரும். மன உற்சாகம் கூடும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். 21-ம் தேதி முதல் சொந்தத் தொழில் விருத்தி அடையும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்த வாய்ப்புக் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 20, 21, 26.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.

நிறங்கள்: புகை நிறம். வெண்மை, கறுப்பு, இளநீலம், பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 4, 5, 6.

பரிகாரம்: செவ்வாய், முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 8-ல் புதனும் சுக்கிரனும், 10-ல் சனியும் உலவுவதால் செய்துவரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். கணவன்-மனைவி உறவு நிலை சீராகும். பொதுநலப் பணிகளில் ஆர்வம் கூடும். இரும்பு, எஃகு, எண்ணெய் தொழில் லாபம் தரும். கறுப்பு நிறப் பொருட்களால் லாபம் கூடும். கலைத் துறையினருக்கு அளவோடு நலம் உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழி பிறக்கும். மனதில் துணிவு கூடும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்குத் தெளிவான போக்கு தென்படும். 21-ம் தேதி முதல் புதன் 9-ம் இடம் மாறுவதால் புனிதப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பிறருக்கு உதவி செய்வீர்கள். எதிரிகள் அடங்குவார்கள். 24-ம் தேதி முதல் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 20, 21.

திசைகள்: மேற்கு, வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, நீலம், மெரூன்.

எண்கள்: 5, 6, 7, 8.

பரிகாரம்:

செவ்வாய், குருவுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 7-ல் குரு உலவுவது சிறப்பு. துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். பொதுநலப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு உதவி கிடைக்கும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பொருளாதார நிலை உயரும். வாழ்க்கைத் துணைவராலும், கூட்டாளிகளாலும் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். கடல் சார்ந்த தொழில் லாபம் தரும். ஆசிரியர்கள் புகழ் பெறுவார்கள். 21-ம் தேதி முதல் புதன் 8-ம் இடம் மாறி வலுப்பெறுவதால் வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 20, 21, 26.

திசைகள்: தெற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், பொன் நிறம், செந்நிறம்.

எண்கள்: 3, 8, 9.

பரிகாரம்:

சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும். பராசக்தியை வழிபடவும்.

மீன ராசி வாசகர்களே

கோச்சாரப்படி சூரியனும் புதனும் அனுகூலமாக உலவுகிறார்கள். அரசு சம்பந்தமான காரியங்கள் இப்போது எளிதில் நிறைவேறும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். முக்கியஸ்தர்களது சந்திப்பு நிகழும். தந்தையால் அனுகூலம் ஏற்படும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு இப்போது கிடைக்கும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்குச் செழிப்பான பாதை புலப்படும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழில் லாபம் தரும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். எதிலும் வேகம் கூடாது. விவேகம் மிக முக்கியம். பிள்ளைகளாலும் வாழ்க்கைத் துணைவராலும் பிரச்சினைகள் சூழும். எதிலும் முழுமையான ஆதாயத்தைப் பெற இயலாமல் போகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றம் தடைபடும். வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். வாரக் கடைசியில் தொழில் ரீதியாக ஒரு நல்ல தகவல் வந்து சேரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 26.

திசைகள்: வடக்கு, கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை.

எண்கள்: 1, 5.

பரிகாரம்:

கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். குரு, சனிக்கு அர்ச்சனை செய்வதன் மூலம் சங்கடங்கள் குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x