Published : 06 Apr 2017 09:35 AM
Last Updated : 06 Apr 2017 09:35 AM

தெய்வத்தின் குரல்: முக்திக்கு முந்தைய நிலை

ஒரு தகப்பனார் இருக்கிறார். தம் பெண்ணுக்கு நல்ல வரனாகப் பார்த்துக் கல்யாணம் செய்ய வேண்டும் என்று அலைகிறார். வரன் கிடைக்கிறான். கல்யாணம் நிச்சயமாகிறது.

கல்யாணமானவுடன் பெண்ணை மாப்பிள்ளை அழைத்துக்கொண்டுபோய்விடப் போகிறான். கன்னிகாதானம் செய்கிறபோது தகப்பனாரின் மனசு எப்படி இருக்கும்? பெண்ணுக்கு நல்ல வரன் கிடைத்ததே என்ற சந்தோஷம் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதை அமுக்கிவிடுகிறமாதிரி, இத்தனை காலம் வளர்த்த பெண் நம்மை விட்டுப் போகிறாளே என்ற துக்கம்தான் அதிகமாக இருக்கும்.

இவரேதான் வரன் பார்த்தார். தேடித்தேடிப் பார்த்தார்; கடன் கிடன் வாங்கி மனசாரச் செலவழித்துக் கல்யாணமும் செய்கிறார். ஆனாலும் கன்னிகாதான சமயத்தில் அவருடைய மனசை முறுக்கிப் பிழிகிற மாதிரி இருக்கிறது. கண்ணில் ஜலம்கூட வந்துவிடும்போல் இருக்கிறது.

முக்தி நிலையை அடைய அருகதை பெற்ற சாதனைகளை முமுக்ஷு என்பார்கள். இடையறாத பக்தி செலுத்திச் செலுத்தி ஒருவன் இந்த அருகதையைப் பெற்றுவிடுகிறான்.

அவனுக்கு முக்தி கிடைக்கிற சமயம் கைக்கு எட்டினாற்போல் வந்துவிடுகிறது. அப்போது அவன் ஒரு தர்ம சங்கடமான நிலையில் இருக்கிறான். கன்னிகாதானம் செய்து தருகிற தகப்பனாரின் மனநிலை மாதிரிதான் இவனுக்கும் இருக்கிறது.

தகப்பனாரே வரன் தேடி அலைந்த மாதிரி இவனேதான் முக்திக்காகப் பெரிய பிரயாசை செய்து பக்தி மார்க்கத்தில் எல்லா அநுஷ்டானமும் செய்தான். அதனால் மனசு பூரணமாகச் சுத்தமாகி பரமாத்மாவில் இரண்டறக் கரைகிற நிலை வந்துவிட்டது.

கரைந்தபின் பகவானும் இல்லை, பக்தியும் இல்லை. மணப்பெண்ணை வரனுக்குக் கொடுக்கிற தகப்பனாருக்கு அழுகை வருகிற மாதிரி ஆத்மாவை பரமாத்மாவுக்குத் தத்தம் செய்கிற முமுக்ஷுவுக்கும் பெரிய துக்கம் உண்டாகிறது.

இந்தத் துக்கத்தை சுலோகத்தில் வெளியிடுகிறார் ஒரு கவி. 'பஸ்மோத்தூளன பத்ரமஸ்து பவதே' என்று ஆரம்பமாகும் சுலோகம் அது.

பரமேசுவரன் என் பக்தியில் மகிழ்ந்து என்னை மோக்ஷத்தில் சேர்க்க இருக்கிறான். இனிமேல் நான் விபூதி பூசிக் கொண்டும் ருத்ராக்ஷம் போட்டுக்கொண்டும், பூஜை ஜபம் முதலிய படிகளில் ஏறிப்போக வேண்டியதில்லை.

“ஏ விபூதியே! போய் வா! உனக்கு க்ஷேமம் உண்டாகட்டும். சுபமான ருத்ராக்ஷ மாலையே, உனக்கும் பிரியா விடை கொடுக்கிறேன்; ஹா, பக்தி மார்க்கப் படிக்கட்டுகளே, உங்களையும் விட்டுப் பிரிகிறேன். எனக்கு பக்தி, பகவத் குணாநுபவம் என்கிற ஆனந்த பிரபஞ்சத்தையே தந்த உங்களை எல்லாம் சிதைத்துப் போடுகிற மோக்ஷம் என்கிற மகாமோகத்தில் தோய்ந்து போகிறேன்” என்கிறார்.

மோகத்தைப் போக்குவதுதான் மோக்ஷம். ஆனால் பக்தி இன்பத்தையும், அதற்கான சாமக்கிரியைகளையும் கைவிட்டுவிட்டு மோக்ஷம் பெற வேண்டும் என்கிறபோது, இந்தப் பரம பக்தருக்கு மோக்ஷமே மோகமாகத் தோன்றுகிறது!

இதேபோல் 'கிருஷ்ண கர்ணாமிருத'த்திலும் ஒரு சுலோகம் இருக்கிறது. பக்தி முற்ற முற்றக் கருமம் நசிக்கிறதைப் பற்றியது இந்த சுலோகம். 'ஸந்த்யாவந்தன பத்ரமஸ்து பவதே, என்று ஆரம்பிக்கும் அது, கிருஷ்ண பக்தி அதிகமாக ஆக லீலாசுகரால் ஸந்தியா வந்தனம், பித்ரு தர்ப்பணம் ஆகிய கர்மாநுஷ்டானங்களைக்கூடச் செய்ய முடியவில்லை. அவற்றிடமிருந்து பிரியா விடை பெறுகிறார்.

முதல் நிலையில் அவரவருக்கான கர்மத்தை சாஸ்திரப் பிரகாரம், 'இது வேண்டுமா, வேண்டாமா?' என்று எதிர்க்கேள்வி கேட்காமல் அநுஷ்டிக்க வேண்டும். இதனால் மனத்தில் விருப்பு வெறுப்பு குறைகிறது; சித்தசுத்தி ஏற்படுகிறது. அழுக்கு நீங்க நீங்க மனசு ஈசுவரனிடம் அதிகமாக ஈடுபட்டு ஒருமுகமாகத் தொடங்குகிறது. இதுதான் பக்தி. இரண்டாம் நிலை. பக்தி முற்றும்போது ஞானம் சித்திக்கிறது. இது இறுதி நிலை.

கர்மத்தையோ பக்தியையோ நாமாக விட வேண்டியதில்லை. பழுத்த பழம் தானாகக் காம்பிலிருந்து விடுபடுகிற மாதிரி கர்மம், பக்தி எல்லாம் அததுவும் பூரணமடைந்தவுடன் தாமாகவே நழுவிப்போகும்.

பக்தியை விட்டு நேராக முக்திக்கு நாம் முயற்சி பண்ண வேண்டும் என்பதே இல்லை. பக்தி பண்ணிக்கொண்டிருந்தாலே போதும். தானே அதுவாக முக்திக்கு அழைத்துப் போகும். எனவே முக்தி வேண்டும் என்று பிரார்த்திக்காமல் பக்தி வேண்டும் என்று வேண்டிக்கொண்டேயிருந்தால் போதும். கோபால கிருஷ்ண பாரதியார் சொன்னபடி ‘பக்தி பண்ணிக்கொண்டிருந்தால் முக்தி பெறலாமே!'

- தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x