Published : 30 Mar 2017 10:26 AM
Last Updated : 30 Mar 2017 10:26 AM

வார ராசிபலன் 30-03-2017 முதல் 05-04-2017 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும், 11-ல் ராகுவும், 12-ல் வக்கிர குருவும் உலவுவது நல்லது. நிர்வாகத்திறமை வெளிப்படும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். அரசுப்பணிகளில் அனுகூலமான திருப்பம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்குச் செல்வாக்கும் மதிப்பும் உயரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு மூலம் ஆதாயம் கிடைக்கும். பயணத்தின் மூலம் ஒரு எண்ணம் நிறைவேறும். பொருளாதார நிலை திருப்தி தரும். கொடுக்கல் வாங்கலில் வளர்ச்சி காணலாம்.

நற்காரியங்கள் நிகழ வாய்ப்புகள் கூடிவரும். ஏற்றுமதி இறக்குமதி இனங்களால் ஆதாயம் கிடைக்கும். வாரப் பின்பகுதியில் சுப காரியங்கள் நிகழும். செய்தொழிலில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் கனிந்துவரும். திரவப்பொருட்கள் லாபம் தரும். கடல் சார்ந்த இனங்களால் வருவாய் கிடைத்துவரும். மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 30, ஏப்ரல் 2 (இரவு), 5.

திசைகள்: தென்மேற்கு, கிழக்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 4. l பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது.



விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ல் தன் சொந்த வீட்டில் இருப்பது சிறப்பாகும். புதன், குரு, சுக்கிரன், ராகுவும் சாதகமாக உலவுவதால் எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும், போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி கிடைக்கும். வியாபாரம் பெருகும். இயந்திரப் பணிகள் அதிக லாபம் தரும். நிலபுலங்களால் வருவாய் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும்.

கூட்டுத் தொழில் ஓரளவு லாபம் தரும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழிபிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். சுப காரியங்கள் நிகழும். பெரியவர்களின் ஆதரவும் ஆசிகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 30, ஏப்ரல் 1 (பகல்), 5.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம், சிவப்பு, வெண்மை.

எண்கள்: 3, 4, 5, 6, 9. l பரிகாரம்: விநாயகர், ஆஞ்சநேயர் ஆகியோரது ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடவும்.



தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 4-ல் சுக்கிரனும் 5-ல் செவ்வாயும், 10-ல் வக்கிரமாக குருவும் உலவுவது நல்லது. மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். மகப்பேறு பாக்கியமும் கிடைக்கும். பண நடமாட்டம் கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் தேடிவரும். ஆன்மிக, அறநிலைய, ஜோதிடப் பணிகளில் ஈடுபாடு கூடும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். புதிய பொருட்கள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். நிலபுலங்கள் லாபம் தரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள்.

காரியத்தில் வெற்றி கிட்டும். சொத்துக்கள் சேரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். வாரப் பின்பகுதியில் மன அமைதிக் குறைவு உண்டாகும். ஜல சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். சனி பலம் குறைந்திருப்பதால் வீண் செலவுகள், இழப்புக்கள் ஏற்படும். குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்திருக்க வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 30, ஏப்ரல் 2.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு.

எண்கள்: 3, 6, 7, 9. l பரிகாரம்: சனி ஆஞ்சநேயருக்கு அர்ச்சனைகள் செய்யவும்.



மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு அதிபதி சனி 11-ஆம் இடத்தில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பது சிறப்பாகும். சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோரும் அனுகூலமாக உலவுகிறார்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பொதுப்பணிகளில் ஆர்வம் கூடும். நிலபுலங்களின் சேர்க்கையோ, ஆதாயமோ கிடைக்கும். மாணவர்களது திறமை வெளிப்படும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். முக்கியமான காரியங்கள் இனிது நிறைவேறும். எதிரிகள் அடங்குவார்கள்.

அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும். அரசுப் பணியாளர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். கணிதம், எழுத்து, பத்திரிகை, வியாபாரம், தரகுத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை உருவாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். பயணத்தின்போது பாதுகாப்புடன் இருக்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 30, ஏப்ரல் 2, 5.

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், ஆரஞ்சு, வெண்மை, பச்சை.

எண்கள்: 1,5, 6, 8. l பரிகாரம்: ராகு, கேதுவுக்கு அர்ச்சனைகள் செய்யவும்.



கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. குரு 8-ல் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். தோற்றப்பொலிவு கூடும் குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பண வரவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் லாபம் இருக்கும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிட்டும். நல்ல தகவல் வந்துசேரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும்.

பொது நலப்பணியாளர்கள் நற்பெயர் பெறுவார்கள். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். பிரச்னைகள் கட்டுக்குள் அடங்கியே இருக்கும். நிலம், மனை, வீடு, வாகனங்கள் சேரும். சொத்துக்களால் வருவாயும் கிடைக்கும். ஜன்ம ராசியில் கேதுவும் 2-ல் சூரியனும் இருப்பதால் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 30, ஏப்ரல் 2, 5.

திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, சிவப்பு.

எண்கள்: 3, 6, 8, 9. l பரிகாரம்: லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்யவும்.



மீன ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 2-ல் புதனும் 6-ல் ராகுவும் உலவுவதால் உடல் நலம் சீராக இருந்துவரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் வந்து சேரும். பேச்சில் திறமை கூடும். நிலபுலங்களால் லாபம் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். மாணவர்களது நிலை உயரும்.

கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். மாதர்களது நோக்கம் ஈடேறும். எதிர்ப்புக்கள் இருக்கும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 30, ஏப்ரல் 2, 5.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, பச்சை.

எண்கள்: 4, 5, 6. l பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x