Last Updated : 20 Mar, 2014 08:41 PM

Published : 20 Mar 2014 08:41 PM
Last Updated : 20 Mar 2014 08:41 PM

வேதாத்திரி மகரிஷி: மனவளக்கலை தந்த மகான்

பகுத்தறிவினைப் பெற்றுச் சிறப்புற்றிருக்கும் மனித இனம் விஞ்ஞானத்திலும், பொருள் துறையிலும் வியத்தகு முன்னேற்றம் கண்டிருந்தாலும், ஒவ்வொருவரும் ஏதேனும் சிக்கல்களுக்குள் தவித்துக்கொண்டுதான் வாழ்க்கையை நடத்திவருகின்றனர். இத்துன்பத்திலிருந்து விடுபட்டு மனித குலம் அமைதியோடும், அன்போடும், ஒற்றுமையோடும், வாழ்க்கையின் நோக்கத்தை உணர்ந்து நிறைவாக வாழ வழிமுறைகள் கண்டவர் அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள்.

சென்னையை ஆடுத்த கூடுவாஞ்சேரியில் 1911ஆம் ஆண்டு ஆகஸ்டு 14ஆம் நாள் எளிய நெசவாளிக் குடும்பத்தில் பிறந்தார். பத்து வயதாக இருக்கும்போது, மதிய வேளையில் தறியில் நெய்துகொண்டிருந்தார். அவரது அன்னையார் உணவு உண்ண அழைக்கும் வேளை வந்தது. ஆனால் அன்னையாரோ அவரைக் கூப்பிடாமல் சமையலறையில் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தார். அன்னை கண்கலங்கி நின்றதை ஆந்தப் பிஞ்சு உள்ளத்தால் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை. தனது அன்னையின் கால்களைக் கட்டிக்கொண்டு, ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார்.

அன்னை அவரை இறுக அணைத்தபடி, “ஏன் செல்லமே நாங்கள் உன்னை தவமிருந்து பெற்றோம். ஆனால் இன்று உன் பசிக்குக் கூழ் கொடுக்க முடியாமல் தவிக்கும் பாவியாக இருக்கிறேனடா” என்று கூறி அழுதார். சிறுவனான வேதாத்திரியும் அழுதுவிட்டார்.

வறுமை ஏன் ஏற்படுகிறது? கடவுள் யார்? நான் யார்? உயிர் ஏன்றால் ஏன்ன? என்பன போன்ற வினாக்களுக்கு விடைகாண வேண்டும் என்ற வேட்கை அவருக்கு எழுந்தது. பிற்காலத்தில் இக்கேள்விகளுக்கெல்லாம் விடை கண்டு, பாமர மக்களின் தத்துவ ஞானியாக விளங்கினார் வேதாத்திரி மகரிஷி.

வேதாத்திரி மகரிஷியின் கருத்துக்கள் நமக்கு ஆதிசங்கரரை மட்டுமல்ல, ஆல்பர்ட் ஐன்ஸ்டீனையும் ஆடையாளம் காட்டுகின்றன. சடப்பொருள்களானாலும், உயிரிகளின் பரிணாமமாக இருந்தாலும், தனது கருத்துக்களை ஆதியாகிய இறைவெளியில் விளக்க ஆரம்பித்து, அதை அறிவியலோடு தொடர்புபடுத்தி முடிப்பதால், வேதாத்திரியின் தத்துவங்கள் அறிவியல் அம்சத்துடனும் அமைந்துள்ளன.

இறைநிலையே ஆதாரம்

கடல் அலை எழுவதைப் பார்க்கிறோம். அலை என்பது கடல் நீரின் ஆசைவு, அலை என்னும் இயக்க நிகழ்ச்சியை நிறுத்திவிட்டால், மீதம் இருப்பது நீர் மட்டுமே. நீர் என்பதே மூலம். அதுதான் பிறப்பு நிலை. அலை என்பது தோற்றம். அது கடல் என்ற மூலத்தின் சிறப்பு நிலை. இதைப் போலவே இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துத் தோற்றங்களுக்கும் உள்ள இயக்கம் என்னும் சிறப்பு நிலையைக் கழித்துவிட்டால் எஞ்சி நிற்பது இறைநிலையே. இறைநிலையே எல்லாப் பொருட்களுக்கும் உட்பொருளாக உள்ளது என்பதை உணர்த்துகிறார் வேதாத்திரி மகரிஷி.

நமது மனதையும் அறிவையும் சேர்த்து நோக்கினால் மனம் சிறப்பு நிலை. அறிவோ உட்பொருள். உட்பொருளாக உள்ள அறிவு என்பது இறைநிலையைத் தவிர வேறொன்றுமில்லை. மனிதப் பிறவியின் நோக்கமே மனிதன் அறிவில் முழுமை ஆடைய வேண்டும் என்பதுதான். அதுவே இறைநிலை உணர்தல் என்கிறார்.

அளவிட முடியாத எடை கொண்ட சூரியன் முதலான கோள்கள் அனைத்தும் சுத்த வெளியி லேயே இயங்கிக்கொண்டிருக்கின்றன. இது போன்று பல லட்சம் சூரியக் குடும்பங்கள் சுத்த வெளியில்இயங்கிக்கொண்டிருந்தும், அவைகளைத் தனக்குள் தாங்கி, ஒரே சீரான ஒழுங்குடன் மிதக்க விட்டுக்கொண்டிருக்கும் சுத்த வெளியாகிய இறையாற்றலின் சக்தி எத்தகையதாக இருக்கும்?

பேரியக்க மண்டலத்தில் நிறைந்திருக்கும் சுத்த வெளியின்ஆற்றலே காந்த ஆற்றலாகமாற்றம் பெற்று எங்கும், எல்லாப் பொருட்களிலும் ஊடுருவி நிறைந்திருக்கிறது. இதையே தெய்வீக ஆற்றல் என்றும் அழைக் கிறோம். வானம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற ஐந்து பௌதிகப் பிரிவுகளாகி உயிரற்ற பொருட்களாக இறைநிலையே தன்மாற்றம் பெற்றது. உயிரினங்கள் தோன்றியது. முடிவில் மனிதன் வந்தான்.

எது இறைவன் என்ற கேள்விக்கு சுத்த வெளியே இறைவன் என்கிறார் வேதாத்திரி மகரிஷி. சுத்த வெளியான இறைவெளியே தன்மாற்றம் பெற்றுத் தோற்றப் பொருள்களாக மாறியுள்ளது. எனவே இறைவன் ஒன்றுதான் என்று இறைநிலையைப் பகுத்துணரச் செய்கிறார்.

இந்த உலகில் தோன்றிய மகான்கள் அனை வரும் ஏக இறைவனைத்தான் தாங்கள் உணர்ந்த பெயர்களால் தாயென்றும், தந்தையென்றும், பூரணமென்றும், அநாதியென்றும் அழைத்தனர். ஆனால் ஒவ்வொரு பெயரும் ஒவ்வொருவித இறைத்தன்மை என்று நினைக்கத் துவங்கியபோதுதான் இறைத் தத்துவமே தடம் புரண்டது.

மனிதன், ஏக இறைநிலைக்குப் பல்வேறு உருவங்களை வடித்து, அவற்றிற்குப் பல்வேறு பெயரிட்டு அழைப்பதால் இறைவனின் பெயரால் மக்களிடையே பகையினையும் பிரிவினையையும் ஏற்படுத்து கிறான். நாம் வைத்த பெயர்களுக்கும் உருவங் களுக்கும் அப்பாற்பட்டதுதான் ஏக இறை ஆற்றல். உருவம் என்ற சிறப்பு நிலையைக் கடந்து அவைகளின் பிறப்பு நிலையான மூலத்தை உணர வேண்டும். ஆதுவே ஞானம் என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

விலங்கினத்தின் குணங்கள்

மனிதன் உடலாலும், அறிவாற்றலாலும் சிறப்பு வாய்ந்தவன் என்றாலும், பரிணாமத் தொடரில் அவன் முதலில் உருவானது விலங்கினத்தின் வித்தின் மூலமே. எனவே மனிதனிடம் பிற உயிரை வதைத்தல், பிற உயிரின் பொருளைப் பறித்தல், பிற உயிர்களின் வாழும் சுதந்திரத்தை அழித்தல் போன்ற விலங்கினத்தின் குணங்களும் இன்றுவரை சேர்ந்தே இருக்கின்றன. அத்தகைய பறித்துண்ணும் ஒரே குற்றம்தான் மனிதனிடத்தில் பொருள், புகழ், ஆதிகாரம், புலனின்ப வேட்கை என எழுச்சி பெற்று, பொய், சூது, களவு, கொலை, கற்பழிப்பு எனும் ஐந்து பெரும் பழிச் செயல்களாக மாறியிருக்கிறது.

இக்குணங்கள் மனிதனிடம் இருக்கும்வரை வாழ்வில் சிக்கலும் துன்பமும் நீடித்து அமைதியே கிட்டாமல் போய்விடும், மனவளக் கலைப் பயிற்சியாலும், அறநெறியாகிய ஒழுக்கம், கடமை, உவகை என்ற மூவகைச் செயல் பயிற்சியாலும் மனிதன் மனத்தூய்மை, வினைத்தூய்மை பெற முடியும் என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

எந்த அசைவானாலும், செயலானாலும் அதற்குத் தக்க விளைவு பிரதிபலனாகக் கிடைக்கும் என்பதே இறை நீதி. எனவே எண்ணம், சொல், செயல் ஆகியவற்றால் தனக்கும், பிறருக்கும் துன்பமளிக்காத வாழ்க்கை முறையைக் கற்று, அதன்படி அறிவில் விழிப்பு நிலையுடன் வாழ வேண்டும் என்கிறார் இவர்.

பண்டைய தத்துவங்களையும், பயிற்சி முறைகளையும் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்ததன் விளைவாகத் தான் கண்டறிந்த தியான முறைகளில் சிறந்த குண்டலினி யோகம், அவயங்களை வருத்தாத

உடற்பயிற்சி, மனத்தூய்மை அளிக்கும் தற்சோதனை, உயிர் சக்தியைப் பாதுகாப்பதன் மூலம் வயோதிகத்தைத் தள்ளிப்போடும் காயகல்பப் பயிற்சி என இவை நான்கும் ஒருங்கிணைந்த வாழ்க்கை முறையைக் கண்டறிந்தார். அறிவை உயர்த்தி அறம் வளர்க்கும் தத்துவக் கருத்துக்களையும், பயிற்சி முறைகளையும் கற்றுத்தர மனவளக் கலை மன்றங்களையும், அறிவுத் திருக்கோயில்களையும் பல்வேறு ஊர்களில் உருவாக்கி, மக்கள் மகிழ்ச்சியோடு வாழ வழி ஏற்படுத்தினார்.

மனிதன், குடும்பம், சுற்றம், நாடு, உலகம் ஆனைத்தும் இறைநிலையோடு இணைந்து பேரின்ப வாழ்வு பெற்றிட “வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!” என்ற தாரக மந்திரத்தை இயற்றிப் பல லட்சம் அன்பர்களின் மனதில் அருள் ஓளியாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

(வேதாத்திரி மகரிஷி இறைநிலை அடைந்த தினம் மார்ச் 28, 2006)

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x