Last Updated : 15 Mar, 2018 10:24 AM

 

Published : 15 Mar 2018 10:24 AM
Last Updated : 15 Mar 2018 10:24 AM

உயிர்பிச்சை அளித்தவளுக்குப் பாடைக் காவடி

மார்ச் 25 பங்குனித் திருவிழா

தெய்வங்களிடம் மனிதன் வேண்டுதல் வைப்பதும், தெய்வங்கள் அதை நிறைவேற்றித் தருவதாக நம்புவதும், அந்த நன்றிக் கடனுக்காக நேர்த்திக் கடன் செலுத்துவதும் காலம்காலமாக நடந்துவரும் வழக்கம்தான். குழந்தை பிறந்தால் தொட்டில் கட்டுவது, அபிஷேக ஆராதனைகளைச் செய்வது, கோயிலுக்குப் பொருட்கள் வாங்கிக்கொடுப்பது, பால்குடம் எடுப்பது, காவடி என்றுதான் பெரும்பாலும் இருக்கும். ஆனால், தன் உயிரைப் பிழைக்கவைத்த தெய்வத்துக்கு, பூரண குணமானதும் பாடை கட்டி அதில் பிணம் போல் படுத்துக்கிடந்து, கோயிலைச் சுற்றி வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்தும் முறை வலங்கைமானில் உள்ளது.

கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் வழியில் சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வலங்கைமான் ஊரின் சாலையோரத்திலேயே சீதளாதேவி மகா மாரியம்மன் கோயிலில் இந்த நேர்த்திக் கடன் செலுத்தப்படுகிறது.

வலங்கைமான் மகா மாரியம்மன் உருவில் சிறியவள், எளிமையானவள். ஆனால், தன்னை நாடி வருபவர்களுக்கு அருள்புரிவதில் அவளைவிடப் பெரியவர் எவரும் இல்லை என்ற நம்பிக்கையை பக்தர்களிடம் விதைத்திருப்பவள்.

குழந்தை வடிவில் வந்தாள்

சுமார் 220 ஆண்டுகளுக்கு முன் வலங்கைமான் அருகே உள்ள அடைக்கலங்காத்த அய்யனார் கோயில் அருகில் ஒரு குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை வலங்கைமானில் உள்ள ஏழைப் பெண் ஒருவர் வளர்த்து வந்தார். இந்த நிலையில் அந்தக் குழந்தை வைசூரி நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டது.

அன்று இரவு ஊர் மக்களின் கனவில் வந்த அந்தக் குழந்தை, ‘எனக்கு உடல் இல்லையே தவிர, உயிர் இருக்கிறது’ என்று கூறி மறைந்தது. மற்றொரு முறை ஊரில் உள்ள பெண் ஒருவரின் மீது அருள் வடிவில் வந்த அம்மன், ‘நான்தான் குழந்தை வடிவில் இங்கு வந்தேன். என்னை வழிபடுவர்களுக்கு அபயம் தந்து காப்பேன்’ என அருளியது.

இதைக் கேட்டதும் ஊர் மக்கள், குழந்தைக்குச் சமாதி எழுப்பினர். இந்தக் குழந்தை சீதளாதேவி மகா மாரியம்மனாக இருந்து அருளாட்சி புரிந்துவருகிறாள். நான்கு கரங்களுடன், வலது காலை மடித்து வைத்தபடி வீர சிம்மாசனத்தில் மகா மாரியம்மன் வீற்றிருக்கிறார். வலது மேற்கரத்தில் உடுக்கையும் வலது கீழ்க்கரத்தில் கத்தியும் இடது மேற்கரத்தில் சூலமும் இடது கீழ்க்கரத்தில் கபாலமும் வைத்திருக்கிறார். அம்மனின் இரு தோள்களிலும் நாகங்கள் உள்ளன.

இத்தலத்தின் உள் சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர், இருளன், பேச்சாயி, பொம்மி, வெள்ளையம்மாள் உடனுறை மதுரை வீரன் சுவாமி சன்னிதிகள் அமைந்துள்ளன. வாய் பேச முடியாத குழந்தைகளை இந்தத் தலத்துக்கு அழைத்து வந்து மாரியம்மனுக்கும் பேச்சாயி அம்மனுக்கும் தனித்தனியாகச் சர்க்கரைப் பொங்கலிட்டு வழிபட்டால் பேச்சு வரும் என்பது நம்பிக்கை. உடலில் எந்தப் பகுதியில் நோய் தாக்கம் இருப்பினும், அம்மனை வேண்டிக்கொண்டு அங்கப்பிரதட்சிணம் வருவது இந்தத் தலத்தில் தினமும் நிகழும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கிறது.

15chsrs_paadai3பாடைக் காவடி நேர்த்திக் கடன்

தங்களது வேண்டுதல் நிறைவேறி, பாடைக் காவடி செலுத்தும் பக்தர்கள் ஒன்பது நாட்கள் விரதம் இருப்பார்கள். ஒருவர் இறந்தால் எவ்வாறு பாடை கட்டி அவருக்கு இறுதிச் சடங்கு செய்யப்படுகிறதோ அதே போலவே இந்த நேர்த்திக் கடன் செலுத்தப்படும்.

கோயிலின் அருகில் ஓடும் குடமுருட்டி ஆற்றில் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள் நீராடுவார்கள். பின்னர், அவர் ஒரு பாடையில் படுக்க வைக்கப்படுவார்; அலங்கரிக்கப்பட்ட படையின் முன் பக்தரின் உறவினர் தீச்சட்டி ஏந்தி வருவார். பாடையின் முன் தாரை தப்பட்டை அடித்து, அதை நால்வர் தூக்கிக்கொண்டு கோயிலைச் சுற்றி மூன்று முறை வலம் வருவார்கள்.

அப்போது பாடையில் படுத்திருப்பவரின் தலையில் தாடையுடன் சேர்த்து துணி கட்டப்பட்டிருக்கும். கால் கட்டை விரல்கள் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும். நெற்றியில் காசு ஒட்டப்பட்டிருக்கும்.

கோயிலின் முன் மண்டபத்தில் பாடையைக் கொண்டுவந்து இறக்கியதும். கோயில் பூசாரி வந்து அன்னையை வேண்டிக்கொண்டு. அபிஷேக நீரைப் பாடையில் இருப்பவரின் மீது தெளித்து விபூதி பூசி எழச் செய்வார். பங்குனி மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையில் இந்த விநோதப் பாடைக் காவடி திருவிழா நடைபெறும். அன்றைய தினம் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் பாடைக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.

விழாக்களின் முக்கியமானதாகப் பங்குனி மாதத்தில் நடைபெறும் பாடைக் காவடி திருவிழா பிரசித்தி பெற்றதாகும். உயிருக்குப் போராடுபவர்கள், தீராத நோயால் அவதிப்படுபவர்கள், ‘எனக்கு உயிர்ப்பிச்சை கொடு தாயே!’ என்று வேண்டிக்கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும், மாரியம்மனுக்குப் பாடைக் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x