Last Updated : 24 Jan, 2019 10:25 AM

 

Published : 24 Jan 2019 10:25 AM
Last Updated : 24 Jan 2019 10:25 AM

விவிலிய மாந்தர்கள்: ஒரு ராணியின் முடிவு!

இயேசுவுக்குச் சில நூறு ஆண்டுகளுக்கு முன் இஸ்ரவேலில் ஒரு ராணி வாழ்ந்தார். பேராசை கொண்ட தன் கணவனுக்காக அவர் கொலைகளும் செய்தார். இறுதியில் அவர் என்னவானார்?

இஸ்ரவேலை ஆண்ட எட்டாவது அரசன் உம்ரி. அவரது இரண்டாவது மகன் ஆகாப். அரசுரிமைக்குரியவனான தன் மூத்த சகோதரனிடமிருந்து சிம்மாசனத்தைப் பறித்துக் கொண்ட ஆகாப், இஸ்ரவேலின் அரசர் ஆனார். இவரது ஆட்சிக் காலத்தில் கடவுளின் ஊழியர் எலியா வாழ்ந்துவந்தார். ஆனால், எலியாவை ஆகாப் பொருட்படுத்தவே இல்லை. பாகால் எனும் கற்பனைக் கடவுளை வணங்கும் சீதோனியரின் அரசனாகிய ஏத்பாகாலுக்கு ஒரு மகள் இருந்தாள். அவளது பெயர் யேசபேல்.

அவளது அழகில் மயங்கிய ஆகாப், அவளைத் திருமணம் செய்துகொண்டார். இசபேல் திருமணச் சீரோடு பாகால், அஸ்தரோத் வழிபாட்டையும் இஸ்ரவேலுக்குக் கொண்டுவந்தாள். தன் கணவனைப் பெருங் குடிகாரனாக மாற்றினாள். அவனை மிகக் கொடியவனாக ஆக்கினாள். 70 பிள்ளைகளுக்கு அவன் தகப்பன் ஆனான். மனைவியின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத ஆகாப், கடவுளை மறந்து, இஸ்ரவேல் முழுவதும், மனைவி கேட்டுக்கொண்டதற்கு இணங்க சிலைத் தோட்டங்களை உருவாக்கினார். மக்களும் உயிருக்குப் பயந்து மந்தைகளைப்போல் பொய் வணக்கத்துக்கு மாறினார்கள்.

பேராசை எனும் பொறி

ஆகாப், மக்கள் மீது எவ்விதப் பற்றுதலும் இல்லாதவனாகப் போர்களை நடத்திவந்தார். சாதாரண விஷயங்கள் மீது அவரது நாட்டம் அதிகரித்தது. அவர் நினைத்திருந்தால் பல திராட்சைத் தோட்டங்களை உருவாக்கியிருக்க முடியும். ஆனால், அரண்மனையின் உப்பரிகை வழியாகப் பார்த்தபோது பச்சைப்பசேல் என்ற அழகிய திராட்சைத் தோட்டம் ஒன்று அவரைக் கவர்ந்து இழுத்தது.

அது நாபோத் என்ற நேர்மையான உழைப்பாளிக்குச் சொந்தமானது. நாபோத் செல்வந்தராக இருந்தபோதும் தனது பணியாட்களுடன் இணைந்து திராட்சைத் தோட்டத்தில் வியர்வை சிந்தி உழைத்து, நன்கு பசியெடுத்தபிறகு உண்டு வாழ்பவராக இருந்தார். ஆகாப் அவரது திராட்சைத் தோட்டத்தைத் தன்னுடையதாக ஆக்கிகொள்வதற்கு ஆசைப்பட்டார்.

அதனால், மனைவி இசபேலைத் தன்னுடன் அழைத்துகொண்டு நாபோத்திடம் சென்றார். அவள் பெருங்குரலுடன் ராணி என்ற தனது அதிகாரத்தை வெளிப்படுத்தி அதைத் தங்களுக்கு விற்றுவிடும்படி நாபோத்திடம் கேட்டாள். நாபோத் அமைதியாக இருந்தார். பின்னர் ஆகாப் வாய் திறந்து “எனக்கு உன்னுடைய திராட்சைத் தோட்டம் வேண்டும். அதை எனக்கு விற்றுவிடு” என்றான்.

ஆனால், நாபோத் “பரம்பரைச் சொத்தை விற்கக் கூடாது என்பது கடவுளாகிய யகோவாவின் சட்டம். எனவே, அரசனுக்கு மட்டுமல்ல; யாருக்கும் விற்கும் உரிமை எனக்குக் கிடையாது. நான் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவன்.” என்று கூறி தாத்தா, தந்தை வழியில் தனக்கு வந்துசேர்ந்த திராட்சைத் தோட்டத்தை விற்க மறுத்துவிட்டார்.

ஆகாபுக்குப் பயங்கரக் கோபம் வந்தது. அவர் வயிறுமுட்டக் குடித்துவிட்டு வருத்தத்துடன் தனது முகத்தைத் தொங்கப்போட்டபடி படுக்கையில் வீழ்ந்து புலம்பினார். தனது அறையைவிட்டு வெளியே வரவும் உணவு உண்ணவும் மறுத்துவிட்டார். பேராசை எனும் பொறியில் சிக்கிவிட்ட சிறு புழுவைப் போலத் துடித்தார்.

viviliyam-2jpg

கொலையும் செய்வாள் ராணி

கணவனின் நிலையைக் கண்ட இசபேல், “இஸ்ரவேலின் அரசனாக இருந்துகொண்டு இப்படி இருக்க வெட்கப்படவில்லையா; இந்த நாட்டில் நீங்கள் ஆசைப்பட்ட எதையும் எடுத்துக்கொள்ளலாம். நான் அந்தத் தோட்டத்தை உங்களுடையதாக எப்படி மாற்றுகிறேன் என்று பாருங்கள்” என்று கூறி, உடனடியாக அந்த நகரத்தில் வசித்த மூப்பர்கள் அனைவருக்கும் கணவனின் பெயரால் கடிதம் அனுப்பினாள்.

அதில் ‘நாபோத், அரசனையும் கடவுளைப் பழித்துப் பேசிவிட்டார். அவரை உடனடியாக கல்லால் அடித்துக் கொல்லுங்கள். இது அரசனின் உத்தரவு” என்று எழுதி தன் கையொப்பம் இட்டு அனுப்பினாள். அந்த மூப்பர்களும் எவ்வித விசாரணையும் இன்றி இசபேல் செய்தி அனுப்பியபடியே நாபோத்தைக் கல்லெறிந்து கொன்றார்கள்.

நாபோத் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்திக்கொண்ட இசபேல் கணவனிடம் வந்து “நாபோத் செத்துப்போய் விட்டான். இனி திராட்சைத் தோட்டம் உங்களுடையதாகிவிட்டது” என்று கூறினாள். நாபோத்தை மட்டுமல்ல கடவுள் மீதும் அவரது திருச்சட்டங்கள் மீதும் பற்றுக்கொண்டிருந்த பலரையும் அவள் கொன்றாள்.

தண்டிக்கப்பட்ட ராணி

அபகரித்த எத்தனையோ சொத்துக்கள் இருந்தும் ஆகாப் அவற்றை அனுபவிக்க முடியாமல் செத்துப்போனார். கணவன் இறந்தது பற்றி இசபேல் கவலைப்படவில்லை. ஆகாப்புக்குப்பின் அவருடைய மகன் யோராம் அரசனாக ஆனார். இப்போது இசபேலையும் அவளுடைய வாரிசுகளையும் தண்டிப்பதற்கு யெகூ என்பவரைக் கடவுள் அரசராகத் தேர்ந்தெடுத்தார். அவர் தனது படைகளைத் திரட்டிக்கொண்டு இஸ்ரவேல் அரண்மனைக்கு வந்துகொண்டிருந்தார். யெகூ வருவதைத் தெரிந்துகொண்ட இசபேல், தன் கூந்தலை வாரிப் பின்னிக்கொண்டு, சாயங்கள் பூசித் தன்னை அழகுபடுத்திக்கொண்டாள்.

பிறகு, உப்பரிகையில் ஒய்யாரமாக நின்றபடி யெகூவுக்காகக் காத்துக்கொண்டிருந்தாள். யெகூவின் ரதம் வந்து நின்று அவர் கீழே இறங்கியதுமே அவரிடம் பெருங்குரலுடன் கோபமாகக் கத்தினாள். யெகூ பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அவளது பணியாட்களிடம், “அவளைக் கீழே தள்ளுங்கள்!” என்று யெகூ கணீர் குரலில் உத்தரவிட்டார். அவர்கள் மறுப்பேதும் கூறாமல் அவளை அங்கிருந்து கீழே தள்ளிவிட்டார்கள். அவள் கீழே விழுந்து செத்துப்போனாள். ‘பேராசையோடு சம்பாதித்த சொத்து, கடைசியில் அவனுக்கு ஆசீர்வாதமாக இருக்காது.” என்ற நீதிமொழிக்கு ஏற்ப அந்தக் கெட்ட ராணியின் முடிவு இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x