Last Updated : 01 Nov, 2018 11:01 AM

 

Published : 01 Nov 2018 11:01 AM
Last Updated : 01 Nov 2018 11:01 AM

மன்னரின் நோய் தீர்த்த அடைக்கல அன்னை

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சியில் உள்ள அடைக்கல அன்னை புடவை கட்டித் தமிழ்ப் பெண்ணாக காட்சி தருகிறார். ஏலாக்குறிச்சியை உள்ளடக்கிய அரியலூர் பகுதியை 18-ம் நூற்றாண்டில் ஆண்டுவந்த அரங்க மழவராயரின் தீராத முதுகுபிளவை நோயைத் தீர்த்த புகழும் அடைக்கல அன்னைக்கு உண்டு.

மன்னர் மழவராயர் தன் நோயை தீர்த்துவைக்குமாறு அடைக்கல அன்னை ஆலயத்துக்குச் சென்று பிரார்த்தித்து வந்தார். அந்தச் சமயத்தில் அந்த ஆலயத்தின் பங்குத் தந்தையாக இருந்த வீரமாமுனிவர், மன்னனின் தேவையறிந்து, “நீயல்லால் மன்னனின் நோயை யார் தீர்ப்பார்” என்று வேண்டினார். அத்துடன் சுட்டெரிக்கும் வெயிலில் மன்னரின் நோய்தீர்க்கும் பச்சிலையை தேடி சென்றார்.

அப்போது, ஆலயத்தின் அருகில் உள்ள மாதா குளத்தில் தண்ணீர் கொப்பளித்து வந்ததைக் கண்ட வீரமாமுனிவர், இதுதான் மன்னனின் நோயை தீர்க்க அடைக்கல அன்னை கொடுத்த மருந்து என்று கண்டார். கைத்துணியால் தண்ணீருடன் சேர்த்து சேற்றை எடுத்து மன்னனின் ராஜபிளவை கட்டியின் மீது தடவினார். இதையடுத்து, மன்னன் பூரணகுணமடைந்தார். நோயிலிருந்து விடுபட்ட மகிழ்ச்சியில் மன்னர் அடைக்கல அன்னை ஆலயத்துக்கு 175 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கினார்.

சர்வ மதத்தினர் வருகை

அடைக்கல அன்னை ஆலயத்தில் தங்களது நோயைத் தீர்க்க வேண்டி கிறிஸ்துவர்கள் மட்டுமன்றி அனைத்து மதத்தினரும் ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயம் சென்று மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.

இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் உயிர்ப்பு பெருவிழாவுக்கு பின்வரும் 2-வது சனிக்கிழமை கொடியேற்றமும், 3-வது சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஆண்டுப் பெருவிழா நடைபெறும். இதுவரை 287 ஆண்டு விழாக்களை இந்த ஆலயம் கண்டுள்ளது. இந்த விழாவில், தமிழகத்தில் பல மாவட்டங்களிலிருந்தும், இந்தியா மட்டுமன்றி இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டினரும் பங்கேற்கிறார்கள்.

எப்படிப் போகலாம்?

அரியலூரிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில் ஏலாக்குறிச்சி அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்குச் செல்ல தொடர்ச்சியாகப் பேருந்துகள் உள்ளன. மற்ற நகரங்களிலிருந்து ரயில் மூலம் அரியலூர், தஞ்சைக்கு வந்தால், அங்கிருந்து பேருந்துகள் உள்ளன.

அரியலூர்-தஞ்சாவூர் சாலையில் திருமானூரிலிருந்து 9 கி.மீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x