Published : 30 Aug 2018 10:40 AM
Last Updated : 30 Aug 2018 10:40 AM

தெய்வத்தின் குரல்: திரவியம், தேகம் இரண்டாலும்

பணக்காரர்கள் பரம தியாகிகளாக, தர்மகர்த்தாக்கள் மாதிரி, தங்கள் பணத்தைச் சமூகக் காரியங்களுக்காகத்தான் பிரயோஜனப்படுத்த வேண்டும் என்பதே நம் தர்மம். மனு, திருவள்ளுவர் நாளிலிருந்து காந்திவரை இப்படித்தான் சொல்லி வந்திருக்கிறார்கள். இது வாஸ்தவத்தில் நடந்தால் கம்யூனிஸம், ரெவல்யூஷன் எதுவுமே இல்லாமல் லோகமெல்லாம் சந்தோஷமாக சாந்தமாக இருக்கும். இதெல்லாம் எனக்குத் தெரியாமல் போகவில்லை.

ஆனாலும் அவர்கள் தாங்களாக தர்ம சிந்தையை வளர்த்துக்கொண்டு, பிரியப்பட்டு உபகாரம் செய்யத்தான் நாம் தூண்டுதலாகப் பிரசாரம் செய்ய வேண்டுமே தவிர, அவர்களைப் போய் நிர்ப்பந்தப்படுத்த வேண்டாம் என்று தோன்றியதால் சொன்னேன். பாதி சீரியஸாகவும் பாதி விளையாட்டாகவும் சொன்னேன்.

இன்னொன்றுகூட நான் விளையாட்டாகச் சொல்வதுண்டு. பொதுக் காரியம் செய்கிறவர்கள் இப்போது முதலில் இன்னின்னார் நிறைய உதவக்கூடும் என்று ‘லிஸ்ட்’ போட்டுக்கொண்டு அந்த வரிசைப்படி கலெக்ஷ்னுக்குப் போகிறார்கள் அல்லவா? இதில் அநேகமாக ஏமாற்றங்கள்தான் உண்டாகின்றன. நாம் ரொம்பவும் தாராளமாகக் கொடுப்பான் என்று நினைக்கிறவனுக்கு ஏதாவது சிரமமிருக்கிறது.

அல்லது மனமில்லை. கையை விரித்துவிடுகிறான். அல்லது மூக்கால் அழுதுகொண்டு கொடுக்கிறான். உடனே நமக்குப் பணியிலேயே உத்ஸாஹம் குறைந்துவிடுகிறது. அந்த ஆசாமியைத் தூற்ற ஆரம்பிக்கிறோம். இதற்குப் பதிலாக நான் என்ன சொல்கிறேன் என்றால், யாரார் நன்கொடை தர மாட்டார்கள் என்று தோன்றுகிறதோ அவர்களை ஒரு லிஸ்ட் போட்டுக்கொள்ளுங்கள், முதலில் இப்படிப்பட்டவர்களைப் போய்ப் பாருங்கள். அவர்கள் கையை விரித்துவிட்டால் அதற்காக நமக்கு மனம் தளரப் போவதில்லை.

ஏனென்றால் இது நாமே எதிர்பார்த்தது தானே? மாறாக, அவர்கள் ஏதோ கொடுத்தாலும் கொடுக்கலாம். சில நேரம் அள்ளியும் கொடுக்கலாம். இப்படிக் கொடுக்க நேரிட்டால் நமக்கு உத்ஸாஹம் கரைகடந்துவிடும்! பணியில் இன்னும் தீவிரமாக இறங்குவோம். இப்படி என் வார்த்தைப்படி, கொடுக்காமல் இருக்கக்கூடியவர்களின் லிஸ்டைப் போட்டுக்கொண்டு முதலில் அவர்களிடம் வசூலுக்குப் போய், அப்புறம் கொடுக்கக் கூடியவர்களைப் பார்த்தவர்கள், பிற்பாடு என்னிடம் வந்து ‘சைகலாஜிக’லாக இதில் தங்களுக்கு ரொம்பவும் திருப்தியும், உத்ஸாஹமும் உண்டானதாகச் சொல்லியிருக்கிறார்கள். யாசகக் கலையில் இப்படிப் பல ‘ட்ரிக்கு’கள் இருக்கின்றன!

எல்லோருமாக ஏற்க வேண்டும்

நான் சொல்ல வந்தது என்னவென்றால், ஏழையோ பாழையோ சமூகத்தில் உள்ள அத்தனை பேரும் ஒரு காலணா அரையணாவாவது போட்டு எல்லோருமாகச் சேர்ந்தே பொதுக் காரியங்களுக்கான செலவுகளை ஏற்க வேண்டும். பணக்காரன் பணம் மட்டும் கொடுத்துவிட்டு, சரீரத்தால் உழைக்காமலிருந்தான் என்று இருக்கக் கூடாது; ஏழை சரீரத்தால் மட்டும் உழைத்து விட்டுப் பணம் கொடுக்காமலிருந்தான் என்றும் இருக்கக் கூடாது. பணக்காரன் ரூபாய் தருவதும், ஏழை சரீர கைங்கர்யம் செய்வதும் பெரிய தியாகமில்லை.

பணக்காரன் ஏழைகளோடு வந்து நின்றுகொண்டு மண்வெட்டி எடுத்து வெட்ட வேண்டும்; ஏழை தன் கூழுக்கு ஒரு மிளகாய் வாங்கிக் கொள்வதற்குப் பதிலாக காலணா டொனேஷன் கொடுக்க வேண்டும். அதுதான் பெரிசு. சோஷியல் சர்வீஸ் பண்ணும்போதே பண்ணுகிறவர்கள் மனசில் உயர்ந்து வளர வேண்டுமானால் செலவு, உழைப்பு இரண்டிலுமே ஒவ்வொருத்தனுக்கும் பங்கு இருக்க வேண்டும். சிரமதானத்துக்கு பலஹீனர்கள் மட்டும் விதிவிலக்கு.

எனக்கு தெரிந்த ஒரு ப்ராமணர். இரண்டே இரண்டு தென்னை மரம் உள்ள பூமிதான் அவருக்கு ஆரம்பத்தில் இருந்தது. அதில் தானே மண்வெட்டி பிடித்து வேலை பண்ணினார். சாஸ்திரப் பிரகாரம் பண்ண வேண்டியது எதையும் இதற்காக விட்டுவிடவில்லை. காலையில் எழுந்து அக்னி ஹோத்ரம், பூஜை எல்லாம் செய்வார். அப்புறம் மண்வெட்டியும் கையுமாகப் போய் வேலை ஆரம்பித்து விடுவார். அந்த வேலை முடிந்த அப்புறம் மாத்யான்ஹிக ஸ்நானம் செய்து, பாக்கி கர்மாநுஷ்டானங்களும் பண்ணிவிட்டுச் சாப்பிடுவார்.

இப்படித் தன் கையாலேயே உழைத்து இரட்டைத் தென்ன மர பூமியைத் தென்னந் தோப்பாகவே மாற்றிவிட்டார் பசங்களுக்கு இப்படி நல்ல பூ ஸ்திதி தேடி வைத்தார். நல்ல விருத்தாப்யம் வந்த பிற்பாடும், எண்பது எண்பத்தைந்து வயசு வரைக்கும்கூடத் தோப்புக்குத் தினமும் போய்த் தன் கையால் வெட்டி கொத்தி வேலைசெய்வதை அவர் நிறுத்தவில்லை.

இப்போது திரவிய செள‌கர்யம் ஏற்பட்டு, இவர் உழைத்துத்தான் ஆக வேண்டும் என்று இல்லாவிட்டாலுங்கூட, “இந்தக் காரியம்தானே நமக்கு இத்தனை அபிவிருத்தியைத் தந்தது? இதை விடப்படாது” என்று சரீர உழைப்பில் பக்தி விஸ்வாசம் வைத்து சாகிறவரை பண்ணி வந்தார்.

அவர் சொந்த நிலத்தில் வேலை செய்து அடைந்த சந்தோஷத்தைவிட ஜாஸ்தியாகவே பொதுத்தொண்டுகளில் சரீரத்தைச் சிரமப்படுத்தி வேலை பண்ணுவதில் நிறைவு கிடைக்கும். பண்ணிப் பார்த்தால் தெரியும்.

கொஞ்ச நேரமாவது குளம் வெட்டுவது, ஆலயத்தில் நந்தவனம் வைப்பது என்கிற மாதிரி ஏதோ ஒன்றில் தேகத்தை ஈடுபடுத்த வேண்டும். கொஞ்சம் காசாவது இம்மாதிரி காரியங்களுக்குச் செலவழிக்க வேண்டும். ஏழை வித்யார்த்திக்கு ஒரு பலப்பம் வாங்கிக் கொடுக்கலாம்; நாலு பிச்சைகாரர்களுக்குக் கூழ் வார்க்கலாம்; மோர்த் தண்ணியாவது நம் செலவில் கொடுக்கலாம்.

எந்த ஆஃபீஸானாலும் ஃபாக்டரியானாலும் வாரத்தில் ஒருநாள் லீவ் இருக்கிறதல்லவா? பள்ளிக்கூடம், கோர்ட் முதலியவற்றில் வாரத்துக்கு இரண்டு நாள் லீவ்கூட இருக்கிறது. இந்த லீவ் நாட்களெல்லாம் பொதுத் தொண்டுக்கு என்றே பகவான் கொடுத்திருப்பது என்று நினைத்து, கூட்டாகச் சேர்ந்து சேவை செய்ய வேண்டும். மனம் மட்டும் இருந்துவிட்டால், செய்வதற்கு எத்தனையோ பணிகள் இருக்கின்றன.

( தெய்வத்தின் குரல் மூன்றாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x