Published : 04 Jul 2018 05:10 PM
Last Updated : 04 Jul 2018 05:10 PM

தெய்வத்தின் குரல்: தேவலோகம் அல்லது ஆத்ம ஞானத்துக்கு வழி

இந்த லோக வாழ்க்கையில் சந்தோஷம், துக்கம் இரண்டும் கலந்து கலந்து வருகின்றன. சிலருக்கு சந்தோஷம் அதிகமாக இருக்கிறது. சிலருக்குத் துக்கம் அதிகமாக இருக்கிறது. மனத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, எத்தனை துக்கத்திலும் சிரித்துக் கொண்டு சந்தோஷமாயிருப்பவர்கள் எங்கேயாவது அபூர்வமாக இருக்கிறார்கள். சந்தோஷப்பட எத்தனையோ இருந்தும் திருப்தியில்லாமல் அழுபவர்களோ நிறைய இருக்கிறோம். குறையிருக்கிறது என்றால் துக்கம் என்றுதான் அர்த்தம்.

தேவலோகம் நிரந்தர வாசஸ்தலம் அல்ல

இந்திரியங்களாலும் மனத்தாலும் சந்தோஷத்தை சதாவும் அனுபவித்துக் கொண்டிருக்கிற இடமே தேவலோகம். பாட்டு, கூத்து, கந்தர்வ கானம், ரம்பை-மேனகை நர்த்தனம், கல்பக விருக்ஷம், காமதேனு, நந்தவனம் எல்லாம் இருக்கிற உல்லாச பூமி அது. அங்கே சதா ஆனந்தம். ஆனால் ஆத்ம ஞானியின் சந்தோஷத்துக்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு. தேவலோகத்தில் இவனுக்கு சாச்வத வாசம் கிடைக்காது. ரொம்பப் புண்ணியம் பண்ணினால், அதற்கு பலனாக நல்லதான அடுத்த ஜன்மா தருவதற்கு முன்பு கொஞ்ச காலம் இவனுக்கு தேவலோக வாசம் கிடைக்குமே தவிர, தேவலோகத்திலேயே இவனுக்கு நிரந்தர வாசம் கிடைக்காது.

புண்ணிய பலனை இவன் அனுபவித்து விட்டான் என்று கணக்கு பார்த்தவுடன் இவனை ஸ்வாமி பூலோகத்துக்கே உருட்டி விட்டுவிடுவார். மனுஷ்யர்களாக இருந்து ரொம்பவும் நிறையப் புண்ணியம் செய்ததால் தேவர்களாகவே ஆகி தேவலோக வாசம் பெற்ற சிலரைப் பற்றியும் புராணங்களில் இருப்பது வாஸ்தவந்தான். ஆனால் தேவர்களுக்குமேகூட தேவலோகத்தில் நிரந்தர வாசமில்லை என்றும் அந்தப் புராணங்களே சொல்கின்றன. தேவர்களை சூரபத்மன் அடித்துத் துரத்தினான், மகிஷாசுரன் அடித்துத் துரத்தினான், இந்திரன் உள்பட தேவர்கள் பூலோகத்திலே வந்து திண்டாடினார்கள் என்றெல்லாமும் புராணத்தில் இருக்கிறது.

அதனால் தேவலோகத்தில் எப்பொழுதும் இருக்க முடிந்தால் சாச்வத சந்தோஷமாக இருக்கும் என்று hypothetical -ஆக வேண்டுமானால் சொல்லலாமே தவிர அப்படி யாரும் இருந்ததில்லை; இருக்கவும் முடியாது என்றுதான் தெரிகிறது.

இந்திரியத்தால் சந்தோஷம் என்கிறபோது வெளியிலே உள்ளவற்றை அநுபோகம் பண்ணுவதால்தான் அது கிடைக்கிறது. வெளியிலே இருப்பதை எப்படி எப்போதும் நம்மிடம் தக்க வைத்துக்கொள்ள முடியும்? அது கையை விட்டுப் போனாலும் போகும்தான். காமதேனுவும், கல்பக விருக்ஷமும், ஐராவதமும், இந்திராணியுமேகூட இந்திரன் கையை விட்டுப்போய், அவன் தனியாகத் தவித்த சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன.

ஆகையால் வெளியிலிருப்பதை சார்ந்திருக்கிற தேவலோக இந்திரிய சௌக்கியம் நிஜத்தில் சாச்வதமேயில்லை. வெளி-உள் என்று எதுவுமே இல்லாமல் ஆத்மாவிலேயே, ஸ்தித பிரக்ஞன் என்று பகவான் [கீதையில்] சொன்னது போல் ஆணி அடித்த மாதிரி ஊன்றி விடுகிறவனுக்குத்தான் சதானந்தம். இந்திரனின் ஆனந்தமும் இந்த ஆத்மானந்த மஹாசமுத்திரத்தில் துளியிலும் துளிதான் என்கிறார் ஆசார்யாள்.

யத் ஸெளக்யாம்புதி லேச லேசத இமே

சக்ராதயோ நிர்வ்ருதா –

(மநீஷா பஞ்சகம்)

இந்திரியங்களையும் மனத்தையும் பயிர்த்தண்டிலிருந்து ஈர்க்கை உருவுகிற மாதிரி உருவிப் போட்டுவிட்டு ஆத்மாவாகவே இருந்து விட்டால் இந்தச் சதானந்தம் கிடைப்பதாக உபநிஷத் சொல்கிறது. அதற்கு ரொம்பவும் தைரியம் வேண்டும். ‘சரீரம் நானில்லை, அதன் சுகதுக்கம் எனக்கில்லை’ என்று உயிரோடு இருந்து கொண்டிருக்கும்போதே அதைக் கிள்ளிப் போடுவதற்கு ரொம்பவும் தைரியம் வேண்டும். சித்த சுத்தி ஏற்பட்டாலொழிய இது வராது. சித்தம் சுத்தியாவதற்குத்தான் கர்ம அநுஷ்டானம். ஒரு ஜீவனை வேத மந்திரங்களால் இப்படி பரிசுத்தி பண்ணி, அந்த மந்திரங்களோடு சேர்ந்த காரியங்களில் ஈடுபடுத்துவதற்காகவே நாற்பது ஸம்ஸ்காரங்கள் இருக்கின்றன. அதாவது அத்வைத முக்திக்கு முதல்படியாக இவை உள்ளன.

அத்வைத முக்தி

இந்த கர்ம அனுஷ்டானத்தால் சித்த சுத்தியை சம்பாதித்துக்கொள்வதே லக்ஷ்யமாக இருக்க வேண்டும். அப்புறம் சுத்தமான அந்தஃகரணத்தைப் பெற்றுவிட்ட ஜீவன் ஆத்ம விசாரம் செய்து சதானந்தமான ஆத்ம சாக்ஷாத்காரத்தை அடையவேண்டும் என்பது ஸ்ரீ சங்கர பகவத் பாதர்களின் கொள்கை. இந்த லக்ஷ்யம் இருந்தும், கர்மாவைக் கடைசி மட்டும் விடாமலே, சந்நியாஸியாகி ஞான விசாரம் செய்யாமலே இறந்து போனால் அவன் பிரம்ம லோகத்துக்குப் போகிறான் என்றும், மஹாப் பிரளயத்தில் பிரம்மா பிரம்மத்தோடு ஐக்கியமாகிறபோது இவனும் அத்வைத முக்தி அடைந்துவிடுகிறான் என்றும் சொல்கிறார்.

இப்படிப்பட்ட லக்ஷ்யம் இல்லாமல் கர்மாவுக்காகவே கர்மா பண்ணினால் தேவலோகம் கிடைக்கும். ஆனால் அது நிரந்தரம் இல்லை. இருந்தாலும் பூலோக அவஸ்தையைவிட, கொஞ்ச காலமானாலும் தேவலோக வாசம் சிலாக்கியம்தானே? அங்கே அனுப்புவதும் சம்ஸ்காரங்கள்தான்.

(தெய்வத்தின் குரல் இரண்டாம் பகுதி)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x