Published : 03 May 2018 11:56 am

Updated : 06 Jun 2018 11:26 am

 

Published : 03 May 2018 11:56 AM
Last Updated : 06 Jun 2018 11:26 AM

ஆன்மா என்னும் புத்தகம் 02: விழுமியங்களைத் தேடிய அசாத்

02

 


ஸ்லாம் மார்க்கத்துக்கு ஐரோப்பியா வழங்கிய கொடையாகக் கருதப்படுபவர் முஹம்மது அசாத். இஸ்லாம் என்பது அமைதி, சகோதரத்துவத்தைப் போற்றும் வாழ்க்கைமுறை என்பதை அவர் வலியுறுத்தினார். லியோபோல்ட் வைஸ் என்ற பெயரில் 1900-ம் ஆண்டு ஓர் ஐரோப்பிய யூதர் குடும்பத்தில் போலந்தில் பிறந்தார். 26 வயதில் மார்க்கத்தைத் தழுவிய அவர், இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இஸ்லாமிய அறிஞராக அறியப்படுகிறார்.

1954-ம் ஆண்டு, அவர் எழுதி அமெரிக்காவில் வெளியான ‘தி ரோட் டு மெக்கா’ (The Road to Mecca) என்ற புத்தகம் இப்போது பெரிய அளவில் பிரபலமாக இல்லை. ஆனால், சென்ற நூற்றாண்டில் பலரது வாழ்க்கையில் ஆன்மிக மறுமலர்ச்சியை ஏற்படுத்திய படைப்பாக இந்தப் புத்தகம் இருந்துள்ளது. ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதராக 1952-ம் ஆண்டிலிருந்து பணியாற்றிய அவர், அந்தப் பதவியிலிருந்து விலகிய பிறகு, ‘தி ரோட் டு மெக்கா’ புத்தகத்தை எழுதினார்.

பயணங்களின் அற்புதம்

இந்தப் புத்தகம் முஹம்மது அசாத்தின் வாழ்க்கை வரலாறாக அறியப்பட்டாலும், அது முழுமையாக அவரின் வாழ்க்கைக் கதையாக மட்டுமே இல்லை. இந்தப் புத்தகம் 1932-ம் ஆண்டில் ஓர் இளைஞனாக அரேபியாவில் அவரது 23 நாட்கள் மெக்கா பயணத்தையும் வாழ்க்கை அனுபவங்களையும் பதிவுசெய்கிறது.

அசாத் தன் முதல் மத்திய கிழக்குப் பயணத்தை 22 வயதில் மேற்கொண்டார். தன் தாயின் சகோதரருடன் சிறிதுகாலம் வசிப்பதற்காக அவர் ஜெருசலேம் சென்றபோதுதான் அவருக்கு இஸ்லாமிய கலாச்சாரம் அறிமுகமானது. அந்தப் பயணத்துக்குப் பிறகு, அவர் ‘பிராங்பர்ட் ஸைட்டுங்’ செய்தித்தாளில் செய்தியாளராகப் பணியாற்றினார்.

அவர் செய்திக் கட்டுரைகளை எழுதுவதற்காக அரேபியா, பாலஸ்தீனம், சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், எகிப்து, லிபியா போன்ற நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். அவரது இந்தப் பயண அனுபவத்தில், அவர் இஸ்லாம் மார்க்கத்தின் மீதான தன் ஈர்ப்பையும் எப்படி இஸ்லாம் தன் வாழ்க்கைக்கான நம்பிக்கையையும் அளித்தது என்பதை விளக்கியிருக்கிறார்.

அரேபிய அரசருடன் சந்திப்பு

மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களின் மூலம் இஸ்லாமிய உலகத்தை அறிந்துகொள்ள முயன்றார். ஐரோப்பாவின் அறிவுச் சமூகம் கடவுளைவிட்டு வெகுதூரம் விலகிவந்துவிட்டதை உணர்ந்த அவர் இஸ்லாம் மார்க்கத்தில் தன்னை இணைத்துகொண்டார். சவுதி அரேபியாவின் தந்தையான அரசர் இபின் சவுத்தின் அரசவையில் அவர் ஆறு ஆண்டுகள் அங்கம்வகித்தார்.

அவருக்கும் அரசருக்கும் இடையில் இருந்த நட்பை இந்தப் புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார். அத்துடன், ‘பெதோயின்’ (Bedouin) அரேபியப் பழங்குடியினருடனான தன் அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஜெருசலேமில் இஸ்ரேலின் தந்தைகளில் ஒருவராகக் கருதப்படும் சைம் வைஸ்மானைச் சந்தித்ததைப் பற்றியும் அசாத் குறிப்பிட்டிருக்கிறார்.

அன்பைக் கற்பிக்கும் இஸ்லாம்

அவர் மத்திய கிழக்கு நாடுகளில் தான் செய்த பயண அனுபவங்களை மட்டுமல்லாமல் இஸ்லாத்தின் அர்த்தத்தையும் விளக்கியிருக்கிறார். மேற்கத்தியர்கள் இஸ்லாம் மார்க்கத்தின் மீது வைத்திருக்கும் தவறான அபிப்பிராயங்களுக்கான பின்னணிக் காரணங்களும் அலசப்படுகின்றன. இந்தப் புத்தகத்தை ஒரு சுயசரிதையாகவோ சாகசப் பயண அனுபவமாகவோ அவர் எழுதவில்லை.

மேற்கத்தியர்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தின் மீதிருக்கும் பிழையான பார்வையைப் போக்குவதற்காகவே எழுதியதாகக் குறிப்பிடுகிறார் அவர். மேற்கு, கிழக்கு என இரண்டு கலாச்சாரங்களையும் அறிந்ததால் இந்தப் புத்தகத்தை எழுதியதாகச் சொல்கிறார். “நான் ஓர் இஸ்லாமியன். ஆனால், நான் மேற்கத்திய கலாசாரத்தில் வளர்ந்தவன். அதனால், இரண்டு முனைகளின் அறிவார்த்தமும் கலாச்சாரமும் கூடிய மொழியில் என்னால் பேச முடியும்” என்று சொல்கிறார் முஹம்மது அசாத்.

அசாத், நபிகளின் போதனைகளே உலகைப் பல நூற்றாண்டுகளாக வழிநடத்திவருவதாகக் குறிப்பிடுகிறார். “ஒவ்வொரு இஸ்லாமிய ஆண், பெண்ணின் புனிதக் கடமையாக அறிவுத் தேடல்தான் இருக்க வேண்டும்” என்ற நபிகளின் மேற்கோளை வாழ்க்கை நெறியாக வலியுறுத்துகிறார் அசாத். ஒரு மனிதன் மாற்று மார்க்கத்தைத் தனக்குள் நிதானமாக உணர்வதையும் இலக்கியப் பார்வையையும் இந்தப் புத்தகம் பதிவுசெய்திருக்கிறது. இஸ்லாத்தைப் புரிந்துகொள்ள நினைப்பவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

முஹம்மது அசாத் (1900 – 1992)

இவரின் தலைசிறந்த படைப்பாக குரானின் ஆங்கில மொழிபெயர்ப்பு உரை ‘The Message of the Qur’an’ கருதப்படுகிறது. கவிஞர் முஹம்மது இக்பாலின் அறிவுரையின் பேரில் பாகிஸ்தானில் வசிக்கச் சென்ற அசாத், பாகிஸ்தான் அரசின் பல்வேறு தூதரகப் பொறுப்புகளை வகித்திருக்கிறார். இவரது நினைவாக வியன்னாவின் ஐ.நா. அலுவலகத்தின் நுழைவுச் சதுக்கத்துக்கு ‘Muhammad Asad Platz’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x