Last Updated : 24 Apr, 2024 05:08 AM

 

Published : 24 Apr 2024 05:08 AM
Last Updated : 24 Apr 2024 05:08 AM

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கண்ணகி கோயில் திருவிழா கோலாகலம்: தமிழக, கேரள பக்தர்கள் திரளாக பங்கேற்பு

மங்கலதேவி கண்ணகி கோயிலில் சுவாமி தரிசனத்துக்காக குவிந்த பக்தர்கள். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் கண்ணகி. படங்கள்: நா. தங்கரத்தினம்

குமுளி: சித்ரா பவுர்ணமியையொட்டி கண்ணகி கோயிலில் பச்சைப் பட்டு உடுத்தி, சிலம்பம் ஏந்தியபடி காட்சியளித்த கண்ணகியை தமிழகம், கேரள பக்தர்கள் ஏராளமானோர் வழிபட்டனர்.

தமிழக-கேரள எல்லையில், தேனி மாவட்டம் கூடலூரில் விண்ணேற்றிப்பாறை பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது. கூடலூர் அருகேயுள்ளபளியன் குடி வழியாக 6.6 கி.மீ. தொலைவு நடைபாதை வழியாகவும், கேரளாவின் குமுளி, கொக்கரகண்டம் வழியாக 14 கி.மீ. தொலைவு ஜீப் பாதை வழியாகவும் செல்லலாம். கோயில் அமைந்துள்ள இடம் வனப்பகுதி என்பதால்,சித்திரை மாத முழு நிலவன்றுமட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதன்படி, நேற்று நடைபெற்ற திருவிழாவையொட்டி அம்மனுக்கு உருக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கண்ணகி பிறந்த காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டு, கண்ணகிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், அம்மன் பச்சைப்பட்டு உடுத்தியும், சிலம்பை கையில் ஏந்தியும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தமிழக, கேரள பக்தர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு, வளையல், மங்கலநாண் வழங்கி வழிபட்டனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் மந்திரங்கள் உச்சரிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து பொங்கல் வைத்தல், பால் குடம் எடுத்தல், அட்சயபாத்திரத்தில் உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், கண்ணகியின் சிறப்பைக் கூறும் வகையில் வில்லுப்பாட்டு உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இரு மாநிலங்களைச் சேர்ந்த வனம், சுகாதாரம், தீயணைப்பு, காவல் துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஒவ்வோர் ஆண்டும் கேரள வனப் பாதையிலேயே பக்தர்கள் அதிக அளவில் செல்வதால், அம்மாநில அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். எனவே, தமிழகத்தின் வழியே உள்ள நடைபாதையை அகலப்படுத்தி ஜீப்களை இயக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x