Last Updated : 29 Jan, 2018 01:11 PM

 

Published : 29 Jan 2018 01:11 PM
Last Updated : 29 Jan 2018 01:11 PM

சந்திர கிரகணத்தில் ‘பட்டம்’ ஸ்லோகம்! எட்டு நட்சத்திரக்காரர்களே... கவனம்!

சந்திர கிரகணத்தின் போது எட்டு நட்சத்திரக் காரர்கள், அவசியம் கோயிலுக்குச் சென்று பெயர் நட்சத்திரம் சொல்லி, அர்ச்சனை செய்து வழிபடவேண்டும். அதேபோல் சந்திர கிரகணத்தின் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் குறித்தும் பட்டம் கட்டிக் கொண்டு, கிரகண நேரத்தைக் கடப்பதும் குறித்தும் விவரிக்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

வருகிற 31.1.18 புதன்கிழமை அன்று, சந்திர கிரகணம். மாலை 6.22 முதல் இரவு 8.42 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறுகிறது. சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் சந்திப்பதே கிரகணம் எனப்படுகிறது.

பொதுவாகவே, கிரகண வேளையின் போது ஆன்மிக விஷயங்களில் மட்டுமே ஈடுபடுவது ஆயிரம் மடங்கு பலன்களைத் தந்தருளும் என்கிறது சாஸ்திரம். அதேபோல், கிரகணம் தொடங்குவதற்கு முன்னதாக, வீட்டில் உள்ள தண்ணீர்க் குடம், உணவுப் பாத்திரங்கள் ஆகியவற்றின் மீது தர்ப்பையை வைத்துவிட்டால், எந்தக் கதிர்வீச்சுகளும் அவற்றை நெருங்காது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

அதேபோல், கிரகணம் முடிந்ததும் நீராட வேண்டும். முன்னதாக கிரகணம் தொடங்குவதற்கு ஒருமணி நேரம் முன்னதாகவோ கிரகணம் முடிந்து ஒருமணி நேரம் பின்னதாகவோ உணவு எடுத்துக் கொள்ளலாம். இந்த வேளையில், அதையும் இதையும் என வீட்டில் உள்ள பொருட்கள் எதையும் தொடாமல், இறை வழிபாட்டில் மட்டுமே கவனம் செலுத்துவது, மனதில் இன்னும் இன்னுமான தெளிவைத் தரும். இருக்கிற குழப்பத்தில் இருந்து நம்மையும் நம் மனதையும் விடுவித்து பயத்தையெல்லாம் விலக்கிவிடும் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

இன்னொரு முக்கியமான விஷயம்... பொதுவாகவே கிரகணம் முடிந்ததும் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, அனைத்து நட்சத்திரக் காரர்களும் அர்ச்சித்து, சிவனாருக்கு வில்வம் வழங்கி, செவ்வரளி மாலைகள் அணிவித்து பிரார்த்தனை செய்து கொள்வது ரொம்பவே நல்லது. குறிப்பாக, ஆயில்யம், பூசம், புனர்பூசம், மகம், அனுஷம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரக்காரர்கள், கிரகணம் முடிந்ததும் அவசியம் அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும். அதேபோல், தங்களின் பெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சித்து பிரார்த்தனை செய்து கொள்ளவேண்டும் .

அதேபோல், கிரகணத்தின் போது, ஜபம் செய்து கொண்டிருக்கலாம். தியானம் செய்து கொண்டிருக்கலாம். தெரிந்த ஸ்லோகங்களைச் சொல்லிக் கொண்டிருக்கலாம். விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் என பாராயணம் செய்து கொண்டிருங்கள்.

அதேபோல,

யோஸெள வஜ்ரதாரோ தேவ; ஆதித்யானாம் ப்ரபுர்தப;

ஸஹஸ்ரநயன: சந்த்ரக்ரஹ பீடாம் வ்யபோஹது

எனும் ஸ்லோகத்தை, முடிந்தவரை சொல்லலாம். அல்லது இந்த ஸ்லோகத்தை ஒரு பேப்பரில் எழுதி, அதை நூலில் கோர்த்து, நெற்றியில் பட்டம் போல் கட்டிக் கொள்ளலாம். அல்லது ஸ்லோகம் எழுதிய பேப்பரை, கிரகண வேளையில், கையில் வைத்திருக்கலாம். இது கிரகண வேளையில் நம்மைக் காக்கும் சக்தி கொண்ட ஸ்லோகம்.கிரகணம் முடிந்ததும், வெற்றிலை, பாக்கு, தட்சிணை வைத்து ஆச்சார்யருக்கு சமர்ப்பிக்கவும்.

மேலும் அரிசி, நல்லெண்ணெய் முதலானவற்றை தானம் தருவது மிகுந்த பலனையும் புண்ணியத்தையும் தந்தருளும் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x